வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (30/06/2018)

கடைசி தொடர்பு:10:29 (30/06/2018)

இனி மொபைல் கீழே விழுந்தால் பதற வேண்டாம்... வருகிறது மொபைலுக்கு ``ஏர்பேக்"!

அடிக்கடி அடி வாங்கும் மொபைலைக் காப்பாற்ற யாருமே இல்லையா என நினைப்பவர்களுக்குத் தீர்வாக மொபைலை பாதுகாக்க ஏர்பேக் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர்.

இனி மொபைல் கீழே விழுந்தால் பதற வேண்டாம்... வருகிறது மொபைலுக்கு ``ஏர்பேக்

ர்பேக் அமைப்பைப் பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். பெரும்பாலும் கார்களில் இருக்கும் இந்த அமைப்பானது விபத்து ஏற்படும் போது அதன் தாக்கத்தைக்  குறைக்கும் வகையில் செயல்படும். காராவது என்றாவது ஒரு நாள்தான் விபத்தில் சிக்கும். ஆனால், நாம் கையில் வைத்திருக்கும் மொபைலோ தினமும் விபத்தைச் சந்திக்கிறது. இப்படி அடிக்கடி அடி வாங்கும் மொபைலைக் காப்பாற்ற யாருமே இல்லையா என நினைப்பவர்களுக்குத் தீர்வாக மொபைலை பாதுகாக்க ஏர்பேக் போன்ற ஒன்றை உருவாக்கியிருக்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர்.

அனுபவமே சிறந்த ஆசான்

பிலிப்  ஃபிரென்ஸெல்

ஜெர்மனியில் இருக்கும் ஆலன் பல்கலைக்கழகத்தின் மாணவரான 25 வயது பிலிப் ஃபிரென்ஸெல் (Philip Frenzel) இதைப் போன்ற ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என முடிவெடுத்ததன் பின்னால் அவருக்கு நடந்த துரதிஷ்டவசமான சம்பவம் ஒன்று இருக்கிறது. ஒரு நாள் வீட்டுக்கு வந்தவுடன் அனைவரும் செய்வதைப்போல தனது சட்டையைக் கழற்றி எறிந்திருக்கிறார். ஆனால், அவசரத்தில் அதனுள்ளே விலையுயர்ந்த ஐபோன் இருந்ததை மறந்துவிட்டார். விளைவு மொபைல் கீழே விழுந்து டிஸ்ப்ளே நொறுங்கியது.

ஐபோன்

அதன் பின்னர் அதைச் சரி செய்து பயன்படுத்தி வந்தவருக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இரண்டு வாரங்களிலேயே மொபைல் செயல்படாமல் போனது. காரணம் அது கீழே விழும் போதே அதன் சர்க்யூட் போர்டில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அப்பொழுது முடிவெடுத்தவர்தான் நான்கு வருடக் கடின ஆராய்ச்சிக்குப் பின்னர் இந்த ஏர்பேக் மொபைல் கேஸை வடிவமைத்திருக்கிறார். பேர்தான் ஏர்பேக்கே தவிர இதன் வடிவமைப்பு சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. 

பிலிப்  ஃபிரென்ஸெல்

மெக்கட்ரானிக்ஸ் பட்டப்படிப்பை முடித்து விட்ட பிலிப், தற்பொழுது சந்தையில் இருக்கும் மொபைல் கேஸ்களை விட அதிகப் பாதுகாப்பு நிறைந்ததாக அதே வேளையில் எளிமையாக இருக்க வேண்டும் என நினைத்து இதை வடிவமைத்திருக்கிறார். இந்த ஏர்பேக் கேஸின் உள்ளே கீழே விழுவதை உணரும் வகையில் சென்சார்கள் இருக்கின்றன. அது மட்டுமன்றி சிலந்தியின் கால்களைப் போல காணப்படும் எட்டு ஸ்ப்ரிங்குகள் நான்கு மூலையிலும் இருக்கின்றன. மொபைல் கீழே விழும்போது சென்சார் அதை உணர்ந்து ஸ்ப்ரிங்குகளை விடுவிக்கும், அவை எதிர் எதிர்த் திசையில் விரிவடையும். இதன் மூலமாக மொபைலின் பின்புறமும், முன்புறமும் நேரடியாகத் தரையில் படுவது தடுக்கப்படும். கீழே விழுந்த பிறகு வெளியே வரும் ஸ்ப்ரிங்குகளை மீண்டும் அதே போலவே மடக்கி கேஸினுள் வைத்து விட முடியும். எனவே, இதை ஒரு முறை அல்ல எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தி ஜெர்மன் மெக்கட்ரானிக்ஸ் சொஸைட்டி (The German Mechatronics Society) இதற்கு 2018-ன் சிறந்த கண்டுபிடிப்பு எனப் பரிசளித்திருக்கிறது. இது 3D பிரின்டர் மூலமாக உருவாக்கப்பட்டிருப்பதால் இதை உருவாக்குவதற்குச் செலவும் குறைவாகத்தான் ஆகும். 

மொபைல் ஏர்பேக்

மொபைலை வாங்கிய புதிதில் கவனமாகப் பார்த்துக்கொண்டாலும் கொஞ்ச நாளைக்குப் பிறகு கணக்கே இல்லாமல் மொபைலை கீழே போடுபவர்கள் இங்கே உண்டு. என்னதான் ஹார்ட் கேஸ், ஸ்க்ரீன் கார்டு, டெம்பர்டு கிளாஸ் எனப் பல பாதுகாப்பு உத்திகளைப் பிரயோகித்தாலும் மொபைல் கீழே விழும் போது உடைவதைத் தடுக்க முடிவதில்லை. இவ்வளவு பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும் கீழே விழுந்தாலும் எப்படி மொபைல் உடைகிறது என்று பார்த்தால் அதற்குக் காரணம் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தும் எந்தப் பொருள்களுமே கீழே விழும்போது உருவாகும் அதிர்வைக் குறைப்பதில்லை என்பதுதான். மொபைல்தான் என்றில்லை எந்தப் பொருளாக இருந்தாலும் தாக்கத்துக்கு உட்படும் போது அதிர்வைக் குறைத்து, பொருளின் பரப்பில் சமமாகப் பரவச் செய்துவிட்டால் பாதிப்பைக் குறைத்து விடலாம். இந்த மொபைல் ஏர்பேக் அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்கிறது. பெரிய தடிமனான ஹார்ட் கேஸ்களுக்கு மாற்றாக இது அமையும் என எதிர்பார்க்கலாம்.

இவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோவில் சமதளப் பரப்பில் இது சரியாக வேலை செய்கிறது என்பது தெரிகிறது, அதே நேரத்தில் கரடு முரடான இடங்களில் விழுந்தால் இது எந்த அளவுக்குப் பலன் தரும் என்பது கொஞ்சம் சந்தேகம்தான். இந்த ஏர் பேக் கேஸ் இன்னும் பரிசோதனை முயற்சியில்தான் இருக்கிறது. ஒருவேளை இதன் குறைகளை சரி செய்த பிறகு இதை விற்பனைக்குக் கொண்டு வரும் முடிவில் பிலிப்  இருக்கலாம். அதற்கான முதல் முயற்சியாக இதற்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்திருக்கிறார். 

இன்னும் இதுக்கு பேடன்ட் வாங்கி கவர்மென்ட்கிட்ட அப்ரூவ் வாங்கி நாங்க எப்போ வாங்குறது? ரொம்ப நாள் ஆகும் போல என்று  யோசிக்கிறீங்களா? கவலையே படாதீங்க பாஸ். இந்நேரம் சைனா காரன் இதே மாதிரி ஒன்றை ரெடி பண்ணி அவருக்கே டெமோ பாருங்கனு அனுப்பிருப்பான். நமக்கும் அனுப்புவான் வாங்கி யூஸ் பண்ணிக்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்