“இது ஃபேஸ்புக்கை டெலிட் செய்வதற்கான நேரம்!” - வாட்ஸ்அப்  இணை நிறுவனரின் சர்ச்சை ட்வீட்

`இது ஃபேஸ்புக்கை டெலிட் செய்வதற்கான நேரம்’ என வாட்ஸ்அப் செயலியின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ஃபேஸ்புக்கில் உள்ள 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களைத் திருடி, ட்ரம்ப் தேர்தலில் வெற்றிபெற உதவி செய்ததாக, நேற்று முன் தினம் நியூஸ் 4 என்ற தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இது, உலக அளவில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேம்பிரிட்ஜ் நிறுவனம் எவ்வாறு தகவல்களைத் திருடியது, ட்ரம்ப் எப்படி வெற்றிபெற்றார், ஃபேஸ்புக்கில் இருந்து தகவல்கள் எவ்வாறு திருடப்பட்டன என்பது போன்ற பல கேள்விகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் இருக்கின்றன. 

இதனால், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. இந்தப் பிரச்னையின்மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் அந்நிறுவனத்தின் லாபம் பல மில்லியன் அளவில் குறைந்ததாகக் கூறப்படுகிறது. ஃபேஸ்புக்கில் இருந்து பயனாளர்களின் தகவல் திருடப்பட்டது, முன்னரே அந்நிறுவனத்துக்குத் தெரியுமா? உலக அளவில் அதிகப் பயனாளர்களைக் கொண்டுள்ள ஃபேஸ்புக், பயனாளர்களின் தகவல் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தது எப்படி? போன்ற பல கேள்விகள் அந்நிறுவனத்தை நோக்கிச் சென்றவாறே உள்ளன.

தற்போது, ஃபேஸ்புக் நிறுவனம் அதிக பிரச்னையில் இருக்கும் இந்த நேரத்தில், இதுகுறித்து வாட்ஸ்அப் செயலியின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன்,  ஒரு கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 'ஃபேஸ்புக்கை டெலிட் செய்வதற்கான நேரம் இது' எனப்  பதிவிட்டுள்ளார். இவரின் கருத்து, சமூக வலைதளங்களில் மிகப்பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.  கடந்த 2017-ம் ஆண்டு, பிரையன் ஆக்டன் வாட்ஸ்அப்பில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!