முடிவுக்கு வந்தது 20 ஆண்டுக்கால யாஹூ மெஸெஞ்சர் சேவை! | Yahoo Messenger Going to Shuts Down Today

வெளியிடப்பட்ட நேரம்: 15:34 (17/07/2018)

கடைசி தொடர்பு:19:37 (17/07/2018)

முடிவுக்கு வந்தது 20 ஆண்டுக்கால யாஹூ மெஸெஞ்சர் சேவை!

90களில் இணையத்தைக் கலக்கிவந்த யாஹூ மெஸெஞ்சர் சேவை இன்றுடன் நிறுத்தப்படுகிறது.

யாஹூ

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் டிஜிட்டல் உலகத்தில் பல அபரிமிதமான வளர்ச்சிகள், கண்டுபிடிப்புகள் எனத் தொடர்ந்து நடந்துகொண்டே வருகின்றன. முந்தைய காலத்தில் நாம் தனித்தனியாகப் பயன்படுத்திய பல விஷயங்கள் தற்போது செல்போன் என்ற ஒன்று தன்னுள் அடக்கி நம் கைகளை ஆக்கிரமித்துள்ளது. ரேடியோ, கேமரா, இமெயில் என செல்போன் தன்னுள் வைத்திருக்கும் அதிசயங்கள் ஏராளம். ஒவ்வொரு புதுமையான மற்றும் எளிதான சேவை கிடைக்கும்போதும் நாம் பழைய சேவையை மறந்துவிடுகிறோம். அப்படி நிறுத்தப்பட்டது தான் பேஜர், டெலிகிராம் போன்ற சேவைகள். 

தற்போது அதன் வரிசையில் இணைந்துள்ளது யாஹூ மெஸெஞ்சர் . 1990-களில் வாழ்ந்த இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட யாஹூ மெஸெஞ்சர் சேவை இன்றுடன் நிறுத்தப்படவுள்ளது. இன்று சாட் செய்ய வாட்ஸ்அப் தொடங்கி ஏகப்பட்ட ஆப்கள் வந்துவிட்டன. ஆனால், 80களின் இறுதி மற்றும் 90களில் சாட் செய்ய இருந்த ஒரே ஆயுதம்  யாஹூ மெஸெஞ்சர்தான். ஆனால், ஜிமெயிலின் வருகைக்குப் பிறகு யாஹூ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறையத்தொடங்கியது. தற்போது இந்த மெயில் பயன்படுத்துபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவு ஜிமெயில் போன்ற மற்ற சேவைகள் வளர்ச்சியடைந்துவிட்டன. ஜூலை 17-ம் தேதி யாஹூ மெஸெஞ்சர் சேவை நிறுத்தப்படவுள்ளதாக முன்னதாகவே அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி இன்றுடன் இந்த சேவை மூடப்படுகிறது.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் வருத்தம் தெரிவித்து சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர். ‘90களில் வாழ்ந்த சிறுவர்களுக்கு மட்டுமே தெரியும் யாஹூவின் அருமை’ என்றும்  ‘நன்றி யாஹூ’  ‘ஸ்மைலிகளின் தந்தை யாஹூ’ போன்ற கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.