வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (25/06/2018)

கடைசி தொடர்பு:16:25 (25/06/2018)

பணப்பரிமாற்றம் செய்தால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்துமா வாட்ஸ்அப்? - பிரைவசி பாலிசி அப்டேட்

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பின் பேமன்ட் சர்வீஸஸ் வசதி இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் ஃபீட்டா வெர்ஷன் பெற்ற பயனர்களிடம் சோதனையில் உள்ளது. இந்த நிலையில், அதன் சேவை விதிமுறைகளையும், தனியுரிமை கொள்கைகளையும் அப்டேட் செய்வதாகத் தெரிவித்துள்ளது வாட்ஸ்அப். இதன் மூலம் கட்டணமுறை எளிமையாக இயங்க வசதி செய்யவும், பேமன்ட்  வசதியையும் சேர்ப்பதாக சொல்லியிருக்கிறது வாட்ஸ்அப். வங்கிகளுடன் UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான அனுமதியை NPCI மூலம் வாட்ஸ்அப் பெற்றுள்ளது. 

தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள விதிமுறையில் தன் பேமன்ட் சேவைகளுக்குத் தேவையான தகவல்களை வாட்ஸ்அப் பயனர்களிடம் இருந்து எடுத்துக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் வாட்ஸ்அப் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும்போது அதன் அனுப்புநர் மற்றும் பெறுநர் ஆகியோரின் பெயர்கள்,  UPI ஐடி, நேரம், தேதி, ரெஃபரன்ஸ் எண் ஆகிய தகவல்களை வாட்ஸ்அப் சேமித்துக்கொள்ளும். அது இந்தச் சேவை எப்படி செயல்படுகிறது, இதை எப்படி மேம்படுத்துவது மற்றும் இந்தச் சேவையை சந்தைப்படுத்துவது தொடர்பான செயல்களுக்கு உபயோகித்துக் கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது. 

மேலும் UPI பரிவர்த்தனைகளை ஃபேஸ்புக் மூலம் வாட்ஸ்அப் பெற்றுக்கொண்டாலும், வாட்ஸ்அப்பின் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும்போது பெறப்படும் எந்தத் தரவுகளையும் ஃபேஸ்புக் தன் வணிகப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.