தொழில்நுட்ப சிக்கல்கள்...தவிக்கும் வாடிக்கையாளர்கள்... என்ன செய்யப்போகிறது ஏர்செல்? #Aircel | Is Aircel going to shut down its operations?

வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (21/02/2018)

கடைசி தொடர்பு:20:16 (22/02/2018)

தொழில்நுட்ப சிக்கல்கள்...தவிக்கும் வாடிக்கையாளர்கள்... என்ன செய்யப்போகிறது ஏர்செல்? #Aircel

ரு டெலிகாம் நிறுவனம் தனது சேவையை நிறுத்த முடிவுசெய்தால், முறையாக ட்ராயிடம் தெரிவித்து, வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க்குகளுக்கு மாற உரிய அவகாசம் கொடுத்து அதன்பின்னரே சேவையை நிறுத்த வேண்டும். ஆனால், இந்தமுறை எல்லா நேரமும் பின்பற்றப்படுவதில்லை. இதனால் அவதிப்படுபவர்கள் என்னவோ வாடிக்கையாளர்கள்தான். தற்போது ஏர்செல் வாடிக்கையாளர்கள் கடந்த சில நாட்களாக இந்த சிக்கலை சந்தித்து வருகின்றனர்.

ஏர்செல்

சில மாதங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தன்னுடைய 2G சேவையை முழுமையாக நிறுத்திக்கொண்டது. ஆனால், இது முறையாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே பல இடங்களில் ரிலையன்ஸ் நெட்வொர்க் செயலிழந்தது. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகில் இருக்கும் ரிலையன்ஸ் சர்வீஸ் சென்டர்களுக்கு சென்றனர். அப்போது அவர்கள் சொன்ன பதில், ரிலையன்ஸ் விரைவில் தன் சேவைகளை நிறுத்தப்போகிறது என்பது. அதன்பின்னர்தான் பலரும் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி வசதியைப் பயன்படுத்தி வேறு நெட்வொர்க்குகளுக்கு மாறினர். 

1900 என்ற எண்ணுக்கு ஒரே ஒரு SMS அனுப்பி வாடிக்கையாளர்கள் PORT கோடை பெறமுடியும். இதைவைத்து பிற நெட்வொர்க்குகளுக்கு மாறிக்கொள்ளலாம். ஆனால், ரிலையன்ஸில் பல இடங்களில் முழுமையாக நெட்வொர்க் செயலிழந்துவிட்டதால், அதன் சேவையைப் பயன்படுத்தி போர்ட் கோடை பெறமுடியவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் சேவை கிடைக்கும் இடத்திற்கு சென்று அங்கிருந்து, SMS அனுப்ப வேண்டியிருந்தது. இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு பின்னர்தான் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்கிற்கே மாறமுடிந்தது. தற்போது இந்த அத்தனை சிக்கல்களையும் அப்படியே ஏர்செல் வாடிக்கையாளர்கள் அனுபவிக்கின்றனர்.

என்னதான் ஆச்சு ஏர்செல்லுக்கு?

ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் நிறுவனங்கள் அனைத்தும் 4G சேவைக்கு முழுமையாக மாறிவிட்ட நிலையில், ஏர்செல் 4G உரிமங்களைப் பெறமுடியவில்லை. இதனால் 4G சந்தையில் ஆதிக்கம் செலுத்தமுடியாமல், 2G மற்றும் 3G சேவையை மட்டுமே அளித்துவந்தது. ஆனால், பல்வேறு நிதிநெருக்கடிகள் ஏற்படவே கொஞ்சம் கொஞ்சமாக தன் சேவைகளை குறைத்துக்கொண்டது. 

mobile tower

இந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, இமாசலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய ஆறு இடங்களில் தன் சேவையை நிறுத்திக்கொள்ளப்போவதாக ட்ராயிடம் ஏர்செல் அறிவித்தது. இந்த எல்லைக்குள் இருக்கும் வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்குகளுக்கு மாறவும் ட்ராய் அறிவித்திருந்தது. அப்போதே இந்தியா முழுவதும் ஏர்செல் முழுமையாக தன் சேவைகளை நிறுத்தப்போவதாக வதந்திகள் பரவின. ஆனால், அந்நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு 'அப்படி எதுவும் இல்லை' எனக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டிருக்கும் சேவை தடையால் மீண்டும் அதே சந்தேகம் எழுந்துள்ளது.

என்ன சொல்கிறது ஏர்செல்?

தன் நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்கக்கோரி  தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் ஏர்செல் விண்ணப்பித்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த வாரம் ஏர்செல் CEO கைஸத் ஹீர்ஜி தன் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். கடுமையான நிதிப்பற்றாக்குறை இருப்பதால் ஏர்செல் கடினமான காலகட்டத்தில் இருப்பதாக அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஏர்செல் நெட்வொர்க் முழுமையாக செயலிழந்துள்ளது. இதனால் வேறு நெட்வொர்க்கிற்கு மாற முடியாமலும், ஏர்செல் எண்ணை பயன்படுத்த முடியாமலும் அதன் வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து புகார் அளிப்பதற்காக ஏர்செல் சேவை மையங்களுக்கு நேரில் சென்றால், அவையும் மூடப்பட்டிருக்கின்றன. அப்படியெனில் ஏர்செல் முழுமையாக தன் சேவைகளை நிறுத்திக்கொள்ளப்போகிறதா என அந்நிறுவனத்திடம் வாடிக்கையாளர்கள் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பினால், அதற்கு அந்நிறுவனம் அளிக்கும் பதில், "தங்கள் பகுதியில் சில தொழில்நுட்ப கோளாறுகளால் ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதனை சரிசெய்துவிடுவோம். நாங்கள் எங்களுடைய சேவைகளை நிறுத்தப்போவதில்லை. அப்படி இருப்பின் முன்கூட்டியே தங்களிடம் தெரிவிப்போம். தற்போதைக்கு கால் ஃபார்வார்டிங் ஆப்சன் பயன்படுத்திக்கொள்ளுங்கள் " என்பதுதான். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது ஏர்செல் தமிழகத்தில் தொடர்ந்து இயங்கவே விரும்புகிறது எனத்தெரிகிறது. ஆனால், சூழல் அதற்கு சாதகமாக இல்லை. 

திருச்சியில் மூடப்பட்டிருக்கும் ஏர்செல் ஷோரூம்கள்

தனது சேவையால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்ற ஒரு நிறுவனம் ஏர்செல். ஆனால், அந்த நம்பிக்கையை மோசமான செயல்பாடுகளின் மூலம் முழுமையாக சிதைத்துவருகிறது. ஒருவேளை முழுமையாக தன் சேவைகளை நிறுத்த ஏர்செல் முடிவு செய்திருந்தாலும்கூட, வாடிக்கையாளர்களிடம் இப்படி நடந்துகொள்வது சரியல்ல!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்