"இதுதான் பிரச்னை... 3 நாளில் பழைய ஃபார்முக்கு வந்துடுவோம்!” - ஏர்செல் தலைமை அதிகாரி #VikatanExclusive

ஏர்செல்


'கம்பெனியை மூடப்போறாங்களாம்', 'போர்ட் பண்ண முடியலையாம்', 'திவாலாயிடுச்சாம் - இப்படி எக்கச்சக்க செய்திகள் சமூகவலைதளங்களில் சுற்றிச் சுற்றி வருகின்றன. எல்லாமே ஏர்செல்லைப் பற்றித்தான். ஊரெங்கும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் வந்தாலும் உள்ளூர் அண்ணாச்சிக்கடையை யாரும் விட்டுத்தரமாட்டார்களே! அப்படியான நம்பிக்கையைத்தான் சாமானியர்களிடம் சம்பாதித்து வைத்திருந்தது ஏர்செல். இன்று என்னவாயிற்று அந்த நிறுவனத்திற்கு? மக்களைக் குடையும் அத்தனை கேள்விகளோடும் ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை அதிகாரி சங்கரநாராயணனை சந்தித்தோம்.

இந்த சிக்னல் சிக்கலுக்கு அடிப்படை காரணம் என்ன?
டெலிகாம் நிறுவனங்கள் எதுவுமே சொந்தமாக டவர்கள் வைத்துக்கொள்வதில்லை. டவர்கள் வைத்திருக்கும் நிறுவனத்திற்கு வாடகை செலுத்தி அதில் தங்களின் கருவிகளை பொருத்திக்கொள்வதுதான் எல்லா நிறுவனங்களுடைய செயல்முறை. ஒரே டவரை நான்கு, ஐந்து டெலிகாம் நிறுவனங்கள் கூட பயன்படுத்திக்கொள்ளும். ஏர்செல்லும் இப்படி வாடகை முறையில்தான் இந்தியா முழுக்க சேவை வழங்கி வந்தது. ஆறு மாதங்களுக்கு முன், கடும் போட்டி காரணமாக குஜராத், ஹரியானா, இமாச்சலபிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் சேவையை நிறுத்திவிடலாம் என முடிவு செய்தோம்.  அந்தக் கருவிகளைக் கொண்டு தமிழகத்தில் இன்னும் சிறப்பான சேவை வழங்கலாம் என்பது எங்களின் திட்டம். அதன்படி அங்கே சேவை நிறுத்தப்பட்டது.

சேவை நிறுத்தப்பட்டாலும் அந்நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்படி பணம் செலுத்தியாகவேண்டும். அது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தன. அதே நிறுவனத்தின் டவர்களை தமிழகத்திலும் பயன்படுத்திவந்தோம். பணம் செலுத்தும் பிரச்னையில் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் நிகழ, அந்நிறுவனம் சொல்லாமல்கொள்ளாமல் தமிழகத்தில் எல்லா டவர்களையும் செயலிழக்கச் செய்துவிட்டது.

இந்த வாடகைப் பிரச்னை குறித்து முன்பே வாடிக்கையாளர்களுக்கு சொல்லியிருக்கலாமே? குறைந்தபட்சம் கஸ்டமர் கேர் வழியாகவாவது அறிவுறுத்தியிருக்கலாமே?

சங்கர நாராயணன்இப்படி நடக்கும் என நாங்களே எதிர்ப்பார்க்கவில்லை. நெட்வொர்க் கட்டான அடுத்த நொடி ஏர்செல்லின் தலைமை அதிகாரிகளுக்கும் டவர் நிறுவனத்திற்கும் தீவிரப் பேச்சுவார்த்தைகள் நடக்க ஆரம்பித்துவிட்டன. அதில் ஓரளவு உடன்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக டவர்கள் செயல்பட தொடங்கியிருக்கின்றன. ஆயிரக்கணக்கான டவர்கள் என்பதால் கொஞ்சம் நேரமாகும்தான். அதிகபட்சம் மூன்றே நாட்களில் பழைய ஃபார்முக்கு வந்துவிடுவோம்.

மற்றபடி, ஏர்செல் அவுட்லெட்கள் மூடப்பட்டுவிட்டன என்பதில் துளியும் உண்மையில்லை. நிறைய இடங்களில் எங்கள் ஆட்களை உள்ளே வைத்து சிலர் ஷட்டரை சாத்தியிருக்கிறார்கள். அவர்களின் கோபத்தை புரிந்துகொள்ள முடிகிறது. டிஜிட்டல் யுகத்தில் சகலமும் நெட்வொர்க்கை நம்பித்தான் இருக்கிறது. அதே சமயம், எங்களால் முடிந்த அளவிற்கு நிலைமையை சீராக்க முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறோம். கஸ்மடர் கேரில் ஆயிரம் பேரிடம் விளக்கம் கேட்க லட்சம் போன்கால்கள் வந்தபடி இருக்கின்றன. அப்படியும் பொறுமையாக எல்லாருக்கும் நிலைமையை விளக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறோம்.

நெட்வொர்க் மாறும் போர்ட் வசதி ஏர்செல்லில் செயல்படவில்லை என புகார்கள் வந்தவண்ணம் இருக்கிறதே? 

ஒரு சின்ன லாஜிக்கை புரிந்துகொள்ளுங்கள். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 6 ஆயிரம் வாடிக்கையாளர்கள்தான் போர்ட் அவுட் முறையில் எங்கள் நெட்வொர்க்கில் இருந்து வெளியேறுவார்கள். மாதத்திற்கு சராசரியாக ஒரு லட்சம் பேர். ஆனால் இந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் பத்து லட்சம் போர்ட் அவுட் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இத்தனையையும் ப்ராசஸ் செய்ய எவ்வளவு நேரமாகும்? எங்கள் ஊழியர்களை இரவுபகலாக அந்தப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறோம். ஆனாலும் சுலபமாக, சீக்கிரமாக முடியக்கூடிய வேலை இல்லையே அது! வாடிக்கையாளர்களின் விருப்பங்களில் நாங்கள் தலையிடுவதில்லை. அதனால் வெளியேற நினைப்பவர்களை தடுக்கும் எண்ணமும் எங்களுக்கு இல்லை. 

ஏர்செல் திவாலாகிவிட்டதாக செய்திகள் வெளியாகிறதே! உண்மை நிலவரம் என்ன?

ஏர்செல் திவாலாகிவிட்டதாக ஊடகங்களில் வெளியாகும் தகவலில் உண்மை துளியும் இல்லை. என்.சி.எல்.டியிடம் எங்கள் நிறுவனத்தின் நிதி நிலைமையை ஆராயச் சொல்லி வேண்டுகோள்தான் விடுத்திருக்கிறோம். அவர்கள் ஆராய்ந்து பார்த்து அடுத்தகட்டமாக என்ன செய்யவேண்டும் என அறிவுறுத்துவார்கள். இது எல்லா நிறுவனங்களிலும் நடக்கும் செயல்முறைதான். வழக்கில் தீர்ப்பானால்தானே குற்றவாளி? வழக்கு தாக்கல் செய்தாலே குற்றவாளி எனச் சொல்வார்களா என்ன? அதனால் ஏர்செல் திவால் என வெளியாகும் தகவல்களை நம்பவேண்டாம்.

 

 

ஒருபக்கம் ஆறு மாநிலங்களில் சேவை நிறுத்தப்படுகிறது, மறுபக்கம் திவால் வதந்திகள். மக்கள் பயப்படத்தானே செய்வார்கள்?

திரும்பவும் சொல்கிறேன். ஏர்செல் மூடப்படும் தகவலில் துளியும் உண்மையில்லை. அப்படி எல்லாம் ஒரே நாளில் மூடிவிட முடியாது. ட்ராயிடம் லைசென்ஸை சரண்டர் செய்வது அவ்வளவு சுலபமல்ல. 90 நாட்களுக்கு முன்னதாக நோட்டீஸ் கொடுக்கவேண்டும். பின் நிறுவனம் மூடப்படுவதாக செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கவேண்டும். வாடிக்கையாளர்கள் அனைவரும் வேறு நெட்வொர்க் மாறுவதற்கு அவகாசம் அளிக்கவேண்டும். அதன்பின்னர் ட்ராய் அமைப்பு இறுதித் தணிக்கை செய்யும். பின்னர்தான் ஒரு டெலிகாம் நிறுவனம் மூடப்படும். ஒரே இரவில் விளையாட்டுத்தனமாக செய்துவிடும் காரியமல்ல இது!

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்னதான் சொல்ல நினைக்கிறீர்கள்?

தமிழகம் முழுக்க ஒன்றரை கோடி வாடிக்கையாளர்கள் எங்களுக்கு இருக்கிறார்கள். 24 ஆண்டுகளாக அவர்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக இருக்கிறோம். அந்த நம்பிக்கைதான் எங்களின் சொத்து. இந்தச் சின்ன சின்ன தடங்கல்களுக்கு வருந்துகிறோம். அதேசமயம் அவர்களின் நம்பிக்கையைத் தக்க வைக்க நிறைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் இந்தத் தடங்கலை மறந்து எங்களோடு இணைந்திருங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!