ரெட்மி, அஸூஸை ஓரங்கட்டுமா ஹானரின் நாட்ச் டிசைன்? #Honor9N | Huawei launches new smartphone Honor 9N

வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (30/07/2018)

கடைசி தொடர்பு:13:14 (30/07/2018)

ரெட்மி, அஸூஸை ஓரங்கட்டுமா ஹானரின் நாட்ச் டிசைன்? #Honor9N

இதே விலையில் நாட்ச் டிசைன் ஸ்மார்ட்போன்கள் குறைவுதான் என்ற போதிலும் மற்ற வசதிகள் இதில் எப்படி இருக்கின்றன?

ரெட்மி, அஸூஸை ஓரங்கட்டுமா ஹானரின் நாட்ச் டிசைன்? #Honor9N

டந்த வருடம் ஃபிளாக்ஷிப் மொபைல்களில் மட்டுமே இருந்து வந்த நாட்ச் டிஸ்ப்ளே டிசைன் கொஞ்சம் கொஞ்சமாக பட்ஜெட் செக்மெண்ட் பக்கமும் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. பட்ஜெட் மொபைல்கள் என்றாலே தோற்றத்தில் சுமாராகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றியது ஹானர் ஸ்மார்ட்போன்கள். அந்த விஷயத்தில் அப்டேட்டாக இருக்கிறது வாவே (Huawei). அடிக்கடி தனது மொபைல்களில்  புதிய வசதிகளை உடனுக்குடன் கொடுத்து வருவது மட்டுமின்றி அதன் தோற்றத்தையும் மெருகேற்றி வருகிறது. அதன் காரணமாகவே சந்தையை ஆக்கிரமித்திருக்கும் ஷியோமிக்கு கடும் போட்டியாளராக இருந்து வருகிறது. இந்நிலையில், நாட்ச் டிசைன் கொண்ட Honor 9N என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது வாவே.

ஹானர்  9N ஸ்மார்ட்போன்

ஹானர்  9N நாட்ச் மாடல்

வழக்கத்தைவிடவும் பட்ஜெட் செக்மெண்ட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் வாவே, குறிப்பிட்ட இடைவெளிகளில் புதிய ஸ்மார்ட்போன்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகிறது. புதிய மொபைல்கள் என்பதை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அதில் எந்தப் புதிய வசதியைக் கொடுக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்கிறது. அதன் காரணமாகவே புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் சற்று முன்னரே ஹானர் ஸ்மார்ட்போன்கள் புதிய வசதிகளோடு வெளியாகின்றன.  தற்பொழுது இந்த செக்மெண்டில் நாட்ச் டிஸ்ப்ளே டிசைனைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறைவு என்பதை உணர்ந்து இந்த ஹானர் 9N ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஹானர்  9N

மீடியம் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் ப்ரீமியம் லுக்கைக் கொடுக்க வேண்டும் என்பதால், இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கண்ணாடியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக மொபைல் அழகாகத் தோற்றமளிக்கும். இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் 5.84 இன்ச் டிஸ்ப்ளேவில் நாட்ச் டிசைன் உள்ளது. நாட்ச் வேண்டாம் என்றால் அதை மறைப்பதற்கும் வசதிகள் இருக்கின்றன. எனவே, 19:9 டிஸ்ப்ளேவாக மட்டுமின்றி 18:9-வாகவும் மாற்றிக்கொள்ள முடியும். பின்புறமாக டூயல் கேமராக்கள் இருக்கின்றன அதில் ஒன்று 13 மெகா பிக்ஸல் மற்றும் 2 மெகா பிக்ஸல் திறன் கொண்டவை. முன்புறமாக 16 மெகா பிக்ஸல் கேமரா இருக்கிறது

ஹானர்  9N

ஆக்டா கோர் Kirin 659 பிராஸசர் இதில் இருக்கிறது. பழைய ஹானர் ஸ்மார்ட்போன்களான Honor 7X மற்றும் Honor 9i இரண்டிலும் பயன்படுத்தப்பட்டிருந்த அதே புராஸசர்தான் இது. 3000 mAh பேட்டரி மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி இருக்கிறது. ஹார்ட்வேர் தவிர்த்து RIDE MODE, ஃபேஸ் அன்லாக், PARTY MODE என சில வசதிகள் தரப்பட்டுள்ளன. ஆண்டராய்டு ஓரியோ இயங்குதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

ஸ்மார்ட்போன்

இதே விலையில் சந்தையில் கிடைக்கும் மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் தோற்றத்தில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. கேமரா, டிஸ்ப்ளே, பெர்ஃபாமென்ஸ் என மற்ற விஷயங்களில் சற்று பின்தங்கியே இருக்கிறது. ரெட்மி  நோட் 5 ப்ரோ மற்றும் Asus Zenfone Max Pro M1 எனப் பல மொபைல்கள் ஹானர் 9N ஸ்மார்ட்போனை விடவும் சிறப்பான வசதிகளைத் தருகின்றன. ஆனால், வசதிகள் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை தோற்றம் அழகாக இருந்தால் போதும் என நினைப்பவர்கள் இந்த ஸ்மார்ட்போனைத் தேர்ந்தெடுக்கலாம். 13,999 விலையில் நாளை முதல் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வருகிறது.


டிரெண்டிங் @ விகடன்