”நாங்க நெளக்ரில இருந்து பேசுறோம்... வேலை வேண்டுமா?” - மாணவர்களைக் குறி வைக்கும் மோசடி

இரண்டும் ஒரே நாளில் நிகழ்ந்தச் சம்பவங்கள். அதன்பின் அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இருவரும் நெளக்ரியை நாடியிருக்கிறார்கள். அவர்கள் “நாங்கள் வேலை எதுவும் வழங்குவதில்லை. வெறும் விளம்பரம் மட்டுமே” எனச் சொல்லியிருக்கிறார்கள்.

”நாங்க நெளக்ரில இருந்து பேசுறோம்... வேலை வேண்டுமா?” - மாணவர்களைக் குறி வைக்கும் மோசடி

பொறியியல் முடித்த மாணவர்கள் பெரும்பாலானோருக்கு இருக்கும் கவலை “எப்படியாவது ஒரு வேலைக்குப் போய்விட வேண்டும்” என்பதுதான். சமூகத்தில் ”இன்ஜினீயர்கள் என்றாலே வேலை கிடைக்காது; அதுவும் ஓராண்டு வீட்டிலே இருந்துவிட்டால் அவ்வளவுதான்” என்ற கருத்து எப்படியோ பரவிவிட்டது. அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பது ஒரு பக்கம். இந்தப் பயமே மாணவர்களைப் பதற வைக்கிறது என்பதுதான் உண்மை. இந்தப் பதற்றத்தைக் காசாக்கிக் கொள்ள நினைக்கிறது ஒரு கூட்டம்.

சென்னையைச் சேர்ந்தவர் நிஷா. இன்ஜினீயரிங் முடித்தவர் கேம்பஸ் தேர்வுகளையும் பல சந்தித்திருக்கிறார். சீக்கிரம் வேலைக்குப் போக வேண்டும் என்பது மட்டுமே நிஷாவின் கவலை. அதனால், இணையத்தில் வேலைவாய்ப்புகள் தொடர்பாக எப்போதும் தேடிக் கொண்டேயிருந்திருக்கிறார். அந்த முயற்சியில் அவர் நம்பிய ஒன்று நெளக்ரி ( Naukri) இணையதளம். வேலை தேடும் எல்லோருக்குமே நெளக்ரி ஒரு மிகப்பெரி சப்போர்ட் என்பதை மறுக்க முடியாது. நெளக்ரியில் நிஷாவும் அவரது நண்பர்களும் ரெஸ்யூமை அப்லோடு செய்திருந்தார்கள்.ஒரு நாள் நிஷாவுக்கு ஓர் அழைப்பு வந்தது. 

“ஹலோ நிஷா. நாங்க நெளக்ரில இருந்து பேசுறோம். உங்க ரெஸ்யூம் பார்த்தோம்.” என்றிருக்கிறார்கள்.

வேலை தேடிக்கொண்டிருந்த நிஷாவுக்கு அது தொடர்பாக ஓர் அழைப்பே பெரு மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து பல அழைப்புகள், வேலை தொடர்பாக. கடைசியில், நிஷாவிடம் 2500 ரூபாய் பணம் கேட்டிருக்கிறார்கள். நெளக்ரி என்பதாலும், வேலை கிடைக்கப் போகிறது என்பதாலும் 2500 கட்ட முடிவு செய்தார் நிஷா. எப்படி கட்ட வேண்டும் என்பதில்தான் விஷயமிருக்கிறது.

பேடிஎம் கணக்கு இருக்கிறதா எனக் கேட்டிருக்கிறார்கள். இவரும் இருக்கிறது என்றிருக்கிறார். உங்கள் பேடிஎம் மூலம் 2500 ரூபாய் கட்டலாமா என்கிறார்கள். இவரும் சரியென்கிறார். அடுத்த நிமிடம் நிஷாவுக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது. அதிலிருக்கும்  OTP(ஓன் டைம் பாஸ்வேர்டு) எண்ணைக் கேட்கிறார்கள். நிஷாவும் கொடுக்கிறார். இவரது பேடிஎம்மிலிருந்து 2500 எடுக்கப்படுகிறது. 
நிஷா மட்டுமல்ல. அவரது நண்பருக்கும் அழைப்பு வந்திருக்கிறது. ஆனால் அவரிடம் பேடிஎம் இல்லை. அவரிடம் ஆன்லைனிலே பணம் கட்டலாம் என அவரது கிரெடிட் கார்டின் கடைசி 4 எண்ணைக் கேட்டிருக்கிறார்கள். பிறகு  OTP. இரண்டையும் கொடுத்ததும், அவரது கணக்கிலிருந்து 2500 எடுக்கப்பட்டுவிட்டது.

இரண்டும் ஒரே நாளில் நிகழ்ந்தச் சம்பவங்கள். அதன்பின் அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இருவரும் நெளக்ரியை நாடியிருக்கிறார்கள். அவர்கள் “நாங்கள் வேலை எதுவும் வழங்குவதில்லை. வெறும் விளம்பரம் மட்டுமே” எனச் சொல்லியிருக்கிறார்கள். இது தொடர்பாக விழிப்புஉணர்வு விளம்பரங்களையும் நெளக்ரி கடந்த சில ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. 

நெளக்ரி

 OTP பெற்று பணம் பறிப்பது என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. நேரிடையாக அதைக் கேட்டால் தரத் தயங்குவார்கள் என்பதால் அவர்களை ஏமாற்ற ஒரு முன்கதை தேவைப்படுகிறது. அந்தக் கதையை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எழுதுகிறார்கள் திருடர்கள். வேலை வேண்டுபவர்களுக்கு அதை வைத்து ஒரு வலை, கல்லூரியில் சீட் வேண்டுமென்றால் அதற்கொரு வலை என ஒவ்வொருவரின் வீக்னெஸ்ஸுக்கும் ஒரு திரைக்கதை எழுதுகிறார்கள். ஆனால், அனைத்துக்கும் ஒரே க்ளைமாக்ஸ். அது  OTP மற்றும் கிரெடிட் கார்டு  CVV எண்கள்.

அனைத்து வங்கிகளும் யாரிடமும்  OTP, ATM பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பகிர வேண்டாமென தொடர்ந்து அறிவுறுத்துகின்றன. ஆனாலும் எப்படியாவது சிலர் ஏமாந்துவிடுகிறார்கள். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரே ஒரு வழிதானிருக்கிறது. அது இந்த டிஜிட்டல் டிரான்ஸாக்‌ஷன்களை சரியாகப் புரிந்துகொள்வது. அதற்கு இந்த அரசும், வங்கிகளும் எடுக்கும் நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, நாம் அனைவரும் அது குறித்த விழிப்புஉணர்வை தேவையானவர்களுக்கு வழங்க வேண்டும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!