13 இலக்கமாக மாறுகிறதா புதிய மொபைல் எண்கள்... உண்மை என்ன? | What is M2M sim and its purpose

வெளியிடப்பட்ட நேரம்: 09:48 (22/02/2018)

கடைசி தொடர்பு:10:32 (22/02/2018)

13 இலக்கமாக மாறுகிறதா புதிய மொபைல் எண்கள்... உண்மை என்ன?

த்திய அரசின் GSM நெட்வொர்க் திட்ட அமைப்பு,  நோக்கியா மற்றும் ZTE நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதம்தான் சமீபத்திய வைரல். அதில் குறிப்பிடப்பட்டிருந்த விஷயம் இதுதான். 

"மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை பிப்ரவரி 8-ம் தேதி நடத்திய கூட்டத்தில் 13 இலக்க எண்களை Machine to Machine தொடர்புக்குப் பயன்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன்படி வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் இந்த 13 இலக்க M2M எண்கள் அளிக்கும் நடைமுறை அமல்படுத்தப்படவிருக்கிறது. இனிமேல் வழங்கப்படும் எண்களும் 13 இலக்கம் கொண்டதாகவே இருக்கவேண்டும். அனைத்துத் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் தங்களின் M2M சிம் கார்டுகள் மற்றும் கருவிகள் அனைத்தும் 13 இலக்கங்களைக் கொண்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தற்போது நடைமுறையில் இருக்கும் 10 இலக்க எண்களையும் 13 இலக்கமாக மாற்ற வேண்டும். இதற்கான பணிகளை அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து தொடங்க வேண்டும். டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் இவற்றை முடிக்க வேண்டும்...."

BSNL அனுப்பிய கடிதம்

இதுதான் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய அம்சம். இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் திடீரென வைரலானதும் பலரும் தற்போது புழக்கத்தில் இருக்கும் மொபைல் எண்கள் அனைத்தும் பாதுகாப்புக் காரணமாக 13 இலக்கமாக மாறப்போகிறது என நினைத்துவிட்டார்கள். சில ஊடகங்களும் அப்படியே செய்தியை வெளியிட்டுவிட்டன. ஆனால், இந்தக் கடிதத்தில் இருக்கும் தேதியே இதன் உண்மைத்தன்மையை சொல்லிவிடும். காரணம், இந்தக் கடிதம் அனுப்பப்பட்ட நாள் பிப்ரவரி 5-ம் தேதி. இத்தனை நாட்களுமா இது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது?

இதனை பி.எஸ்.என்.எல் அதிகாரிகளே தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். அதன்படி நம் மொபைல் எண்கள் எதுவும் இப்போதைக்கு மாறப்போவதில்லை. மெஷின் டு மெஷின் தகவல்தொடர்புக்காகப் பயன்படுத்தப்படும் எண்கள் மட்டுமே மாறவிருக்கிறது. 

அது என்ன Machine to Machine சிம்?

பொதுவான மொபைல் சிம் கார்டுகள்

இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் (IoT)-யில் பயன்படும் ஒரு தகவல் தொடர்பு சாதனம்தான் இந்த M2M சிம். இதைப்பற்றி பார்ப்பதற்கு முன்பு IoT குறித்து எளிமையாகப் பார்த்துவிடுவோம். இணையத்தின் உதவியுடன் இயந்திரங்கள் அனைத்தும் ஒரே நெட்வொர்க்கில் இணைந்திருப்பதுதான் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ். இதற்கு உதாரணமாக ஸ்மார்ட்ஹோமைச் சொல்லலாம். ஸ்மார்ட்ஹோமில் இருக்கும் ஸ்மார்ட்ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் விளக்குகள், ஸ்மார்ட்போன்கள், கணினிகள் என அனைத்து கேட்ஜெட்களும் இணையத்தின் உதவியுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும். இந்த ஸ்மார்ட்ஹோம் உதாரணத்தை ஸ்மார்ட் தொழிற்சாலை, ஸ்மார்ட் கல்லூரி, ஸ்மார்ட் அலுவலகங்கள் என எங்கு வேண்டுமானாலும் பொருத்திப் பார்க்கலாம். இப்படி இயந்திரங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதற்கு இணையம் தேவை. அந்த இணைய இணைப்பை பெறுவதற்கு சில கருவிகளுக்கு செல்லுலார் நெட்வொர்க்குகள் தேவை. அப்போதுதான் நம்முடைய ஸ்மார்ட்போன் போல அவையும் இணைய வசதியைப்பெற முடியும். அதற்காக உதவி செய்பவைதான் இந்த M2M சிம் கார்டுகள். இவற்றின் மூலமாக இயந்திரங்கள் தங்களுக்குள் டேட்டாவைப் பரிமாறிக்கொள்ளும். POS இயந்திரங்களையும் இதற்கு உதாரணமாகக் கூற முடியும்.

தற்போது நமக்கு தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்களான ஏர்டெல், பி.எஸ்.என்.எல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் இதுபோல இயந்திரங்களுக்கு இடையேயான தொலைத்தொடர்பு சேவைகளையும் வழங்கிவருகின்றன. அதற்குப் பயன்படுத்தும் சிம் கார்டுகளிலும் எண்கள் பயன்படுத்தப்படும். அதில்தான் இனிமேல் 10 இலக்கங்களுக்குப் பதில் 13 இலக்கங்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன. எனவே, இதற்கும் நாம் பயன்படுத்தும் மொபைல் எண்ணிற்கும் சம்பந்தமில்லை. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்