வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (02/06/2018)

கடைசி தொடர்பு:17:15 (02/06/2018)

``எல்லோருக்கும் AI, புதிய தோற்றம்!” - ஷியோமி மொபைல்களை கலக்க வரும் MIUI 10

``எல்லோருக்கும் AI, புதிய தோற்றம்!” - ஷியோமி மொபைல்களை கலக்க வரும் MIUI 10

ஷியோமி தனது கஸ்டமைஸ்டு இயங்குதளமான MIUI-ன் புதிய பதிப்பை நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. MIUI அதன் வசதிகளுக்காகப் பலரால் விரும்பப்படுகிறது. கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட MIUI9-ஐ சில மொபைல்களுக்குக் கொடுத்திருந்தது ஷியோமி. இதனையடுத்து அதன் மேம்பட்ட பதிப்பான MIUI 10-ஐ இப்போது வெளியிட்டிருக்கிறது. அந்த நிகழ்வில் புதிய ஸ்மார்ட்போன்கள்,  Mi Band 3 மற்றும் ஒரு டிவியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷியோமி.

ஷியோமி

MIUI 10-ல் இருக்கும் புதிய வசதிகள்

முன்னெப்போதும் இல்லாத வகையில் AI தொழில்நுட்பத்தை தனது இயங்குதளத்தில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது ஷியோமி. இந்த இயங்குதளத்தில் பெரிய மாற்றம் கண்டிருப்பது ரீசென்ட் மெனு. வழக்கமாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருப்பதைப் போல இல்லாமல் இதை வேறு விதமாக வடிவமைத்திருக்கிறது.

MIUI 10

MIUI 10-ல் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயம்  portrait mode. சமீப காலமாக  bokeh எபெக்டில் போட்டோக்கள் எடுப்பது ட்ரெண்டாக இருக்கிறது. ஆனால் இது எல்லா மொபைல்களிலும் சாத்தியமாகாது. டூயல் கேமரா ஸ்மார்ட்போன்களில்தான் bokeh எபெக்ட் போட்டோக்களை சிறந்த முறையில் எடுக்க முடிந்தது. அந்தச் சிக்கலை AI தொழில்நுட்பத்தின் மூலமாகச் சரி செய்திருக்கிறது ஷியோமி. அதன்படி ஒரு கேமராவைக் கொண்ட ஷியோமி ஸ்மார்ட்போன்களிலும் இனிமேல் bokeh எபெக்ட் போட்டோக்களை எடுக்கலாம். டிரைவிங் மோட் வசதியும்  AI-யுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒருவர் கார் ஓட்டும்போது மொபைலைப் பார்த்து கவனம் சிதறாத படி இது செயல்படும். ஸ்மார்ட் ஹோம் மேனேஜர் என்ற பகுதியின் மூலமாக ஷியோமியின் இதர உபகரணங்களை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். எந்த ஸ்மார்ட்போன்களில்  MIUI 10-ஐ பெற முடியும் என்ற தகவல்களும் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவில் வரும் 7-ம் தேதி MIUI 10 அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷியோமி ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு MIUI 10 நிச்சயம் புதிய அனுபவத்தைத் தரும்.

 Mi 8 ஸ்மார்ட்போன்

 Mi 8

ஷியோமியின் புதிய ஸ்மார்ட்போனான  Mi 8-ல் கேமராவுக்கும், டிஸ்ப்ளேவுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அப்படியே ஐபோன்  X-ஐப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஐபோன் X-ன் பேஸ் அன்லாக் போலவே இதிலும் IR தொழில்நுட்பம் இருக்கிறது. 6.21 இன்ச் Super AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமராக்கள் (12 MP) பின்புறமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 20 MP முன்புற கேமரா இருக்கிறது.  3400  mAh பேட்டரி மற்றும் Type-C வசதி இருக்கிறது. 6 GB ரேம் மற்றும் 64/128/256 GB இன்டெர்னல் மெமரி என மூன்று வேரியன்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. Mi 8 ஸ்மார்ட்போனின் எக்ஸ்ப்ளோரர் வெர்ஷனில் திரைக்கு அடியிலேயே ஃபிங்கர்பிரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாடலின் பின்புறம் ஒளிபுகும் தன்மையுடையப் பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனுக்கு உள்ளே இருக்கும் பாகங்களை பார்க்க முடியும்.

Mi Band 3

அடுத்ததாக  Mi Band 3 என்ற ஸ்மார்ட் பேண்ட்டையும் ஷியோமி அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் பேட்டரி லைஃப் 20 நாள்கள் என்கிறது ஷியோமி. வாட்டர் ரெசிஸ்டன்ட்,  OLED பேனல் என அசத்தும் வசதிகள் இதில் இருக்கின்றன. இவை தவிர வாய்ஸ் அசிஸ்டென்ட்டுடன் கூடிய 75 இன்ச் டிவி ஒன்றும், VR ஹெட்செட் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷியோமி.