வெளியிடப்பட்ட நேரம்: 12:44 (17/02/2018)

கடைசி தொடர்பு:12:44 (17/02/2018)

`ஹுவாய், ZTE ஸ்மார்ட்போன்களைத் தவிருங்கள்..!’ - எச்சரிக்கும் அமெரிக்கா

'உங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து தகவல்கள் திருடப்படும் வாய்ப்புள்ளது' என்று யாராவது எச்சரித்தால் நம்புவீர்களா? அதையே ஓர் அரசாங்கமே கூறினால் உண்மையாக இருக்குமோ எனச் சந்தேகம் வரும். இப்படி ஒரு எச்சரிக்கையை செய்திருக்கிறது அமெரிக்க அரசாங்கம். அதைக் கேட்டு அமெரிக்க மக்கள்தான் நம்ப முடியாமல் இருக்கிறார்கள். அமெரிக்காவின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் எஃப்.பி.ஐ (FBI), சி.ஐ.ஏ (CIA)மற்றும் என்.எஸ்.ஏ (NSA) மற்றும் இன்னும் சில பாதுகாப்பு அமைப்புகள் சேர்ந்து ஹுவாய் மற்றும் ZTE ஸ்மார்ட்போன்களில் இருந்து தகவல்கள் திருடப்படும் வாய்ப்புள்ளதாகவும் எனவே, அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமென அமெரிக்க அரசிடம் தெரிவித்திருக்கின்றன. 

ஸ்மார்ட்போன்

புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்துவது வசதிகளைத் தருவது என ஹுவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றன.  சாம்சங், ஆப்பிளுக்கு அடுத்து அமெரிக்கர்களின் தேர்வாக இருப்பது ஹுவாய்தான். அது தவிர  மொபைல் சந்தையில் ZTE நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களும் கணிசமான அளவில் விற்பனையாகின்றன.

இப்போது, புலனாய்வுக் குழுவிற்கான செனட் குழுவிடம்  குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் சைபர் தாக்குதல்கள் நடத்தப்படும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு அமைப்பில் பிற நாடுகளின் அரசாங்கம், அல்லது நிறுவனங்களின் தலையீடு நிச்சயம் ஆபத்தானது அதே வேளையில் ஆராயப்பட வேண்டியது  என்று தெரிவித்திருக்கிறார்  எஃப்.பி.ஐ இயக்குநர் க்ரிஸ் ரே. தகவல் பாதுகாப்புத் தொடர்பாக விழிப்புஉணர்வோடு இருக்குமாறு  நாட்டில் இருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்

எஃப்.பி.ஐ இயக்குனர் க்ரிஸ் ரே

ஹுவாய் மீது இது போன்ற சர்ச்சைகள் எழுவது புதிதல்ல. ஏற்கெனவே ஹுவாயின் இதர தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்த அரசு நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் தடை விதித்திருந்தது.  இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் ஹுவாய் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் 170 நாடுகளில் அரசுகள் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாகவும், மற்ற நிறுவனங்களைவிட சைபர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. ZTE நிறுவனம் அமெரிக்க அரசின் விதிமுறைகளுக்குட்பட்டே மொபைல்களைத் தயாரிப்பதாகவும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடுமையாகக் கடைபிடிப்பதாகவும், எனவே, சைபர் தாக்குதல்கள் நடைபெற வாய்ப்புகள் குறைவு என்று தெரிவித்திருக்கிறது.

சீன நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு என்னதான் பிரச்னை

சீன மொபைல்

அமெரிக்கா மட்டுமின்றி உலக அளவிலும் மொபைல் சந்தையை ஆக்ரமித்திருப்பது சீன நிறுவனங்கள்தான். விலை குறைவு, வசதிகள் அதிகம் போன்ற காரணங்களால் மக்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் அரசாங்கங்கள் சீன மொபைல்களைப் பார்த்து சற்று பயப்படத்தான் செய்கின்றன. எங்கே தனது நாட்டின் ரகசியத் தகவல்கள் சீனாவிற்குத் தெரிந்து விடுமோ என்ற பயம்தான் காரணம். இதே காரணத்திற்காக சீனாவும் அமெரிக்காவைப் பார்த்து பயப்படத்தான் செய்கிறது. அரசாங்கத்தில் இருக்கும் உயர் பதவியில் இருப்பவர்கள் ஆப்பிள் மொபைல்களைப் பயன்படுத்துவதை முன்னரே தடை செய்த சீன அரசு அவர்களை அந்த நாட்டின் நிறுவனங்கள் தயாரித்த ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியது. இந்தியாவிலும் சற்று காலம் முன்பு ஷியோமி மொபைல்கள் மீது இதே குற்றச்சாட்டு எழுந்தது, விமானப்படை அதிகாரிகள் ஷியோமி ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. தகவல்கள் கசியலாம் என்று அரசுகள் பயப்படுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏனென்றால் பெரும்பாலான சீன மொபைல் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் தகவல்களை சேமித்து வைக்கும் சர்வர்களை சீனாவில்தான் வைத்திருக்கின்றன. ஆனால், வசதிகளை மேம்படுத்துவதற்காக அடிப்படை தகவல்கள் மட்டுமே சேகரிக்கப்படுகின்றன என்பது சீன நிறுவனங்களின் வாதம்.

 


டிரெண்டிங் @ விகடன்