ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவிகித பங்குகளை வாங்கிய வால்மார்ட்!

ஃப்ளிப்கார்டின் பெரும்பான்மையான பங்குகளை, அமெரிக்காவின் முன்னணி வர்த்தக நிறுவனமான வால்மார்ட் வாங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஃபிளிப்கார்ட்

அமேசான் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோரால் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது, இந்தியாவின் முதல் பில்லியன் டாலர் மின்னணு வர்த்தக நிறுவனமாகும். சுமார் 100 கோடி மக்கள் ஃப்ளிப்கார்ட் தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சாஃப்ட் பேங்க் நிறுவனம் வைத்திருக்கிறது. 

இந்த நிலையில், ஃப்ளிப்கார்ட் நிறுவனப் பங்குகளை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக வால்மார்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, ஃப்ளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் இடையேயான ஒப்பந்தம் நேற்று இரவு ஜப்பான் நேரப்படி உறுதி செய்யப்பட்டுள்ளதாக சாஃப்ட் பேங்க் நிறுவன தலைமை செயல் அதிகாரி மசயோஷி சன் தெரிவித்துள்ளார்.  வால்மார்ட் மற்றும் ஃப்ளிப்கார்ட் இடையில் போடப்பட்ட ஒப்பந்தம்தான் மின்னணு வர்த்தகத்தின் மிகப்பெரிய ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது. 

சுமார் 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவிகித பங்குகளை வால்மார்ட் வாங்கியுள்ளது. மீதமுள்ள 23 சதவிகித பங்குகளை ஃப்ளிப்கார்ட் நிர்வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தில் கால்பதிக்க முயன்ற வால்மார்ட்டுக்கு இங்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்த எண்ணம் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஃப்ளிப்கார்ட்டை வாங்கியதன் மூலம் இந்தியா வணிகத்துக்குள் வால்மார்ட் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே  ``இந்தியா மிகக் கவர்ச்சிகரமான சில்லறை சந்தைகளில் ஒன்றாகும். அதன் அளவு மற்றும் வளர்ச்சி விகிதம், மற்றும் எங்கள் முதலீடு இணையவழி சந்தையை மாற்றியமைக்க வழிவகுக்கும்" என வால்மார்ட் சிஇஓ டக் மெக்மில்லன் (Doug McMillon) தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!