ப்ளே ஸ்டோரில் இருந்து கிம்போ ஆப் காணாமல்போன காரணம் இதுதான்! #KimbhoApp

வாட்ஸ்அப், மெசஞ்சர் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்களுக்குப் போட்டியாக, நேற்று திடீரென ஒரு ஆப்பை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம். வெளிநாட்டு ஆப்களுக்கு மாற்றாக ஓர் இந்திய ஆப், இந்தியர்களுக்கான வாட்ஸ்அப் என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த ஆப், வந்த வேகத்திலேயே ப்ளே ஸ்டோரில் இருந்து காணாமல்போனது.

கிம்போ ஆப்

ஆப் வெளியான அன்றே பரவலான கவனத்தை ஈர்த்தாலும், போலோ என்ற ஆப்பை அப்படியே கிம்போ நகலெடுத்திருக்கிறது, ஆப்பில் ஏகப்பட்ட பாதுகாப்புக் குளறுபடிகள் இருக்கின்றன. இதில் பகிரப்படும் மெசேஜ்களை எளிதாக ஹேக் செய்து படித்துவிட முடியும் என்றெல்லாம் நிறைய விமர்சனங்களும் குவிந்தன. இந்நிலையில், திடீரென ப்ளே ஸ்டோரில் இருந்து காணாமல்போகவே பாதுகாப்புக் குறைபாடுகள்தான் காரணம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் விளக்கம் அளித்திருக்கிறார்.

"நேற்று வெளியான ஆப், கிம்போவின் ட்ரயல் வெர்ஷன் மட்டும்தான். இது, அதிகாரபூர்வ வெளியீடு கிடையாது. தொழில்நுட்பப் பணிகள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன" எனத் தெரிவித்துள்ளார். மேலும், எல்லா பிளாட்ஃபார்ம்களில் இருந்தும் ஆப் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது என்றும் கூறியிருக்கிறார். இதனால்தான், ப்ளே ஸ்டோரில் இருந்து கிம்போ நீக்கப்பட்டிருக்கிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!