ஆப்பிள், அமேசான், சாம்சங்... எல்லோருக்கும் பயனர் தகவலை விற்ற ஃபேஸ்புக்! | Facebook sells data to apple, samsung and amazon

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (02/07/2018)

கடைசி தொடர்பு:12:20 (02/07/2018)

ஆப்பிள், அமேசான், சாம்சங்... எல்லோருக்கும் பயனர் தகவலை விற்ற ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக்

கடந்த சில மாதங்களுக்கு முன் ஃபேஸ்புக், தனது பயனர்களின் தகவல்களைத் திருடி அதை மற்ற டெக் நிறுவனங்களுக்கு விற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு அது நிரூபணமானது. அதைத் தொடர்ந்து யு.எஸ். பவர் ஹவுசின் முன் விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது, இது சம்பந்தமாக 700 பக்க அறிக்கை ஒன்று ஃபேஸ்புக் நிறுவனத்தால் முன்வைக்கப்பட்டது. அதிலிருந்து சில தகவல்களை பவர் ஹவுஸ் எனர்ஜி மற்றும் காமர்ஸ் கமிட்டி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி ஃபேஸ்புக் பல முன்னணி சீன நிறுவனங்கள் உட்பட 52 நிறுவனங்களுடன் பயனர்களின் தகவல்களைப் பகிர்ந்துள்ளது. அதில் ஆப்பிள், அமேசான், பிளாக்பெர்ரி மற்றும் சாம்சங் ஆகிய பெரிய நிறுவனங்களுடன், அலிபாபா, குவால்காம் மற்றும் பேன்டெக் உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும். இதில் சீன நிறுவனங்களான வாவே, ஓப்போ, லெனோவோ மற்றும் டி.சி.எல் ஆகிய நிறுவனங்களுக்கும் பயனர்களின் தகவல்கள் விற்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள 87 மில்லியன் பயனர்களின் டேட்டா இப்படி விற்கப்பட்டுள்ளது. 

மற்ற நிறுவனங்களின் சாதனங்களை மேம்படுத்துவதற்காக மட்டுமே தகவல்களை விற்றதாகக் கூறும் ஃபேஸ்புக், அந்த 52 நிறுவனங்களில் 38 நிறுவனங்களுடன் ஏற்கெனவே பார்ட்னர்ஷிப்பை முடித்துக்கொண்டதாகவும், மீதமுள்ள நிறுவனங்களுடனும் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பார்ட்னர்ஷிப்பை முடித்துக் கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஹவுஸ் எனர்ஜி மற்றும் காமர்ஸ் கமிட்டியின் உயர் பிரதிநிதி ஃப்ரான்க் பலோன் கூறுகையில், "முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு, ஃபேஸ்புக் கொடுத்த பதில்களைவிட நிறைய சந்தேகங்களே எஞ்சி நிற்கிறது" என்றார்.