இனி பறந்தாலும் பிரவுஸ் செய்யலாம்... இந்தியாவுக்கு வரும் விமான வைஃபை!

இனி பறந்தாலும் பிரவுஸ் செய்யலாம்... இந்தியாவுக்கு வரும் விமான வைஃபை!

எல்லா மொபைல்களிலும்  Aeroplane mode என ஒன்றிருக்கும். விமானம் பறக்கத் தொடங்கும் சில நிமிடங்கள் முன்பு இந்த மோடுக்கு மாறிவிட நமக்குச் சொல்வார்கள். அதன் பின் அந்த மொபைல் சிக்னல் மட்டும் எடுக்காது. மற்ற வசதிகளைப் பயன்படுத்தலாம். இதனால், விமானத்தில் பறக்கும் சமயத்தில் யாரிடமும் மொபைலில் பேசவோ இணையம் பயன்படுத்தவோ முடியாது. இந்தப் பிரச்னைக்கு இப்போது தீர்வு வந்திருக்கிறது. விரைவில், நாம் விமானத்தில் பறந்தபடியே இணையம் பயன்படுத்தலாம்; கால் செய்யலாம். விமான வைஃபைக்கு ஓகே சொல்லியிருக்கிறது தொலைத்தொடர்பு ஆணையம்.

நீண்ட நாள்களாக கிடப்பில் கிடந்த இந்தக் கோரிக்கையை இப்போது தொலைத்தொடர்பு ஆணையம் ஏற்றுக்கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது. இதுதொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தொலைத்தொடர்பு ஆணையர் அருணா சுந்தரராஜன் ”ட்ராய் தந்த அத்தனை கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இனி விமானத்திலும் வைஃபை கிடைக்கும். இன்னும் 3 மாதங்களில் இதற்கான பணிகள் முடிவடையும்” என்றார். 

 

விமான வைஃபை

முதல்கட்டமாக விமானத்தில் வைஃபை வசதி வரும். அதைத் தொடர்ந்து சில மாதங்களில் அழைப்புகளும் செய்ய முடியும். விலை பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், விமான சேவை நிறுவனங்கள் இதை தங்கள் பயணிகளுக்கு வழங்குவதில் எந்தத் தடையும் இருக்காது. 

இதற்கென தனியாக ஒரு லைசென்ஸ் தரப்படும். ''In-Flight Connectivity Provider” என்று அழைக்கப்படும் இந்த லைசென்ஸ் கப்பலுக்கும் பொருந்தும்.  

ட்ராய் இதுதொடர்பான கோரிக்கையை சில மாதங்களுக்கு முன்பே தந்திருந்தது. அதன்படி, தரையிலிருந்து 3000 அடிக்கு மேல் பறக்கும் விமானம் மற்றும் பிற பறக்கும் போக்குவரத்துகளில் பயன்படுத்தக்கூடிய வைஃபை மற்றும் அழைப்பு வசதி வேண்டுமெனச் சொல்லியிருந்தது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. இதன்கூடவே ட்ராய் தந்த மொத்த 12 கோரிக்கைகளையும் தொலைத்தொடர்பு ஆணையம் ஏற்றுக்கொண்டுவிட்டது.

உலக அளவில் இதுவரை பல நாடுகளில்  In flight wifi வசதி இருக்கிறது. 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் இருக்கும்  Gogo என்ற நிறுவனம் தான் முதன்முதலில் விமான இணையச்சேவையை வழங்கியது. ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஹாங்காங், யுனைட்டெட் கிங்டம், சிங்கப்பூர் மற்றும் லித்துவேனியா ஆகியவை இந்த வசதியை ஏற்கெனவே தங்கள் விமானப் பயணிகளுக்கு வழங்கி வருகின்றன. ஐரோப்பியாவில் இருக்கும் சிறிய நாடான லித்துவேனியாவில் பொது வைஃபை என்பது சாதாரணமான ஒன்று. உலக அளவில் வேகமான பொது வைஃபை கொண்ட நாடான இது, விமான வைஃபையிலும் அதிவேக இணையம் தரும் நாடும் கூட.

இணையம்எப்படிச் செயல்படும்?
இரண்டு வழிகளில் விமானத்துக்கு இணைய வசதி தரப்படும். ஒன்று, தரையிலிருக்கும் டவர்களுடம் விமானத்திலிருக்கும் டவர்கள் தொடர்புகொண்டு, அதன்பின் விமானத்தில் உள்ளே இருக்கிறவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும். இதன்படி, கடல் போன்ற இடங்களைக் கடக்கும்போது இணையம் துண்டிக்கப்படும் வாய்ப்புண்டு. இரண்டாவது வசதிப்படி, விமானத்தின் ஆன்டனாக்கள் சேட்டிலைட்டுடன் தொடர்பு கொள்ளும். கிடைக்கும் சிக்னலை விமானத்திலிருக்கும் ஆன்-போர்ட் ரெளட்டர் பயணிகளுக்குப் பகிர்ந்தளிக்கும். இது கொஞ்சம் காஸ்ட்லியான வழி என்றாலும், துண்டிக்கப்படாத இணையம் கிடைக்கும். இந்தியாவும் சேட்டிலைட் வழியைப் பின்பற்ற இருக்கிறது. 

இந்தச் சேவையை வழங்கும் சில ஏர்லைன்ஸ்:

  • எமிரேட்ஸ் ( Emirates)
  • கத்தார் ஏர்வேஸ் ( Qatar Airways)
  • நார்வேஜியன் ( Norwegian)
  • துருக்கி ஏர்லைன்ஸ் ( Turkish Airlines)
  • ஏர் சைனா ( Air China)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!