இந்தியா நோட்டீஸ் மட்டுமே அனுப்பியது... ஆனால் பிரிட்டன்? - ஃபேஸ்புக்கிற்கு எதிராக உலக நாடுகள்

ஃபேஸ்புக்கிற்கு விதிக்கப்படும் இந்த அபராதம் அதற்கு பாதிப்பை ஏற்படுத்துமா ?

இந்தியா நோட்டீஸ் மட்டுமே அனுப்பியது... ஆனால் பிரிட்டன்? - ஃபேஸ்புக்கிற்கு எதிராக உலக நாடுகள்

யனாளர்களின் தனிப்பட்ட தகவல்களைத் தவறாக பயன்படுத்திய ஃபேஸ்புக்கிற்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்துக்கொண்டிருக்கின்றன. கேம்பிரிட்ஜ் அனலிடிகா தகவல் திருட்டு விவகாரத்தில் பற்றிய நெருப்பு அணைந்துவிட்டதைப் போல தெரிந்தாலும் இன்னும் புகைந்து கொண்டிருக்கிறது. சில மாதங்கள் அமைதியாக இருந்த இந்தப் பிரச்னை தற்பொழுது மீண்டும் செய்திகளில் அடிபடத் தொடங்கியிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் ஆரம்பித்த இந்தப் பிரச்னை ஃபேஸ்புக் நிறுவனத்தை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. உலகம் முழுவதும் தனிநபர் தகவல் பாதுகாப்பில் விவாதத்தை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படக்கூடும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

எதற்காக இந்த அபராதம்

ஃபேஸ்புக்

கேம்பிரிட்ஜ் அனலிடிகா பிரச்னை தொடங்கியதுமே பல உலக நாடுகள் இதில் கவனம் செலுத்தத் தொடங்கின. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பின. ஆனால் இந்தியா போல் வெறும் நோட்டீஸ் அனுப்பியதோடு மட்டுமின்றி சில நாடுகள் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கை நேரில் ஆஜராகி விளக்கம் தருவதற்கு உத்தரவிட்டிருந்தன. தகவல்கள் திருடப்பட்டதை ஒப்புக்கொண்ட அவர் அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இந்த விவகாரம் ஆரம்பித்து சில மாதங்கள் கடந்து விட்ட நிலையில் பிரிட்டன் அரசு முதல் முறையாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க முடிவெடுத்திருக்கிறது. பிரிட்டன் தகவல் ஆணையர் எலிசபெத் டென்ஹாம் ( Elizabeth Denham) இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். "சட்டங்களின் படி பயனாளர்களின் தகவல்களை ஃபேஸ்புக் பாதுகாக்க தவறிவிட்டது, வழக்குகள் மற்றும் அபராதங்களின் மூலமாகத் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டாலும்கூட எங்களது முதன்மையான நோக்கம் என்பது சட்டத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை மீட்டெடுப்பதுதான்" என்கிறார்  எலிசபெத் டென்ஹாம்.

ஃபேஸ்புக்கிற்கு இந்த தொகை பாதிப்பை ஏற்படுத்துமா ?

மார்க் சக்கர்பெர்க்

முன்பு பின்பற்றப்பட்ட பிரிட்டனின் தகவல் பாதுகாப்பு விதிகளின் படி ஃபேஸ்புக்கிற்கு . £500,000 பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்படலாம். இதன் மூலமாக இந்திய ரூபாய் மதிப்பில் நான்கு கோடி ரூபாயை அபராதமாகச் செலுத்த வேண்டியிருக்கும். கேம்பிரிட்ஜ் அனலிடிகா பிரச்னை 1998-ம் ஆண்டின் தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருவதால் குறைவான தொகையை மட்டுமே அரசால் அபராதமாக விதிக்க முடிந்திருக்கிறது. பழைய சட்டத்தின் படி சட்டத்தின் மூலமாக அதிகபட்சமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொகை அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்பொழுது நடைமுறையில் இருக்கும் புதிய ஐரோப்பிய பொது தகவல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இது போன்ற சிக்கல்கள் எழும் போது இதை விடக் கடுமையான விளைவுகளையும் பல மடங்கு அபராதத் தொகையும் செலுத்த வேண்டியிருக்கும். எடுத்துக்காட்டாக இந்தப் பிரச்சனை புதிய சட்டத்தின் கீழ் வந்திருந்தால் அதிகபட்சம் 20 மில்லியன் யூரோக்கள் அல்லது நிறுவனத்தின் உலகளாவிய வருமானத்தில் இருந்து 4 சதவீதத்தை அபராதமாகச் செலுத்த வேண்டியிருந்திருக்கும் ஆனால் தற்பொழுது அபராதமாக விதிக்கப்பட்டிருக்கும்  £500,000 பவுண்டுகள் என்பது பேஸ்புக்கிற்கு இது ஒன்றும் பெரிய தொகை கிடையாது, இதனால் பெரிய அளவில் இழப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை. இந்த வருடத்தின் முதல் காலாண்டு நிலவரத்தின்படி மட்டும் ஐந்தரை நிமிடங்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனத்திற்குக் கிட்டத்தட்ட நான்கரை கோடி ரூபாய் வருமானமாக வருகிறது. அப்படிப் பார்த்தால் இந்த அபராதத்  தொகையை வெறும் ஐந்தே நிமிடங்களில் ஃபேஸ்புக் ஈடுகட்டிவிடும். 

ஃபேஸ்புக்

இந்த அபராதம் தொடர்பாக விளக்கமளித்திருக்கும் ஃபேஸ்புக்கின் தலைமை தனியுரிமை பாதுகாப்பு அதிகாரியான ஏரின் ஏகன் ( Erin Egan) " நாங்கள் முன்னரே தெரிவித்தது போல இந்த விவகாரத்தில் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் மீது தேவையான அளவிற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தகவல் ஆணையர் அலுவலகத்துடன் இணைந்தே செயல்பட்டு வருகிறோம். தற்பொழுது அபராதம் தொடர்பான அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்துவிட்டு தகவல் ஆணையத்திற்குப் பதிலளிப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்.

டேட்டாதான் ஒரு நிறுவனத்திற்கு மூலதனம், வருமானம் அனைத்துமே என்ற நிலையில் இருக்கும் ஒரு நிறுவனம் அதை எவ்வளவு பாதுகாப்பாக கையாள வேண்டும் என்பதை கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரம் பல நிறுவனங்களுக்கு உணர்த்தியிருக்கும். இந்த  அபராதத் தொகை மிகக் குறைவாக தெரிந்தாலும்,  எதிர்காலத்தில் இது போன்ற சிக்கல்களின் போது இதை விடப் பல மடங்கு விளைவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அரசு விடுக்கும் எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!