ரெட்மி புயலைச் சமாளிக்க உருவான அஸுஸ் ஃப்ளிப்கார்ட் கூட்டணி... தாக்குப்பிடிக்குமா? | Asus and flipkart partnership launches new smartphone Asus Zenfone Max Pro M1

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (24/04/2018)

கடைசி தொடர்பு:13:59 (24/04/2018)

ரெட்மி புயலைச் சமாளிக்க உருவான அஸுஸ் ஃப்ளிப்கார்ட் கூட்டணி... தாக்குப்பிடிக்குமா?

ரெட்மி புயலைச் சமாளிக்க உருவான அஸுஸ் ஃப்ளிப்கார்ட் கூட்டணி... தாக்குப்பிடிக்குமா?

மொபைல் நிறுவனங்களைப் பொறுத்தவரை பட்ஜெட் மற்றும் மிட்ரேன்ஜ் செக்மெண்ட் என இரண்டுமே முக்கியமானவை. ஏனென்றால் மொபைல்கள் அதிகம் விற்பனையாவது இந்த செக்மெண்ட்களில்தான். ஹைஎன்ட் வாடிக்கையாளர்களைக் கூட மொபைல் நிறுவனங்கள் எளிதாகச் சமாளித்து விடுவார்கள். அங்கே போட்டியும் மிகக் குறைவு. ஆனால், அப்படியே எதிர்த் திசையில் இருக்கும் பட்ஜெட் மற்றும் மிட்ரேன்ஜ் செக்மென்டில் வாடிக்கையாளர்களைச் சமாளிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. அதற்குத் தகுந்தவாறு போட்டியும் சற்று அதிகமாக இருக்கும். விலைக்கு தகுந்தவாறு வசதிகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருக்கும் இந்த செக்மென்டில் அவர்களுக்கேற்ற ஸ்மார்ட்போன்களை உருவாக்குவது என்பது சவாலான விஷயம். இந்திய மொபைல் சந்தையைப் பொறுத்தவரை, கடந்த சில வருடங்களாகவே ஷியோமிக்குதான் முதல் இடம். ஷியோமி தரும் வசதிகளை வேறு யாரும் அந்த விலையில் தர முடிவதில்லை என்பதுதான் அதன் வெற்றிக்குக் காரணம்.

கைகோத்த ஃப்ளிப்கார்ட் மற்றும் அஸுஸ்:

 ஃப்ளிப்கார்ட் மற்றும் அஸுஸ்

தைவானைச் சேர்ந்த மொபைல் நிறுவனமான அஸுஸ் மற்றும் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் ஆகியவை கடந்த வாரம் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்தன. அதன்படி இந்தியாவில் அஸுஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதற்கான முதன்மைத்தளமாக ஃப்ளிப்கார்ட் இருக்கும். சிறந்த வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை சரியான விலையில் அளிக்க முடியும் என இரண்டு நிறுவனங்களும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன. வாடிக்கையாளர்களின் தேவைக்கு தகுந்த ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் வகையில் இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படும். மொபைல் வாங்க விரும்பும் ஒரு வாடிக்கையாளர் அதில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கிறார் என்பதை ஃப்ளிப்கார்ட் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும் என்பதால். அந்தத் தகவல்களை அஸுஸ் நிறுவனத்துக்கு அளிக்கும். அதன்படி தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களால் விற்பனையை அதிகரிக்க முடியும் என நம்புகிறது அஸுஸ்.

 ஃப்ளிப்கார்ட் மற்றும் அஸுஸ்

கடந்த வாரம் இந்த ஒப்பந்தம் பற்றிய அறிவிப்பு வெளியானதுமே 23-ம் தேதி புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்போவதாக அஸுஸ் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று  Asus Zenfone Max Pro M1 என்ற ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டிருக்கிறது.

 Asus Zenfone Max Pro M1

 

 Asus Zenfone Max Pro M1 ஸ்மார்ட்போன்

அஸுஸ் நிறுவனம்  Asus Zenfone Max Pro M1 என்ற இதற்கு முன்பு வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தவில்லை இந்தியாவில்தான் முதன் முதலாக அறிமுகப்படுத்துகிறது. புதிய ஒப்பந்தத்தால் இதுபோல பிரத்யேக ஸ்மார்ட்போன்களை அதிகமாக எதிர்பார்க்கலாம். டிஸ்ப்ளே, கேமரா மற்றும் பேட்டரி ஆகிய மூன்றிலும் கவனம் செலுத்தியிருக்கிறது அஸுஸ். 5.99 இன்ச் 18:9 ratio (1080 x 2160) டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன். தற்பொழுது மிட்ரேன்ஜ் செக்மெண்டில் கலக்கிக்கொண்டிருக்கும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு சவால் விடும் வகையில் இந்த ஸ்மார்ட்போனை உருவாக்கியிருக்கிறது அஸுஸ். எனவே, அதில் இருக்கும் விஷயங்கள் பல அப்படியே இதில் இருக்கின்றன. கிட்டத்தட்ட ரெட்மியை அப்படியே பிரதி எடுத்து  Zenfone Max Pro M1 ஸ்மார்ட்போனை  வடிவமைத்திருக்கிறது. எனவே, பார்ப்பதற்கு ரெட்மி நோட் 5 ப்ரோ தோற்றமளிக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

ஸ்மார்ட்போன்

வெளித்தோற்றத்தில் மட்டும்தான் என்றில்லை உள்ளே இருக்கும் சில விஷயங்களைக்கூட மாற்றவில்லை அஸுஸ். ரெட்மியில் இருக்கும் அதே 1.8  GHz ஆக்டாகோர் ஸ்னாப்ட்ராகன் 636 ப்ராசஸர்  இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 13 + 5  மெகாபிக்ஸல் டூயல் கேமரா பின்புறமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. 8 மெகாபிக்ஸல் முன்புற கேமராவுக்கு ஃபிளாஷ் இருக்கிறது. அதே வேளையில் ரெட்மி நோட் 5 ப்ரோவில் இல்லாத சில விஷயங்களை இதில் சேர்த்திருக்கிறார்கள். ரெட்மியில் ஹைபிரிட் சிம் ஸ்லாட் இருக்கிறது. ஆனால், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் சிம் ஸ்லாட்டில் இரண்டு சிம் மற்றும் ஒரு மெமரி கார்டை ஒரே நேரத்தில் பயப்படுத்த முடியும். இதில் இருக்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் இதன் இயங்குதளம்.

 Asus Zenfone Max Pro M1

இதில் ஓரியோ 8.1 ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் போனின் செயல்திறன் அதிகரிக்கும் என்கிறது அஸுஸ். 5000  mAh பேட்டரி இருந்தாலும் இதன் எடை 180 கிராம் மட்டுமே ரெட்மி நோட் 5 ப்ரோ-வைவிட ஒரு கிராம் குறைவு. 3 GB+32GB வேரியன்ட் 10,999 ரூபாயாகவும், 4GB+64GB வேரியன்ட் 12,999 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கூடிய விரைவிலேயே 14,999 ரூபாய்க்கு 6 ஜிபி வேரியன்டை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இது நிச்சயமாக ரெட்மிக்கு சவால் விடும் விலைதான். ரெட்மி நோட் 5 ப்ரோவை வாங்கலாம் என எதிர்பார்த்துக் காத்திருந்து வெறுப்படைந்தவர்கள் இதன் பக்கம் திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். எப்படியோ ஷியோமிக்கு சவால் விடும் வகையில் உருவாக்கியிருக்கிறது ஃப்ளிப்கார்ட் மற்றும் அஸுஸ் கூட்டணி.


டிரெண்டிங் @ விகடன்