கண்கள் போன்ற கேமரா...AR எமோஜி... அசத்தல் வசதிகளுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி S9 | samsung launches new smartphones galaxy s9

வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (01/03/2018)

கடைசி தொடர்பு:12:39 (01/03/2018)

கண்கள் போன்ற கேமரா...AR எமோஜி... அசத்தல் வசதிகளுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி S9

சாம்சங் கேலக்ஸி S9 மற்றும் கேலக்ஸி S9 பிளஸ்

பார்சிலோனாவில் நடைபெறும் Mobile World Congress 2018 என்ற நிகழ்ச்சியில் பல நிறுவனங்கள் புதிய மொபைல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. சாம்சங், நோக்கியா, சோனி எனப் பல முன்னணி மொபைல் நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டிருக்கின்றன. நோக்கியா இந்த நிகழ்ச்சியில் ஐந்து மொபைல்களை அறிமுகப்படுத்தியிருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S9 சீரீஸ் ஸ்மார்ட்போன்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதற்கு முன் வெளியான கேலக்ஸி S8 க்கும் இதற்கும் என்ன வித்தியாசம், புதிதாக என்ன வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங்?

கேலக்ஸி S9 மற்றும் கேலக்ஸி S9 பிளஸ்

கேலக்ஸி S9 பிளஸ்

ஏற்கெனவே கடந்த முறை கேலக்ஸி S8-ன் வடிவமைப்பிலேயே பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தது. எனவே, இந்த முறை கேலக்ஸி S9 வடிவமைப்பில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை சாம்சங். திரைக்கு அடியில் இருந்தும் பயன்படுத்தக்கூடிய ஃபிங்கர்பிரின்ட் சென்சாரை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என டெக் உலகம் எதிர்பார்த்துக் காத்திருந்தது. ஆனால், விவோ முந்திக்கொண்டது. கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் பின்புறமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை S8 போனில் இந்த சென்சார் கேமராவிற்கு இடதுபுறமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. அது பயன்படுத்துவதற்கு சற்று சிரமமாக இருப்பதாக விமர்சனங்கள் எழவே, இதில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் கேமராவிற்குக் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்புறமாக ஐரிஸ் ஸ்கேனர் இருப்பதால் கண் கருவிழி மூலமாகவும் மொபைலை அன்லாக் செய்ய முடியும்.

கேமரா

இந்த மொபைலின் முக்கிய அம்சமாக சாம்சங் குறிப்பிடுவது கேமராவைத்தான். முழுக்க முழுக்க கேமராவிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது சாம்சங். குறைந்த ஒளியில் புகைப்படம் எடுப்பதற்கு கேமராவில் APERTURE என்ற ஒரு விஷயம் மிகவும் முக்கியமானது. மொபைல் கேமராக்களில் இதுவரை இல்லாத வரையில் இந்த ஸ்மார்ட்போனில் dual Aperture என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறது சாம்சங். இந்தத் தொழில்நுட்பம் கிட்டத்தட்ட கண்களின் செயல்பாட்டை ஒத்திருக்கிறது. தேவைப்படும் ஒளிக்குத் தகுந்தவாறு கேமராவில் இருக்கும் துளையின் அளவும் வேறுபடும். இந்தப் புதியத் தொழில்நுட்பத்தால் f1.5 மற்றும் f 2.4 இரண்டு வேறுபட்ட APERTURE களில் கேமரா செயல்படும். எனவே, குறைவான ஒளியில்கூட தெளிவான போட்டோக்களை எடுக்க முடியும் என்று கூறுகிறது சாம்சங். ஸ்லோமோஷன் வீடியோவிலும் அசத்துகிறது கேலக்ஸி S9 கேமரா. நொடிக்கு 960fbs என்ற அளவில் காட்சிகளைப் பதிவு செய்கிறது. மேலும் ஸ்லோமோஷன் வீடியோக்களை எடிட் செய்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய முடியும். அந்த வீடியோவை வால்பேப்பராகவும்  வைத்துக்கொள்ளலாம்.

AR எமோஜி

ஆப்பிள் x வெளியாகும்போது பேஸ்ஐடி க்கு அடுத்ததாகப் பேசப்பட்ட விஷயம் அனிமோஜி. கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு வசதியை இதில் கொண்டு வந்திருக்கிறது சாம்சங். AR எமோஜி எனப்படும் இதன் மூலமாக ஒருவரது முக பாவனைகளை  அப்படியே பிரதிபலித்து எமோஜியாக மாற்றும். கேலக்ஸி S9 மாடல் 5.8 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இரண்டிலுமே ஆக்டாகோர்  Samsung Exynos 9810 ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.கேலக்ஸி S9 இல் 12 MP பின்புற கேமரா, 8 MP முன்புற கேமரா இருக்கிறது. 3000 mAh பேட்டரி இருக்கிறது. கேலக்ஸி S9 மாடல் 4 GB ரேம் மற்றும் 64 GB/256 GB இன்டர்னல் மெமரி என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும். கேலக்ஸி S9 பிளஸ் 6.2 இன்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கிறது. டூயல் 12 MP கேமராக்களும் 8 MP முன்புற கேமராவும் இருக்கிறது. 3500 mAh பேட்டரி இருக்கிறது. 6 GB ரேம் மற்றும் 64 GB ( விலை 46000 ) /256 GB (விலை 55000) இன்டர்னல் மெமரி என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும். இரண்டு மொபைல்களுமே வயர்லெஸ், பிக்ஸ்பி, மற்றும் நீர்புகாத் தன்மை  போன்ற வசதிகள் இருக்கின்றன. 3.5mm ஆடியோ ஜாக்கை இன்னும் அப்படியே வைத்திருக்கிறது சாம்சங்.    மார்ச் மாதம் முதல் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


டிரெண்டிங் @ விகடன்