`கண்டதை ஃபார்வேடு செய்யாதீர்கள்'- வாட்ஸ்அப் நிறுவனம் அறிவுறுத்தல்! | Don't forward message if it's not sure - Whatsapp adviced

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (10/07/2018)

கடைசி தொடர்பு:13:20 (10/07/2018)

`கண்டதை ஃபார்வேடு செய்யாதீர்கள்'- வாட்ஸ்அப் நிறுவனம் அறிவுறுத்தல்!

``ஆதாரம் இல்லாமல் வரும் செய்திகளை ஃபார்வேடு செய்யவேண்டாம்'' என பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் அறிவுரை வழங்கியுள்ளது.

ஃபார்வேடு

`இந்த மெசேஜை 5 பேருக்கு ஃபார்வேடு செய்தால் பணம் கிடைக்கும்', `இந்த குழந்தை உயிருக்கு போராடுகிறது உங்கள் ஃபார்வேடு குழந்தையின் உயிரை காப்பாற்றும்',  `சாலையில் விபத்து உடனடி ரத்தம் தேவை' உள்ளிட்ட மெசேஜ்கள் வாட்ஸ்அப் செயலி பயன்பாட்டுக்கு வந்தது முதலில் இருந்தே உலாவி வருகின்றன. புதிய பயனாளர்கள் மட்டுமில்லாது, பல்வேறு தரப்பினர் வாட்ஸ்அப்பில் வரும் இத்தகையை மெசேஜ்களின் உண்மைத் தன்மை அறியாமல் ஃபார்வேடு செய்கின்றனர். இதன் மூலம் வதந்திகள் எளிதில் மற்றவர்களுக்குப் பரப்பப்படுகிறது. குழந்தைக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வதந்திகளால் கொலைகள் நடைபெறும் நிலையில், அதைத் தடுக்க வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

வாட்ஸ் அப்

கொலைகள் நடக்க காரணமாகும் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதில் தங்களுக்கான பொறுப்பு மற்றும் கடமையை வாட்ஸ்அப் நிர்வாகம் தட்டிக்கழிக்க முடியாது என தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு அனுப்பிய குறிப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்நிலையில், வதந்திகளைத் தடுக்கும் வகையில் பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில் `ஒரு செய்தியை ஃபார்வேடு செய்யும் முன் அதன் உண்மைத்தன்மையை இருமுறை பரிசோதிக்க வேண்டும். நம்ப முடியாத தகவல்கள் வரும்போது அது உண்மைதானா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். பிரபல வார்த்தைகளால் பகிரப்படும் லிங்குகளில் உள்ள வார்த்தைகளைச் சரிபார்க்க வேண்டும். பலமுறை பகிரப்பட்டுள்ளது என்பதற்காக செய்தி உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. உறுதி செய்தபின் ஃபார்வேடு செய்யவும்' என அறிவுரை வழங்கியுள்ளது.