வெளியிடப்பட்ட நேரம்: 10:34 (15/03/2018)

கடைசி தொடர்பு:10:34 (15/03/2018)

டிஸ்ப்ளே, பேட்டரி, டிசைனில் கலக்கும் ரெட்மி ஆர்மியின் புது வரவு! #Redmi5

ரெட்மி 5

தனது பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆர்மியில் புதிதாக ரெட்மி 5  என்ற ஸ்மார்ட்போனை சேர்த்திருக்கிறது ஷியோமி. கடந்த வருடம்  வெளியான பெரும்பாலான ஸ்மார்ட்போன்களின் அப்டேட் வெர்ஷன்களை ஏற்கெனவே அறிமுகப்படுத்திவிட்டது. இதற்கு முன்பு வெளியான ரெட்மி 4 பட்ஜெட் செக்மென்டில் ஹிட்டடித்த மாடல். அதன் அப்டேட் வெர்ஷன்தான்  ரெட்மி 5. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கெனவே கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. இரண்டு மாதங்கள் கழித்து தற்போழுது இந்தியாவில் வெளியாகியிருக்கிறது.

ரெட்மி 5

ரெட்மி 4-உடன் ஒப்பிடும்பொழுது வடிவமைப்பு, கேமரா, மற்றும் செயல்திறனில் பெரிய அளவில் மாற்றம் செய்திருப்பதாகக் கூறுகிறது ஷியோமி. மொபைல் சந்தையில் ட்ரெண்டிங்கில் இருக்கும் விஷயத்தை பட்ஜெட் ஸ்மார்ட்போனில் கொடுப்பதைத் தொடக்கத்தில் இருந்தே ஷியோமி கடைப்பிடித்து வருகிறது. அதுபோல தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் 18:9 டிஸ்பிளேவை இந்த ஸ்மார்ட்போனில் கொடுத்திருக்கிறது. 5.7 இன்ச்  18:9 (1440 × 720) HD+ டிஸ்ப்ளே இதில் இருக்கிறது.  பட்ஜெட் செக்மென்டில் இந்த வசதியைக்கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறைவு என்பது இதன் பிளஸ் பாயின்ட் .மற்ற ரெட்மி ஸ்மார்ட்போன்கள் போல தோற்றமளித்தாலும் வடிவமைப்பில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறது ஷியோமி.

ரெட்மி 5

18:9 டிஸ்ப்ளே என்பதால் மூன்று நேவிகேஷன் பட்டன்கள் டிஸ்ப்ளேவிற்கு உள்ளேயே கொடுக்கப்பட்டிருக்கின்றன. ரெட்மி 4 உடன் ஒப்பிடும்போது இதன் தடிமன் 11 சதவிகிதம் குறைவானது. 1.8 GHz குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 450 ஆக்டாகோர் புராசஸர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ரெட்மி 4-ல் குறைவான வெளிச்சத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களின் தரம் குறைவாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. எனவே, இந்த போனில்  கேமராவை சற்று மேம்படுத்தியிருக்கிறது. இதில் 12 மெகாபிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்ஸல் முன்புற கேமரா இருக்கிறது. வெளிச்சம் குறைவான இடத்தில் செல்ஃபி எடுப்பதற்கு உதவும் வகையில் முன்புற கேமராவிற்கு ஃப்ளாஷ் வசதி இருக்கிறது. இதில் இருக்கும் 3300mAh பேட்டரி மொபைலை ஒருநாள் முழுவதும் பயன்படுத்துவதற்கு தேவையான சக்தியை அளிக்கும். கறுப்பு, நீலம், கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களிலும் மூன்று விதமான ரேம்களைக் கொண்ட வேரியன்ட்களாகவும் ரெட்மி 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. ஆண்ட்ராய்டு நெளகட் இயங்குதளம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ரெட்மி 5 ஸ்மார்ட்போன்

சந்தையில் சாம்சங் கேலக்ஸி j7 Nxt மற்றும் மோட்டோ G5s என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களைத்தான் ரெட்மி 5-யின் போட்டியாளராகக் கருதுகிறது ஷியோமி. அதே வேளையில் அந்த இரண்டு  ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது இது எல்லாவிதத்திலும் சிறப்பான வசதிகளைக்கொண்டிருப்பதாகக் கூறுகிறது. தனது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு இணையான தரத்திலேயே பட்ஜெட் ஸ்மார்ட்போன்களும் தயாரிக்கப்படுவதாகவும், பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறுகிறது ஷியோமி. எனவே, கீழே விழுந்தாலும் அவ்வளவு எளிதில் இந்த மொபைல் பாதிப்படையாதாம்.இந்த ஸ்மார்ட்போனோடு ஒரு பேக் கவரையும் அளிக்கிறது. அமேசான் இணையதளத்திலும், ஆப்லைன் ஸ்டோர்களிலும் வரும் 20-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது ரெட்மி. 2  ஜிபி ரேம்/ 16 ஜிபி வேரியன்ட் 7,999 ரூபாயாகவும், 3  ஜிபி ரேம்/ 32 ஜிபி வேரியன்ட் 8,999 ரூபாயாகவும் மற்றும்  4  ஜிபி ரேம்/ 64 ஜிபி வேரியன்ட் 10,999 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 


டிரெண்டிங் @ விகடன்