உடலுக்குள் மைக்ரோசிப் பொருத்தி ‘தனி ஒருவன்’ ஆகும் ஸ்வீடன் மக்கள்... ஏன்?

உடலுக்குள் மைக்ரோசிப் பொருத்தி ‘தனி ஒருவன்’ ஆகும் ஸ்வீடன் மக்கள்... ஏன்?

அவசர உலகில் அனைத்தையும் மறந்துவிடுகிறோம். `கஜினி’ சூர்யாவைப்போல் திட்டம்போட்டு எழுதி வைத்தாலும் முக்கியமான ஆவணம் எதையாவது மறந்துவிட்டுத்தான் செல்கிறோம். ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு என ஏகப்பட்ட கார்டுகள். பணத்தால் பணப்பை நிரம்புகிறதோ இல்லையோ, கார்டுகளால் நிச்சயமாக நிரம்பிவிடும். இதையெல்லாம் சமாளிக்கத்தான் ஸ்வீடன் மக்கள் இப்படிச் செய்கிறார்கள்போல. எப்படி? ஆயிரக்கணக்கான ஸ்வீடன் மக்கள் மைக்ரோ சிப்களைத் தங்கள் தோலுக்கு அடியில் பதித்துக்கொள்கிறார்கள். இந்த மைக்ரோ சிப் கடன் அட்டைகள், ரயில் அட்டைகள்போல செயல்படுகிறது. ஒருமுறை இதனோடு இணைக்கப்பட்டுவிட்டால் உங்கள் கார்டுகளைப் பற்றி நீங்கள் எந்தக் கவலையும் பட வேண்டியதில்லை. ஸ்வீடன் மக்களின் காதல் டிஜிட்டல் உலகின் மீது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுதான் இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர். 

ஸ்வீடன் மக்கள் சிப்களைத் தங்கள் உடலில் பொருத்திக்கொள்வதற்கு சந்தோஷப்படுகிறார்கள். இதற்கான காரணம் தெரியுமா?            

ஸ்வீடன் சமூகம், ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பான அமைப்பு. இதனால் இவர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களையும் முன் வைக்கத் தயங்குவதில்லை. ஸ்வீடன்  மக்கள் தங்களின் அரசாங்கத்தை முழுவதும் நம்புகின்றனர் என்பது ஒரு பகுதியினரின் விளக்கமாக இருந்தாலும் உண்மை என்னவென்றால் ஸ்வீடன் மக்களுக்கு டிஜிட்டலின் மீதான காதல்தான் முக்கிய காரணம்.

கடந்த 20 ஆண்டுகளில் ஸ்வீடன் அரசு தொழில்நுட்ப கட்டமைப்புகளுக்கென்றே அதிக முதலீடு செய்துள்ளது. ஸ்வீடனின் பொருளாதாரம் பெரும்பாலும் டிஜிட்டல் சேவைகள், டிஜிட்டல் ஏற்றுமதி மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. "டிஜிட்டல் ஏற்றுமதிகளில் மிகவும் வெற்றிகரமான உலக நாடுகளில் ஸ்வீடனும் ஒன்றாக உள்ளது.

மைக்ரோசிப்

PC: BUSINESS INSIDER

பயோஹேக்கிங் என்பது ஒரு மாறுபட்ட கலாசாரம். இதில் தனி நபரோ சமூகமோ சிறு நிறுவனங்களோ குறிப்பிட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி தங்கள் உடலை விஞ்ஞானத்தோடு இணைத்து ஆய்வு செய்கின்றனர். இதில் பல வெவ்வேறு துணைக்குழுக்கள் உள்ளன; இவை அனைத்துக்கும் வெவ்வேறு விருப்பங்கள், இலக்குகள் மற்றும் கொள்கைகள் உண்டு. எப்படி ஒரு கம்ப்யூட்டர் ஹேக்கரால் கணினியை ஹேக் செய்ய முடியுமோ, அதுபோல பயோஹேக்கர்களாலும் உயிரியலில் எதையும் ஹேக் செய்ய முடியும். இதில் இரண்டு விதமான முக்கிய குழுக்கள் உள்ளன.

 WETWARE HACKERS : 
வெட்வேர் ஹேக்கர்கள் அறிவியலைப் பொழுதுபோக்காகக் கொண்ட உயிரியலாளர்கள். வீட்டு உபயோகப் பொருள்களைக் கொண்டே தங்களுக்கான ஆய்வு உபகரணங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். குறைந்த பட்ஜெட்டில் மலிவான விலையில் தங்களுக்கான கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தி மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விளையாட்டுத்தனமான ஆராய்ச்சியிலேயே ஈடுபடுகின்றனர். உதாரணத்துக்கு, கடல் பாசியிலிருந்து பீர் கண்டு பிடிப்பது போன்றவை.

 TRANSHUMANISTS :
இவர்களின் கவனம் முழுவதும் மனித உடல் சார்ந்தே இருக்கும். மனிதர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். மனித இனத்தை மேம்படுத்தவும், உயிரியல் எல்லைகளிலிருந்து தப்பி, செயற்கை அறிவுத் திறனோடு மனித எதிர்காலத்தை நீட்டிக்கவும் போட்டியிடுகின்றனர். 

ஐரோப்பிய பயோஹேக்கர்கள் வட அமெரிக்காவிலிருந்து வேறுபட்டவர்கள். வட அமெரிக்க குழுக்கள் பொதுவாக, சுகாதார நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.  ஐரோப்பிய குழுக்கள் மிகவும் கவனமான முறையில் மக்களுக்கு உதவும் வகையில் வளரும் நாடுகளுக்குச் செயற்கை உயிரியல் திட்டங்களைக் கண்டுபிடிக்கின்றனர்.

ஆனால், ஸ்வீடன் மக்களின் கலாசாரம் மற்ற ஐரோப்பாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஸ்வீடனின் பயோஹேக்கிங் முறையானது Transhumanist-ன்  ஒரு பகுதி. இந்த அமைப்பானது என்எப்சி சிப்களை ஆயிரக்கணக்கான ஸ்வீடன் குடிமகன்களுக்கு கை மற்றும் கட்டை விரலில் பதிக்கின்றது. இதே வகையான சிப்களை பல ஆண்டுகளாக விலங்குகளைக் கண்காணிக்க பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

என்னதான் இது டிஜிட்டல் உலகின் வளர்ச்சி என்றாலும், மக்களின் இந்த டிஜிட்டல் டெக்னாலஜியின் மீதான நம்பிக்கை ஸ்வீடன் கலாசாரத்தைப் பாதிக்கிறது என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!