உலகம் முழுவதும் இலவச வைஃபை... 4000 சாட்டிலைட்டுகளுடன் களமிறங்கும் எலான் மஸ்க்! | Elon Musk Plans To Give Free Wi-Fi Worldwide In 5 Years

வெளியிடப்பட்ட நேரம்: 06:59 (15/02/2018)

கடைசி தொடர்பு:20:41 (15/02/2018)

உலகம் முழுவதும் இலவச வைஃபை... 4000 சாட்டிலைட்டுகளுடன் களமிறங்கும் எலான் மஸ்க்!

“எனக்கு Paypal மூலம் கிடைத்த தொகை 180 மில்லியன் டாலர்கள். அதில் 100 மில்லியன் டாலர்களை SpaceX நிறுவனத்திலும், 70 மில்லியன் டாலர்களை டெஸ்லா நிறுவனத்திலும் முதிலீடு செய்து விட்டேன். மீதமுள்ள 10 மில்லியன் டாலர்களை சோலார் நகரம் கட்டமைக்கப் பயன்படுத்தி வருகிறேன். இதரச் செலவுகளுக்குக் கடன் வாங்கிக்கொண்டிருக்கிறேன்” என்று கூலாகச் சொன்னவர் எலான் மஸ்க். எல்லா விஷயங்களிலும் புதுமையைப் புகுத்துவதுதான் இவரின் கொள்கையே! அதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயார்.

எலான் மஸ்க்

டெக்னாலஜி இவரைத் தத்தெடுத்துக் கொண்டதா, இவர் டெக்னாலஜியை தத்தெடுத்துக் கொண்டாரா எனப் புரியாத வகையில், நிஜ வாழ்க்கையில் ஓர் அயர்ன் மேன் போலவே இருக்கிறார். விண்வெளியில் ஒரு செயற்கைக்கோளைச் செலுத்த உதவும் ராக்கெட்கள் தங்கள் பணியைச் செய்தவுடன் ஏன் அழிந்து போக வேண்டும்? அதை மீண்டும் மற்ற செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த பயன்படுத்தலாமே, என்று இவர் யோசிக்க, அதற்குச் செயற்கைக்கோளிலிருந்து பிரியும் ராக்கெட்கள் சரியாகத் தரையிறங்க வேண்டுமே என்று கூறினர். அப்படி வேலை முடிந்தவுடன் தரையிறங்கும் ராக்கெட்களை பல போராட்டங்கள், பல தோல்விகளுக்குப் பிறகு உருவாக்கினார். தற்போது அதைப் பெரியளவில், உலகிற்குச் செய்தும் காட்டியுள்ளார்.

டெஸ்லா மின்சார கார், டிரக், சோலார் நகரம், விண்வெளி ஆராய்ச்சிகள் எனப் புதிய முயற்சிகளின் வரிசையில், தற்போது உலகம் முழுவதிற்கும் இலவச வைஃபை என்பதும் சேர்ந்துள்ளது. இந்தத் திட்டம் சில வருடங்களுக்கு முன்பிருந்தே பேசப்பட்டு வந்தாலும், தற்போது இதை நிஜமாக்க முழு மூச்சுடன் களமிறங்கியுள்ளார் எலான். முதற்கட்டமாக, சென்ற மாதம், தன் SpaceX நிறுவனத்தைக் கொண்டு, இதை நிறுவுவதற்கான ஆரம்பக் கட்டத் திட்டத்தை மத்திய தொலைத்தொடர்பு ஆணையத்திற்கு (Federal Communications Commission) சமர்ப்பித்துள்ளார்.

அதில், உலகம் முழுவதும் இலவச இன்டர்நெட் சேவையை வைஃபை தொழில்நுட்பம் மூலம் வழங்க நான்காயிரத்திற்கும் அதிகமான செயற்கை கோள்களைப் பூமியிலிருந்து விண்ணில் ஏவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதை தங்கள் நிறுவனத்தின் ஃபால்கன் 9 இரண்டு கட்ட ராக்கெட்கள் (Falcon 9 two-stage rockets) மூலம் சுலபமாகச் செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பயன்படுத்திய ராக்கெட்களையே திரும்பத் திரும்ப பயன்படுத்தி, நிறையச் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தலாம் என்பதால், இதைச் செய்ய முன்பை விடக் குறைந்த செலவே ஆகும்.

Falcon 9 ராக்கெட்

இந்தத் திட்டம் மட்டும் அங்கீகரிக்கப்பட்டால், எண்ணி ஐந்தே வருடங்களில் உலகம் முழுவதிற்கும் இலவச இன்டர்நெட் சேவையை அளிக்க முடியும். இந்த மாபெரும் திட்டத்தை செயல்படுத்த, முன்பிருந்தே தொழில்நுட்ப ஜாம்பவான்களான கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனங்களிடம் போட்டி இருந்தது. ஆனால், இதை நிஜமாக்க ஒரு வல்லமைமிக்க போட்டியாளராக எலான் தற்போது உருவெடுத்திருக்கிறார். காரணம், தற்போது விண்ணில் 4000 சாட்டிலைட்களை ஏவுவதற்குத் தேவையான வன்பொருள்கள் (hardware) SpaceX நிறுவனத்திடம் மட்டுமே உள்ளது. மற்றவர்கள் செய்ய இன்னும் கூடுதல் செலவாகும்.

எலான் மஸ்கின் இந்தக் கனவுத் திட்டம் நிறைவேறும் பட்சத்தில், உலகின் கடைக்கோடி கிராமங்கள், ஏன் சரியாக தொலைபேசி வசதியில்லாத இடங்களுக்குக் கூட இன்டர்நெட் வசதியைக் கொண்டு செல்ல முடியும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்