வெளியிடப்பட்ட நேரம்: 09:54 (20/02/2018)

கடைசி தொடர்பு:10:00 (20/02/2018)

கைதாகிய அகதி... நாடகம் என போராடிய பொதுமக்கள்... உண்மையைச் சொன்ன ஐபோன்! #GadgetTippedCrimes அத்தியாயம் 12

 

து 2016ம் ஆண்டு. அந்த இளைஞனின் பெயர் ஹுசைன். வயது 17 அல்லது 19 அல்லது 22 (ஏன் என்பதை முடிவில் பார்க்கலாம்). 2017ல் ஜெர்மானிய போலீஸால் கைது செய்யப்பட்டான் ஹுசைன். அவன் மீது 19 வயது பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்தது மற்றும் அவரைக் கொலை செய்த குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஹுசைன் விசாரணையில் சொன்ன தகவல்கள் போலீஸை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. 

gadget tipped crime

ஹுசைனின் சொந்த நாடு ஆஃப்கானிஸ்தான். அங்கிருந்து அகதியாக கிரீஸ் நாட்டுக்கு அகதியாக குடிபெயர்ந்திருக்கிறான் ஹுசைன். 2013ம் ஆண்டு அவன் மீது, கிரீஸ் நாட்டில் ஒரு பாறையின் உச்சியிலிருந்து ஒரு பெண்ணைத் தள்ளிவிட்டான் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தது. அதற்காக 10 ஆண்டுகள் சிறைதண்டனையும் ஹுசைனுக்கு விதிக்கப்பட்டிருந்தது. சில ஆண்டுகள் சிறையிலிருந்தவன், பரோலில் வெளி வந்திருக்கிறான். இனி கிரீஸ் நாட்டில் இருக்க முடியாது என எண்ணியவன் காலடி வைத்த இடம் ஜெர்மன். அங்குதான் இப்படியொரு குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறான். கிரீஸ் நாட்டு போலீஸூம் அவனைக் காணவில்லை எனத் தேடிவிட்டு அமைதியாக இருந்துவிட்டது. சர்வதேச அளவுக்கு அவனை பெரியாளாக நினைக்காததால் இந்தத் தகவலை மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளவும் இல்லை.

ஹுசைனின் கைது ஜெர்மனியை உலுக்கியது என்று கூட சொல்லலாம். ”இதனால்தான் அகதிகளுக்கு இடம் தரக்கூடாது எனச் சொல்கிறோம்” என ஒரு பக்கம் போராட்டங்கள். இன்னொரு பக்கம், “ஹுசைன்தான் குற்றவாளியா? என்ன ஆதாரம்” என்ற கேள்விகள். குற்றத்தை ஒருவாறு ஹுசைனே ஒப்புக்கொண்டு விட்டான். ஆனால், அவன் வாக்குமூலத்தில் சில குழப்பங்கள். அதனை அடிப்படையாக வைத்து தண்டனை விதிக்க முடியாது. தண்டனை தராவிட்டால் போராட்டக்காரர்கள் கலகம் செய்வார்கள். அது ஜெர்மன் காவல்துறைக்கு இக்கட்டான காலக்கட்டம். அப்போது அவர்களுக்கு கை கொடுத்தது ஹுசைனின் ஆப்பிள் ஐபோன். 

ஹுசைன்  அகதி

ஆப்பிள் மொபைல் என்ன சொன்னது என்பதற்கு முன் என்ன நடந்தது எனப் பார்த்துவிடுவோம்... நண்பர்களுடன் மது அருந்திவிட்டு ஹுசைன் தனியே திரும்பிக் கொண்டிருந்தான். டிராமில் வந்தவன் ஓரிடத்தில் இறங்கிவிட்டு, அங்கிருந்த சைக்கிள் ஒன்றைத் திருடியிருக்கிறான். சைக்கிளில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு கம்பத்தின் மீது மோதி நிலைத்தடுமாறி கீழே விழுந்திருக்கிறான். அந்தச் சமயத்தில் ஓர் இளம்பெண் ஹுசைனை நோக்கி சைக்கிளில் வந்திருக்கிறார். தான் கீழே விழுந்த கடுப்பில் இருந்தவனுக்கு அந்தப் பெண்ணை சைக்கிளில் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. அவரை அடித்திருக்கிறான். சத்தம் வராமலிருக்க வாயைக் கட்டி இழுத்துச் சென்றிருக்கிறான். அப்போதுதான் அவரது முகத்தைப் பார்த்திருக்கிறான். அழகான பெண் என்றதும் சபலம் தட்டியிருக்கிறது. அவரை வன்புணர்வு செய்திருக்கிறான். அந்தப் பெண் இறந்துவிட்டார் என்பதே அவனுக்கு தாமதமாகத்தான் தெரிந்திருக்கிறது. அடையாளத்தை அழிக்க சைக்கிளையும் அந்தப் பெண்ணையும் அருகிலிருந்த ஆற்றில் தூக்கி வீசியிருக்கிறான்.

இதுதான் நடந்தது. ஆனால், ஹுசைனின் வாக்குமூலத்தில் சில விஷயங்கள் இதோடு ஒத்துப்போகவில்லை. அதற்கான ஆதாரம் தேவை. அப்போது காவல்துறை கைக்கு சிக்கியது ஹுசைனின் ஐபோன். அதிலிருந்த health app உதவியது. ஐபோனின் டீஃபால்ட் அப்ளிகேஷனான health app ஒருவரின் நடவடிக்கைகளை சரியாக கவனித்து பதிவு செய்யும். அவர் நடக்கிறாரா, ஓடுகிறாரா, படியேறுகிறாரா எனத் துல்லியமாக கவனிக்கும். 

ஜெர்மன் நீதிமன்றம் முன் திரண்ட மக்கள்

படங்கள்: AP

ஹெல்த் ஆப் தந்த தகவலின்படி, ஹுசைனின் நடவடிக்கைகள் நேரத்துடன் சரிபார்க்கப்பட்டது. அதில், சடலத்தை இழுத்துச் சென்றதால் அவனது இதயத்துடிப்பு அதிகமானது கூட பதிவாகியிருந்தது. எவ்வளவு தூரம் அப்படி சென்றான், எப்போது படிக்கட்டுகள் ஏறினான், சைக்கிள் ஓட்டினான் என டைம்லைனே தயார் ஆனது. அவை எல்லாமே ஹுசைந்தான் குற்றத்தைச் செய்தான் என்பதை உறுதி செய்தது. 
இந்தக் குற்றத்தை மட்டுமல்ல, ஹுசைன் இன்னும் பல குற்றங்கள் ஜெர்மன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டான்.

ஹுசைன் கைதான போது தன் வயதையும் குறைத்துச் சொன்னான், அதன் மூலம் தண்டனை குறையுமென்று. ஆனால், சில சோதனைகளில் அவனுக்கு வயது குற்றம் நடந்தபோது 22 என்பது உறுதியானது. ஹுசைனும் ஒப்புக்கொண்டான். மேலும், ஹுசைன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவன் அல்ல; ஈரான் நாட்டைச் சேர்ந்தவன். ஈரான் நாட்டிலிருந்த போதே 14 வயதில் இன்னொரு பெண்ணையும் பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறான். இதையும் ஹுசைனேதான் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறான்.

இந்த வழக்கு நடந்தபோது நீதிமன்றம் முன் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். ஜெர்மானிய நீதித்துறையில் இந்த வழக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இவவ்ளவு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை முடித்துவைக்க கைகொடுத்தது டெக்னாலஜி! 

____________

முந்தைய அத்தியாயம்:

தஞ்சையில் ஒரு சின்னத் தெருவில் ஆரம்பித்த விசாரணை, போலீஸை திருச்சி வரை கொண்டு சென்றது. கார் திருட்டுக் குற்றம், கோடிகளில் புரளும் ஒரு மிகப்பெரிய நெட்வொர்க்கைக் காட்டிக்கொடுத்திருக்கிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்