ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கை எச்சரிக்கும் ஐடி அமைச்சர்!

இந்திய மக்களின் தகவல்கள் ஃபேஸ்புக் மூலம் திருடப்பட்டது என்று தெரியவந்தால், ஐ.டி. சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்குப் பகிரங்கமான எச்சரிக்கை விடுத்துள்ளார், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத்.  

மார்க் ஜுக்கர்பெர்க்

அமெரிக்காவில், 50 மில்லியன் மக்களின் தனிப்பட்ட அரசியல் சார்ந்த தகவல்கள், ஃபேஸ்புக் மூலம் திருடப்பட்டது. இந்தத் திருடப்பட்ட தகவகள் அனைத்தும் டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்தத் திருட்டை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற போலிட்டிகல் டேட்டா ஃபர்ம் செய்தது என பிரிட்டன் தொலைக்காட்சி, சேனல் நியூஸ் 4 நேற்று செய்தி வெளியிட்டது. 

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய, ஐ.டி அமைச்சர், 'சமூக ஊடகங்கள் மூலம் பரிமாற்றப்படும் இலவச கருத்துகளை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், ஃபேஸ்புக் உட்பட எந்தச் சமூக இணையதளங்களாவது, இந்தியாவில் நடைபெறும் தேர்தல் செயல்பாடுகளை விரும்பாத வகையில், இந்திய மக்களின் தகவல்களைத் திருடும் செயல்களில் ஈடுபட்டது எனத் தெரியவந்தால் சகித்துக்கொள்ள மாட்டோம். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், உங்களுக்கு இந்தியாவின் ஐ.டி சட்டத்தைப் பற்றி நன்கு தெரியும். இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஏதேனும் ஃபேஸ்புக் மூலம் திருடப்பட்டது என்று தெரியவந்தால், ஐடி சட்டத்தின் கீழ் உங்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!