வெளியிடப்பட்ட நேரம்: 11:54 (20/03/2018)

கடைசி தொடர்பு:11:54 (20/03/2018)

ஃபேஸ் அன்லாக் முதல் AI வரை... 2018 கேட்ஜெட்களின் ட்ரெண்ட்கள்!

டந்த சில வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகமானால் அவை விலை உயர்ந்த மொபைல்களில் முதலில் பயன்படுத்தப்பட்டு சிலகாலம் கழித்துதான் மற்ற மொபைல்களுக்கு வரும். இப்பொழுதெல்லாம் மாதம் ஒரு புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதுவும் குறைவான காலத்திலேயே பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இடம்பிடிக்கத் தொடங்கிவிடுகிறது. இதேபோல ஃபிளாக்ஷிப் மொபைல்களில் மட்டும்தான் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும் என்ற நிலையும் தற்போது மாறிவருகிறது. மிட்ரேஞ்ச் மொபைல்களிலேயே புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகத் தொடங்கிவிட்டது. இந்தக் கட்டுரையில் 2018-ம் ஆண்டில் பரவலாக ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்துதான் பார்க்கவிருக்கிறோம்.

ஃபேஸ் அன்லாக்

ஃபேஸ் அன்லாக்


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இந்த வசதி ஏற்கெனவே இருந்தாலும் கடந்த வருடம்  ஐபோன் X-ன் வெளியீட்டிற்கு பின்னர்தான் ஃபேஸ் அன்லாக் வசதியைக் கண்டுகொள்ள ஆரம்பித்தார்கள். இப்பொழுதே பல ஸ்மார்ட்போன்களில் இந்த வசதி சர்வசாதாரணமாக வர ஆரம்பித்துவிட்டது. சாஃப்ட்வேர் அப்டேட்டிலேயே இந்த வசதியை சில மொபைல் நிறுவனங்கள் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த வருடம்  பட்ஜெட், மிட்ரேஞ்ச் என அனைத்து ஏரியாக்களிலும் இந்த வசதிதான் ட்ரெண்ட்டாக இருக்கப்போகிறது.  

திரைக்கு அடியில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார்

 ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்

பல வருடங்களாகவே எப்பொழுது வரும் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம் இது. ஆப்பிள், சாம்சங் என முன்னணி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் என இதனைப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்க அந்த தொழில்நுட்பத்தை  தனது ஸ்மார்ட்போனில் அறிமுகப்படுத்தியது விவோ நிறுவனம். இந்த தொழில்நுட்பம் மூலமாக திரைக்கு மேலேயே விரல்களை வைத்து மொபைலை அன்லாக் செய்ய முடியும். விவோவைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் இந்த வசதியை பயன்படுத்தும் என எதிர்பார்க்கலாம். 

ஆக்மென்ட் ரியாலிட்டி

 ஆக்மென்ட் ரியாலிட்டி

ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரையில் எதிர்காலத்தில் கோலோச்சப்போகும் ஒரு தொழில்நுட்பம் ஆக்மென்டட் ரியாலிட்டி. ஐபோன் X-ல் அறிமுகப்படுத்தப்பட்ட  அனிமோஜியைத் தொடர்ந்து சாம்சங்கும் இதே போல ஒரு  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி  AR Emoji-யை  கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த வருடம் மொபைலில் இருக்கும் சாதாரண எமோஜிக்களை ஓரம் கட்ட வருகின்றன AR Emoji-க்கள்.  விரைவில் மற்ற மொபைல்களிலும் இவை என்ட்ரி கொடுக்கலாம்.

செயற்கை நுண்ணறிவு

கடந்த வருடமே ஸ்மார்ட்போன்களில்  செயற்கை நுண்ணறிவுத்திறன் என்ற விஷயம் ட்ரெண்டாக தொடங்கிவிட்டது. ஹுவாவே நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத்திறன் கொண்ட ஸ்மார்ட்போனை முதலில் அறிமுகப்படுத்த அதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனமும் நியூரல் என்ஜின் கொண்ட ஐபோன் X-ஐ அறிமுகப்படுத்தியது. இது போன்ற புதிய வகை ப்ராசஸர்கள் மூலமாக மொபைல்களின் செயல்திறன் அதிகரிக்கும். செயற்கை நுண்ணறிவால் வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி பலமடங்கு மேம்படும். இந்த வருடம் வெளியாகப்போகும் பல ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட  ப்ராசஸர்களோடு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

டிஸ்ப்ளே

கேட்ஜெட்டி டிஸ்ப்ளே

இந்த வருடம் வெளியாகும் மொபைல்கள் பெரும்பாலும் 18:9 வசதியோடு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இப்பொழுதே ஷியோமி நிறுவனம் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் கூட இந்த வசதியை தருகிறது. இது தவிர இந்த வருடம் எதிர்பார்க்கப்படும் மற்றொரு தொழில்நுட்பம், வளையும் திரை கொண்ட ஸ்மார்ட்போன்கள். இந்த வருடம் சாம்சங் நிறுவனம் வளையும் திரை கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மற்றபடி bezel less திரை கொண்ட  ஸ்மார்ட்போன்கள் சந்தையை அதிகளவில் ஆக்கிரமிக்கும். 

டூயல் சிம்

டூயல் சிம் ரொம்பவே பழைய தொழில்நுட்பம்தான் என்றாலும் ஆப்பிளுக்கு இது புதிதுதான். ஆண்ட்ராய்டு மொபைல்களில் டூயல் சிம் என்பது பரவலாகிவிட்டாலும் இன்று வரை  ஐபோன்  சிங்கிள்தான். முதல் முறையாக இந்த நிலைப்பாட்டில் ஆப்பிள் மாற்றம் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த வருடம் வெளியாகும் ஐபோனில் டூயல் சிம் வசதி இருக்கக்கூடும் என்ற என தகவல் வெளியாகியிருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் அப்படி ஒரு ஐபோனை அறிமுகப்படுத்தினால் அதன் வரலாற்றில் முக்கிய மாற்றமாக இடம்பெறும். 


டிரெண்டிங் @ விகடன்