டிஜிட்டல் காலம்தான்... ஆனால் ஓலைச்சுவடியைப் போல டி.வி.டி நூற்றாண்டுகள் வாழுமா? #DigitalDarkAge

இப்போது நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்தக் கட்டுரைக்குக் கூட எந்தக் காகிதமோ, பேனாவோ உபயோகிக்கப்படவில்லை. இது டிஜிட்டலாகவே பிறந்த ஒரு தகவல். எந்த ஒரு காரணமுமின்றி திடீரென இந்தக் கட்டுரை காணாமல் போகக் கூடும்!

டிஜிட்டல் காலம்தான்... ஆனால் ஓலைச்சுவடியைப் போல டி.வி.டி நூற்றாண்டுகள் வாழுமா? #DigitalDarkAge

இன்று இவ்வுலகில் எந்தவொரு சம்பவம் நிகழ்ந்தாலும், பிரச்னை எழுந்தாலும் அதை இதற்கு முன் இதே போன்று ஏற்பட்ட ஒரு சம்பவத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். ஏனெனில் வரலாற்றில் இதே போன்று பல நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். கண்ணகி மதுரையை எரித்ததையும், ராஜராஜ சோழன் எப்படிப் பெரிய கோயிலைக் கட்டினான் என்பதையும் ஏசு மறுபிறப்பையும் அமெரிக்கக் கண்டம் கண்டுபிடிக்கப்பட்டதையும் இன்றும் நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது என்றால் அதற்குக் காரணம் வரலாறு. அது நமக்கு கொடுத்து விட்டுப் போன தகவல்கள். ஒருவேளை இந்த வரலாற்றுத் தகவல்கள் அனைத்தும் தொலைந்து போயிருந்தால் இப்பேர்பட்ட அற்புதமான நிகழ்வுகளைப் பற்றி நம்மால் அறிந்துகொள்ள முடியாமல் போயிருக்கும். 20 ம் நூற்றாண்டு வரை இருக்கும் வரலாறு என்றைக்கும் அழியப் போவதில்லை. அது காலத்துக்கும் நிலைத்து நிற்கும். ஆனால், 21 ம் நூற்றாண்டின் வரலாறு என்னவாகும். 20 ம் நூற்றாண்டு வரை இருந்த வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் கல்வெட்டுகளாகவும் காகிதத் துணுக்குகளாகவும் இருந்தன. ஆனால், 21 ம் நூற்றாண்டின் அத்தனை நிகழ்வுகளும் டிஜிட்டல் உலகில் அல்லவா எழுதப்படுகின்றன. 

இப்போது நாம் சேமித்து வைக்கும் அனைத்து டிஜிட்டல் தகவல்களும், வரும் காலத்தில் கரைந்து காணாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அகத்தியன் எழுதின ஓலைச்சுவடியைப் பத்திரமாக பெட்டிக்குள் வைத்தால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அது அப்படியே இருக்கும். ஆனால், நேற்று முன் தினம் நீங்கள் வாங்கிய ஒரு சி.டி. தொடர்ந்து பலமுறை உபயோகித்தால் அதனுள் இருக்கிற தகவல்கள் அனைத்தும் சிதைந்துவிடும். இப்போது நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்தக் கட்டுரைக்குக் கூட எந்தக் காகிதமோ, பேனாவோ உபயோகிக்கப்படவில்லை. இது டிஜிட்டலாகவே பிறந்த ஒரு தகவல். எந்த ஒரு காரணமுமின்றி திடீரென இந்தக் கட்டுரை காணாமல் போகக் கூடும். இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டம்தான் `டிஜிட்டல் டார்க் ஏஜ்' (Digital dark age). 

டிஜிட்டல் டேட்டா

பல பெரிய டெக் நிறுவனங்கள் இப்படியான பிரச்னைகள் ஏற்படும் என இன்னும் பழைய தொழில்நுட்பத்தைச் சார்ந்தே இருக்கின்றன. இப்படி டிஜிட்டலாகத் தோன்றி, டிஜிட்டலாகவே கரையும் தகவல்களை பேக் அப் எடுத்து வைப்பதற்காகவே `மேக்னடிக் டேப்'களை அவை பயன்படுத்துகின்றன. 1952 இல் ஐ.பி.எம் டெக்னாலஜிஸ் முதன் முதலாக மேக்னடிக் டேப்பை உருவாக்கி வெளியிட்டது. அப்போது ஒரு டேப்பில் 2.3 மெகா பைட் அளவிலான தகவல்களை மட்டுமே சேமிக்க முடிந்தது. இப்போது அதனைப் பல மடங்கு மேம்படுத்தி ஒரே ஒரு மேக்னடிக் டேப் கார்ட்ரிஞ்சில் 330 டெராபைட் அளவிலான தகவல்களை சேமித்து வைக்கும் அளவுக்கு அவை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றன. கூகுள் போன்ற டெக் ஜாம்பவான்கள் இப்படியான கார்ட்ரிஜுகளுக்கு என ஒரு பெரிய லைப்ரரியையே அமைத்துள்ளன. அதில் ஆயிரம் ஆயிரம் மேக்னடிக் டேப் காட்ரிஜுகளில் பல கோடி பேரின் தகவல்களை கட்டிக் காக்கிறது கூகுள். இது டார்க் ஏஜிற்கு எதிரான ஒரு சின்ன தீர்வாகப் பார்க்கப்படுகிறது.

மேக்னடிக் டேப் ஒரு தீர்வுதான் என்றாலும் இதிலும் ஒரு பிரச்னை உள்ளது. இந்த மேக்னடிக் டேப்களை சரியான கால இடைவெளியில் பராமரித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அப்படியில்லாமல் விட்டுவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக இதில் உள்ள தகவல்களும் சிதைவடைந்து கொண்டேயிருக்கும். இதற்கு டெக் உலகம் வைத்துள்ள பெயர் `பிட் டீகே டேட்டா ராட்' (Bit decay, data rot) சுருக்கமாக `பிட் ராட்'.  டிஜிட்டல் டார்க் ஏஜ் எதிர்கொள்ளும் ஒரு சிக்கல் தகவல்கள் கரைந்து போவது என்றால் இன்னொரு சிக்கல் இருக்கின்ற தகவல்களை நம்மால் பயன்படுத்த முடியாமல் போவது. முன்னர் நாம் பயன்படுத்திய டேப் ரெக்கார்டர்களில் இன்னமும் பாட்டுகள் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால், அவற்றை இந்தக் காலத்தில் பயன்படுத்த அதற்கு ஏற்ற சாதனங்கள் இல்லை. எனவே, அதனைப் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. இதே போல இப்போது நாம் பயன்படுத்தும் மெமரி கார்டு, பென் ட்ரைவ் போன்றவற்றுக்கு உகந்த சாதனங்கள் வருங்காலத்தில் இல்லை என்றால் அவற்றை நம்மால் பயன்படுத்த இயலாது, இதற்கு பெயர்தான் `சாப்ட்வேர் ராட்' (Software rot).

டேப் கேட்ரிட்ஜ்

இதற்கு என்னதான் தீர்வு என யோசித்தில் கிடைத்ததுதான் `டி.என்.ஏ. ஸ்டோரேஜ்' (DNA storage). இது நம் மரபணுவில் உள்ள டி.என்.ஏ அல்ல, செயற்கையாக ஒரு டி.என்.ஏ வை உருவாக்கி அதில் நம் தகவல்களை சேகரித்து வைப்பது. பல பீட்டாபைட்ஸ் ( Petabytes) அளவிலான தகவல்களை ஒரே ஒரு டி.என்.ஏ வில் சேமிக்க முடியும். ஒரு பீட்டாபைட் என்பது பல மில்லியன் ஜிகாபைட்கள் சேர்ந்தது. இதில் சேமிக்கப்படும் தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகள் வரை எந்த வித சேதாரமும் ஆகாமல் பத்திரமாக இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். யுனிவர்சிட்டி ஆஃப் வாஷிங்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், `ஸ்மோக் ஆன் தி வாட்டர்' (Smoke on the water) மற்றும் `டுடு' ( Tutu) என்ற இரண்டு இசையை ஒரு டி.என்.ஏ வில் சேமித்து, அவை இரண்டையும் எந்த வித பாதிப்புமின்றி மறுபடியும் டீகோட் செய்திருக்கிறார்கள். இது டி.என்.ஏ ஸ்டோரேஜிற்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது. 

எந்தக் காலத்தை எடுத்துக்கொண்டாலும் பிரச்னைகள் இருந்து கொண்டேதானிருக்கும். பிரச்னைகளின் தன்மைதான் மாறுபடும். இந்த டிஜிட்டல் டார்க் ஏஜிலிருந்து 21 ம் நூற்றாண்டைக் காப்பாற்றினால் அவை வரலாற்றில் பொறிக்கப்பட்டு அழியாத சின்னமாகக் காக்கப்படும். எது எப்படி இருப்பினும் `வரலாறு முக்கியம் அமைச்சரே'.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!