பைக் ஓட்டிகளுக்காகத் தனி வழிகாட்டி - கூகுளின் பிரத்யேக அப்டேட்

உலகிலேயே எந்த நாட்டுக்கும் இல்லாத வகையில் இந்தியாவுக்கென்று பிரத்யேக கூகுள் மேப் அப்டேட் விரைவில் வெளிவர உள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கூகுள் மேப்

உலகின் எந்த மூலைக்கும் கூகுள் மேப் உதவியுடன் எளிதில் செல்லலாம். அந்த அளவு சாலை பற்றிய அனைத்து விஷயங்களையும் தெளிவான தகவல்களையும் நமக்குத் தருகிறது. இதுமட்டுமல்லாது அருகில் உள்ள உணவகங்கள், மருத்துவமனைகள், ஷாப்பிங் சென்டர்கள் ஆகியவற்றைக்கூட எளிதில் அடையாளம் காட்டி அதற்கான வழியையும் அதுவே சொல்லிவிடும். தற்போது கார் ஓட்டுநர்களின் தவிர்க்க முடியாத நண்பனாக மாறியுள்ளது கூகுள் மேப். இந்த நிலையில், உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத ஒரு புது மற்றும் பிரத்யேக வசதியை இந்தியாவுக்காக வழங்க உள்ளது கூகுள் நிறுவனம்.

தனிப்பட்ட சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்பதன் அடிப்படையில் நேற்று சண்டிகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கூகுள் மேப்ஸ் இந்தியாவின் திட்ட மேலாளர் அனல் கோஷ், `` கூகுள் மேப் வெறும் வழிகாட்டுதல் மட்டுமல்ல. இந்தியாவைப் பொறுத்தவரை, நாங்கள் சில பிரத்யேக வசதிகளை விரைவில் கொண்டு வர உள்ளோம். இந்தியாவில் கார்கள், லாரிகளைவிட அதிகமாக இரு சக்கர வாகனங்களே பயன்பாட்டில் உள்ளன. அதனால் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கென தனிப்பட்ட வழிக்காட்டுதல்களை நாங்கள் வெளியிட உள்ளோம். கார்கள் மற்றும் பெரிய வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில்கூட இருசக்கர வாகனங்களால் எளிதில் நுழைய முடியும்.

தற்போது நாங்கள் கொண்டுவர உள்ள இந்தச் சேவை சில எளிய வழிகளை இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு காண்பிக்கும். அதுமட்டுமல்லாது, நீங்கள் செல்லும் பாதையில் உள்ள ரயில் நிலையங்களின் அட்டவணைகள், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவற்றின் அட்டவணைகளையும் இனி கூகுள் மேப் மூலம் பார்த்துக்கொள்ளலாம். தற்போது நாங்கள் வீட்டுவசதி துறை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். இந்த முயற்சி வெற்றி பெற்றால் இனி கூகுள் மேப்பிலேயே அருகில் உள்ள பொதுக் கழிப்பிடங்களையும் அறிந்துகொள்ளலாம். இதை அரசாங்கத்தின் உதவியுடன் செய்யவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!