30 நொடிகளில் முழு சார்ஜ் ஆகும் பேட்டரி... கைகொடுக்கும் கொரியத் தொழில்நுட்பம்!

 

ஸ்மார்ட்போன்

உலகம் படிப்படியாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அதில் முக்கிய பங்கு வகிப்பது மின்சாரத்தைச் சேமித்துவைக்கும் பேட்டரிகள்தாம். ஆனால், அவற்றின் சார்ஜிங் டைம் அதிகம் என்பது அதிலிருக்கும் முக்கியமான குறைபாடுகளில் ஒன்று. ஒரு பேட்டரி அதனுள்ளே ஆற்றலைச் சேமிக்க எடுத்துக்கொள்ளும் காலம்தான் சார்ஜிங் டைம். எடுத்துக்காட்டாக மொபைலில் இருக்கும் சிறிய அளவிலான பேட்டரியில் முழுவதுமாக சார்ஜ் ஏறுவதற்கே சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. மொபைலை சார்ஜரில் இணைத்துவிட்டுப் பயன்படுத்த நினைத்தாலும் சார்ஜிங் போர்ட்டுக்கு அருகிலேயே இருக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் சார்ஜரில் கனெக்ட் செய்த சில நிமிடங்களிலேயே 'Battery fully charged' என்ற செய்தி ஸ்க்ரீனில் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். கிட்டத்தட்ட அதைப்போல ஒரு தொழில்நுட்பத்தைத்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள் தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

முப்பதே விநாடிக்குள் முழுமையான சார்ஜிங்

மின்சாரம் தேவைப்படும், பேட்டரியைப் பயன்படுத்தும் சாதனங்கள் பெரும்பாலானவற்றில் லித்தியம் அயான் பேட்டரிகளே பயன்பாட்டில் இருக்கின்றன. தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் பேட்டரிகள் செயல்திறனில் கில்லியாக இருந்தாலும் சார்ஜிங் டைம் விஷயத்தில் கொஞ்சம் பின்தங்கித்தான் இருக்கின்றன. எல்லாவகைகளிலும் சிறப்பானதாகச் செயல்படக்கூடிய பேட்டரிகளை கண்டுபிடிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். தென் கொரியாவைச் சேர்ந்த கொரியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன பல்கலைக்கழத்தின் பேராசிரியர் ஜெங் ஹோ காங் (Jeung Ku Kang) மற்றும் அவரது குழுவினர் இணைந்து ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

பேராசிரியர் ஜெங் ஹோ காங்

இதன் மூலமாக ஒரு பேட்டரியை 30 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். பேட்டரிகளில் நேர்மின்முனை (anode) மற்றும் எதிர்மின்முனை (cathode)  என்ற இரண்டு பகுதிகள்தாம் மிக முக்கியமானவை. இவைதாம் செயல்திறனை முடிவு செய்கின்றன. இந்த பேட்டரியின் நேர்மின்முனை கிராபீனைப் (graphene) பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிராபீன் பாலிமர் இழைகளால் வலுவூட்டப்பட்டிருக்கிறது. இதன் எதிர்மின்முனை நிக்கல் ஆக்சைடால் உருவாக்கப்பட்டுள்ளது. நிக்கல் எதிர்முனையில் கிராபீன்கள் நானோ துகள்களாக மாற்றப்பட்டு அதில் இணைக்கப்பட்டுள்ளன. 

பேட்டரி

இதேபோன்ற தொழில்நுட்பம் இதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இதன் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதால் முந்தைய மாடல்களை விட 100 மடங்கு அதிகச்செயல்திறனைக் கொண்டிருக்கும். இந்த பேட்டரி நெகிழும் தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்பதும் இதன் சிறப்புகளில் ஒன்று. கைகடிகாரங்களில் பயன்படும் சிறிய அளவு பேட்டரியின் மாதிரியை உருவாக்கி பரிசோதித்து பார்த்த பொழுது 30 நொடிகளுக்குள் முழுமையான சார்ஜிங் ஆனது. இது ஒரு ஸ்மார்ட்போன் பேட்டரியை 12 நிமிடங்களில் சார்ஜ் செய்து விடும். "இது செயல்திறன் அதிகம் கொண்டது மட்டுமன்றி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும். அதே வேளையில் இதை எளிதாக தயாரிக்கவும் முடியும். கையடக்க கருவிகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் நிச்சயம் உபயோகமாக இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார் பேராசிரியர் ஜெங் ஹோ காங். ஏற்கெனவே சில மொபைல் நிறுவனங்கள் வளையும் திரைகொண்ட ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டன. இதுபோன்ற புதிய பேட்டரிகள் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி செயல்திறனில் நிச்சயம் மாற்றம் ஏற்படுத்தும் என உறுதியாகக் கூறலாம். எதிர்காலத்தில் ஒரு வேளை இந்தத் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டால் ஸ்மார்ட்போன் சார்ஜரில் கனெக்ட் செய்திருக்கும் நேரம் இன்னும் குறையக்கூடும்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!