தானியங்கி கார் மோதி ஒருவர் பலி... விபத்தை உண்டாக்கியது யார்? #DriverlessCars

னித வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான ஒரு பொருள் சக்கரம் என்பார்கள். சக்கரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மனிதனால் வெகுதொலைவைக்கூட சாதாரணமாகக் கடக்க முடிந்தது. விலங்குகளால் இழுக்கப்பட்டுக்கொண்டிருந்த வண்டிகள் காலம் செல்லச் செல்ல ரயில்களாக, கார்களாக வெவ்வேறு கட்டங்களில் வளர்ச்சி அடைந்தன. ஆனால், எந்த வாகனமாக இருந்தாலும் அதை இயக்குவதற்கு மனிதனின் உதவி தேவைப்பட்டது. தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகி வருகின்றன வாகனங்கள். வாகனங்களின் எதிர்கால தொழில்நுட்பம் தானியங்கி கார்கள்தான்.  இன்னும் சில வருடங்களிலேயே மனிதர்களின் உதவியின்றி சாலைகளில் வலம் வரும் கார்களை வெகு சாதரணமாகப் பார்க்க முடியும். அதற்கான முயற்சிகள் அண்மைக் காலமாக நடந்து வருகின்றன. ஆனால், இந்தத் தொழில்நுட்பம் பாதுகாப்பானதுதானா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது அமெரிக்காவில் நடந்த ஒரு தானியங்கி கார் விபத்துச் சம்பவம்.  

விபத்து நடந்த இடம்

 அதிர்வலைகளை ஏற்படுத்திய விபத்து ?

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் இந்த விபத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் நடந்திருக்கிறது. எலைன் ஹெஸ்பெர்க் (Elaine Herzberg) என்ற 49 வயது பெண் அவரது சைக்கிளை சாலையில் தள்ளிக்கொண்டு கடக்க முயன்றபோது பலத்த வேகத்தில் அவர்மீது மோதியிருக்கிறது அந்த கார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றவரை பரிசோதித்த மருத்துவர்கள் பலத்த காயமடைந்ததால் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். தகவல் தெரிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோதுதான் அவர்மீது இடித்த காரை மனிதர்கள் ஓட்டி வரவில்லை, அது உபெர் நிறுவனத்தின் தானியங்கி கார் என்பதை அறிந்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விபத்து. விபத்து தொடர்பாக விசாரித்த காவல்துறையினர் இந்த விபத்து சம்பந்தமாகப் பல அதிர்ச்சிகரமான தகவல்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். முதலில் அந்த காரில் ஒரு நபர் இருந்திருக்கிறார். இதுபோன்ற தானியங்கி கார்களின் சோதனை ஓட்டத்தின்போது அவசர நிலைகளை சமாளிக்கும் விதமாகவும், கார் எப்படி இயங்குகிறது என்பதைக் கண்காணிக்கவும் அந்த காருக்குள் ஒருவர் இருப்பார். 

தானியங்கி காருக்குள் அமர்ந்து சீட் பெல்ட்டை மட்டும் போட்டுக்கொண்டிருப்பார் கார் தானாகவே இயங்கத்தொடங்கும். அப்படி விபத்து நடந்த காரில் இருந்தவர் ரபேல் வாஸ்கஸ் (Rafael Vasquez). 49 வயதான அவர் "அந்தப் பெண்மணி கண்ணிமைக்கும் நேரத்திற்குள் காருக்கு முன்னால் வந்துவிட்டார், விபத்து ஒரு ஃபிளாஷ் அடித்ததைப்போல நடந்துவிட்டது" என்று தெரிவித்திருக்கிறார். விபத்து நடந்த பகுதியில் வாகனங்கள் 55 கி.மீ வேகத்தில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது ஆனால், விபத்து நடந்தபோது காரின் வேகம் 65 கிலோமீட்டருக்கு மேல் இருந்திருக்கிறது. விபத்தின் வீடியோவை ஆராய்ந்த காவல்துறையினர் விபத்து நடப்பதற்கு முன்னால் உள்ளே இருந்த டெஸ்ட் டிரைவரான ரபேல் வாஸ்கஸ் விபத்தைத் தடுப்பதற்கு முயற்சி செய்ததைக் கண்டறிந்திருக்கிறார்கள். விபத்து நடந்த இடம் அபாயகரமான பகுதி எனவும், சாலையின் ஒரு பக்கத்தில் இருள் சூழப்பட்டு இருந்த இடத்தில் இருந்து எலைன் ஹெஸ்பெர்க் வேகமாக சாலைக்குள் நுழைந்ததைப் பார்த்து இதுபோன்ற சமயத்தில் மனிதனே ஒட்டியிருந்தாலும் விபத்தை தடுத்திருக்க முடிந்திருக்காது எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.     

உபெர் கார்

விபத்தைத் தொடர்ந்து சான் பிரான்சிஸ்கோ, பிட்ஸ்பர்க், டொரோண்டோ  போன்ற மற்ற சில இடங்களில் நடைபெற்று வந்த தானியங்கி கார் பரிசோதனைகளை உடனடியாக நிறுத்தியிருக்கிறது உபெர் நிறுவனம். விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்ததோடு மட்டுமின்றி , இது தொடர்பாக விசாரணைக்கு முழுவதும் ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அறிவித்திருக்கிறது. 

தானியங்கி கார்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் ?

கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் ஆடி, டெஸ்லா, டொயோட்டா போன்ற ஆட்டோமொபைல்  நிறுவனங்கள் வரை பல நிறுவனங்கள் தானியங்கி கார்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. பெரிய அளவிலான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்னால் அதில் இருக்கும் குறைகள், நிறைகள் என ஆராய்வது அவசியம். அதற்காக 'பைலட் பரிசோதனை' என்று சிறிய அளவில் திட்டத்தை செயல்படுத்திப் பார்ப்பார்கள். அதுபோல பரிசோதனையின்போதுதான் இந்தத் தானியங்கி கார் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு வாகன விபத்தின்போது ஏதாவது பாதிப்பு ஏற்படுமேயானால், யார்மீது தவறோ அவர்தான் அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டியிருக்கும். ஆனால், இது தொடர்பாக சட்டங்களும் தெளிவாக வரையறுக்கப்படாத நிலையில் இந்த விபத்தில் யார் மீது தவறு இருக்கிறது என்று குழம்பியிருக்கிறார்கள் காவல்துறையினர். இன்று மட்டுமில்லை எதிர்காலத்திலும் இந்தக் கேள்வி எழக்கூடும். யார் இதற்குப் பொறுப்பேற்பது மனிதனா இல்லை அவனால் உருவாக்கப்பட்ட தானியங்கி காரா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!