Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கணினி வைரஸ்கள்... மூன்றாம் உலகப்போரில் வல்லரசுகளின் ஆயுதம் இதுதானா?

மூன்றாம் உலகப்போர் போல ஒன்று துவங்க இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அது போர்க்களத்தில் நடைபெறாது. எதிரிகள் யாரென்று கணிக்க முடியாத அளவிற்கு முகமூடி அணிந்துகொண்டு நிற்க ஏதுவான சைபர் களத்தில்தான் அது அரங்கேறவிருக்கிறது. ஆம்! அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. எவ்வளவு பெரிய தீயும் சிறிய கங்கிலிருந்துதான் தொடங்குகிறது. ஆஸ்திரிய இளவரசரை செர்பிய இளைஞன் சுட்டுக்கொன்றான் என்ற சிறிய தீப்பொறியில், இரண்டு சிறிய நாடுகளுக்குள் யுத்தம் ஏற்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தை பல வல்லரசு நாடுகள் தங்கள் பகையைத் தீர்த்துகொள்ளவதற்காகத் தலையிட அது முதலாம் உலகப்போராக மாறிப்போனது.

சைபர் அட்டாக் வைரஸ்

இன்றும் சில வல்லரசு நாடுகளுக்கு அனைத்து நாடுகளையும் தன் நிழலின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் போர் என்று வந்தால் இரு நாடுகளுக்கும் ஏற்படும் அழிவு மிகக் கடுமையாக இருக்கும் என்பதை எண்ணி அமைதி காக்கின்றன. ஆனால், மறைமுகமாக வளர்ந்துவரும் நாட்டை வீழ்த்த என்ன செய்ய வேண்டுமோ அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அழிப்பது. இது நவீன யுகம். பொருளாதாரத்தை அழிக்கப் பெரிதாகவெல்லாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை. ஒரு கம்ப்யூட்டார் வைரஸே ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றியமைக்கப் போதுமானதாக இருக்கிறது. அப்படி ஒரு தாக்குதல்தான் ஈரானின் மீது நடத்தப்பட்டது (படுகிறது). 

அனைத்து நாடுகளுக்குமே அரபு நாடுகளின் மீது ஒரு கண் உண்டு. வேறு எந்தவிதமான இயற்கை வளங்களும் இல்லாத நிலையிலும், எண்ணெய் வளங்களை வைத்தே அவை பொருளாதாரத்தில் திமுதிமுவென வளர்ந்து நிற்கின்றன. உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதே கச்சா எண்ணெய்யாகத்தான் இருக்கிறது. இது யாருடைய கண்களையோ உறுத்த ‘ஸ்டக்ல்நெட்’ (Stuxnet) என்ற வைரஸ் ஈரான் நாட்டின் பல ஆலைகளுக்குள்ளும் புகுத்தப்பட்டது. இந்த வைரஸின் முக்கிய இலக்குகளே ‘ப்ரோக்கிராமபிள் லாஜிக் கன்ட்ரோலர்களை’ (programmable logic controller) தாக்கி அதன் செயல்களை முடக்குவதுதான்.  பெரும்பாலான ஆலைகள் இதைக்கொண்டு தான் இயங்குகின்றன. இந்த பி.எல்.சி களின் வேலையே ஆலைகளில் இருக்கும் இயந்திரங்களுக்குக் கட்டளைகளைப் பிறப்பிப்பதுதான். ஈரான் நாட்டில் இயங்கிவரும் அனைத்து எண்ணெய் ஆலைகளிலும் இந்தத் தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த வைரஸை அதில் செலுத்துவதன் மூலம் அந்த இயந்திரங்களின் செயல்பாடுகளை இந்த வைரஸினால் கட்டுப்படுத்த முடியும். அப்படிதான் மெதுவாகச் சுழலும் ‘சென்ட்ரிப்யூஜ்’களை (centrifuge) சராசரிக்கும் அதிகமாகச் சுற்ற வைத்துப் பாதிப்புகளை ஏற்படுத்தியது இந்த வைரஸ்.

சைபர் அட்டாக் வைரஸ்

மற்றுமொரு பிரச்னை என்னவென்றால் இந்த வைரஸ் தாக்கியிருக்கிறது என்று தாக்கப்பட்டிருக்கும் கணினி அமைப்பில் கண்டுபிடிக்க முடியாது. இந்த வைரஸ் 2010-ம் ஆண்டே தன் நாசவேலையைத் துவக்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்துதான் இந்த நாச வேலையை ஈரானுக்கு எதிராகச் செய்தன எனச் சொல்லப்படுகிறது. எனினும் அமெரிக்காவும் இஸ்ரேலும் இதனைத் தொடர்ந்து மறுத்து வருகின்றன. இந்த வைரஸ்தான் உலகில் கம்ப்யூட்டர் கோடிங்காலேயே செய்யப்பட்ட முதல் ஆயுதம். இந்த வைரஸினால் இது வரை ஆறு நாடுகளே மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அதில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம். ஈரானில் அது 60 சதவிகிதம் பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது. அமெரிக்கா ஆறாவது இடத்திலும் பாகிஸ்தான் ஏழாவது இடத்திலும் உள்ளன.

மூன்றாவது உலகப்போர் என்று ஒன்று நடக்கும் என்றால் அதன் தொடக்கம் இணையத்தின் மூலமாகத்தான் இருக்கும். டெக்னாலஜியைத் தவறாகப் பயன்படுத்துதல் என்பது புலி வாலைப் பிடிப்பது போன்றது. யார் பிடித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை, யாரைக் கடிக்கப்போகின்றது என்பதும் தெரியவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ

Advertisement