நிலவுக்கு முதல் செல்போன் நெட்வர்க்... வோடபோன் அசத்தல் முறை!! | Vodafone and Nokia to set up the first 4G network on the Moon

வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (01/03/2018)

கடைசி தொடர்பு:00:30 (01/03/2018)

நிலவுக்கு முதல் செல்போன் நெட்வர்க்... வோடபோன் அசத்தல் முறை!!

நிலவில் முதல் முறையாக செல்போன் நெட்ஒர்க் அமைக்கப்படவுள்ளதாக பிரபல செல்போன் நிறுவனமான வோடபோன் அறிவித்துள்ளது. இதன் மூலம் நிலாவிலிருந்து நேரலையாக படங்களையும் விடியோக்களையும் பூமியில் காணமுடியும் என்று அந்நிறுவனம் கூறுகிறது.

வோடபோன்

photo credit: vodafone

'பார்ட் டைம் சயின்டிஸ்ட்' என்ற ஜெர்மனியைச் சார்ந்த தனியார் அறிவியல் மற்றும் பொறியியல் அமைப்புடனும் நோக்கியா போன் நிறுவனத்துடனும் இணைந்து நிலாவில் முதன்முதலாக செல்போன் நெட்ஒர்க்கை வோடபோன் நிறுவனத்தின் ஜெர்மனி கிளை அமைக்கவுள்ளதாக நேற்று அந்நிறுவனம் தகவல் வெளியிட்டது. இதைப்பற்றி பேசிய வோடபோன் நிறுவனத்தின் ஜெர்மனி கிளை தலைமை நிர்வாக அதிகாரி, "இந்த புது முயற்சியில் எங்களுக்கு தொழில்நுட்ப பங்குதாரராக நோக்கியா நிறுவனமும், ஆடி கார் நிறுவனமும்  செயல்படவுள்ளது. ஒருகிலோவுக்கும் குறைவான எடையில் ஹார்டுவேர் ஒன்றை நோக்கியா நிறுவனம் தயாரித்துத் தரவுள்ளது. அதனைப் பயன்படுத்தி நிலாவிலுள்ள லூனார் ரோவருக்கும் பூமியிலுள்ள தலைமை நிலையத்திற்கும் நேரலையாக HD-யில் படங்களும் வீடியோக்களும் அனுப்ப உதவிகரமாக இருக்கும்" என்றார்.

இத்திட்டத்தைப் பற்றி நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வோடபோன் நடத்திய சோதனை ஓட்டத்தில் மூலம், பேஸ் நிலையத்திலிருந்து 1800 மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் பேண்ட்( FREQUENCY BAND) வரை பயன்படுத்தி நேரலை வீடியோக்களை உலகளாவிய மக்கள் காண வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளது .

'பார்ட் டைம் சயின்டிஸ்ட்' அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் பேசியபோது, "4ஜி LTE பயன்படுத்தப்படுவதால், பரிவர்த்தனையை மேற்கொள்ள குறைவான ஆற்றலே தேவைப்படும்" என்றார். இந்த மூன்று நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டு ஸ்பேஸ்-X நிறுவனத்தின் பால்கான் 9 ராக்கெட்டில் அடுத்த ஆண்டு ஏவப்படும் என்று அறிவித்துள்ளனர்.