வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (06/07/2018)

கடைசி தொடர்பு:14:29 (07/07/2018)

1 ஜிபி வேக ஜியோ ஜிகா பைபர், 4K செட்-டாப் பாக்ஸ், ஜியோ 2 மொபைல்..!

ஜியோ ஜிகா பைபர் சேவையை மைஜியோ ஆப் மற்றும் ஜியோ.காம் வலைதளம் மூலம் பெறலாம். இந்தியாவில் சுமார் 1,100 நகரங்களில் இச்சேவைத் தரப்படும்.

1 ஜிபி வேக ஜியோ ஜிகா பைபர், 4K செட்-டாப் பாக்ஸ், ஜியோ 2 மொபைல்..!

கடந்த சில ஆண்டுகளாகவே ரிலையன்ஸ் நிறுவனம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தின்போது ஜியோ குறித்த அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்திலும் ஜியோ குறித்த அறிவிப்புகள் வரும் எனப் பயனாளர்கள் அதிகமாக எதிர்பார்த்தனர். அதன்படி, இக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி, அவர் மனைவி நீட்டா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி, மகள் நிஷா அம்பானி எனக் குடும்பமே கலந்துகொண்டது. 

ஜியோ ஜிகா பைபர்

விழாவில் பேசிய முகேஷ் அம்பானி, ``ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடந்த நிதியாண்டு லாபம் 36,076 கோடியாக அதிகரித்துள்ளது. தனியார் துறையில் அதிக ஜி.எஸ்.டி மற்றும் வருமானவரி ஆகியவற்றை ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்துகிறது. ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தற்போது வரை வாடிக்கையாளர் எண்ணிக்கை 21.5 கோடியாக அதிகரித்திருக்கிறது. சர்வதேச அளவில் எந்த ஒரு தொலைத்தொடர்பு நிறுவனமும் இப்படி ஒரு வளர்ச்சியை எட்டியதில்லை. கடந்த நிதியாண்டு கணக்குப்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 20.6 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ஜியோ அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இணையப் பயன்பாடு 125 கோடி ஜி.பியிலிருந்து 240 கோடி ஜி.பியாக அதிகரித்துள்ளது. ஜியோவின் சேவை ஒவ்வொரு கிராமத்திலும் பரவியிருக்கிறது. 

மேலும், பிக்ஸட் பிராட்பேண்டு சேவையில் இந்தியா சற்று பின்தங்கியிருக்கிறது. இச்சேவையில் சர்வதேச அளவில் இந்தியாவை முதல் ஐந்து இடங்களுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் இந்நிறுவனம் இறங்கியுள்ளது. பைபர் இணையச் சேவை 2.5 லட்சம் கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பைபர் பிராண்டு சேவை ஜியோ ஜிகா பைபர் என அழைக்கப்படும்" என்றார். 

ஜியோ ஜிகா பைபர் சேவையை மைஜியோ ஆப் மற்றும் ஜியோ.காம் வலைதளம் மூலம் பெறலாம். இந்தியாவில் சுமார் 1,100 நகரங்களில் இச்சேவை தரப்படும். இந்தியா முழுவதும் முழுமையான டிஜிட்டல் தொழில்நுட்ப இணைப்பை ஏற்படுத்தவும் ரிலையன்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த ஆண்டு முடிவுக்குள் 7,500 ரீடெய்ல் ஸ்டோர்கள் அமைக்கப்பட உள்ளன. 

ஜியோ ஜிகா பைபர் சேவையில் என்ன செய்ய முடியும்? 

சிசிடிவி கேமராக்களை ஜியோ ஜிகா பைபர் மூலம் இயக்க முடியும். ஜியோ ஜிகா பைபர் சேவை மூலமாக 1 Gbps வேகத்தில் இயங்கும். மேலும் தொலைக்காட்சி மூலமாக வீடியோகால் செய்ய முடியும். 

ஜியோ

ஜியோ போன் 2 

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பழைய ஜியோ போனுடன் 501 ரூபாய் செலுத்தி புதிய ஜியோ போன் -2-வைப் பெற்றுக்கொள்ளலாம். ஜியோ போன் - 2, ஆகஸ்ட் 15 முதல் அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வரும். ஜியோ போன் - 2 விலை 2,999 ரூபாய். ஜியோ போன் 2-வில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மற்றும் யூ-டியூப் போன்ற சேவைகளைப் பயன்படுத்தலாம். 

ஜியோ ஜிகா செட்-டாப் பாக்ஸ் 

ஜியோ போன் 2 அறிவிப்பைத் தொடர்ந்து, ஜியோ ஜிகா செட்-டாப் பாக்ஸ் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்த செட்- டாப் பாக்ஸ் மூலம், 4கே (4K) தொழில்நுட்பத்திலான தியேட்டர் அனுபவத்தைப் பெற முடியும். பல மொழிகளில் வாய்ஸ் கமென்ட் கொடுக்கும் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. 

இறுதியாக, நாட்டின் சிறந்த கல்விமுறையைக் கொண்டுவர ரிலையன்ஸ் குழுமம் முயற்சி செய்து வருகிறது. அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஜியோ ஜிகா பைபர் இணைப்பதன் மூலமாகச் சிறந்த சர்வதேச வல்லுநர்களை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இதுதவிர, மருத்துவம் மற்றும் வேளாண்மைத்துறை வளர்ச்சியையும் அதிகப்படுத்திக்கொள்ள முடியும் என்கிறது ஜியோ.

அப்ப இனி டன் டனா டன் தான?

 


டிரெண்டிங் @ விகடன்