வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (07/08/2018)

கடைசி தொடர்பு:11:27 (07/08/2018)

``ஜியோ பாதித்ததா, 5ஜி எப்போது, தமிழகத் திட்டங்கள்!" - ஏர்டெல் சி.ஓ.ஓ அஜய் பூரி #VikatanExclusive

"ஐந்து வருடங்கள் முன்பு வரைக்கும் வாய்ஸ் கால்கள்தான் முதன்மையான வருமானம்; ஆனால், இப்போது அது டேட்டாவாக மாறிவிட்டது. வாய்ஸ் மற்றும் டேட்டா மூலம் வரும் வருமானத்தை மொபைல் பிசினஸ் என்போம். பிராட்பேண்ட், டி.டி.ஹெச் போன்றவை மூலம் வருபவற்றை நான் மொபைல் பிசினஸ் என்போம். தற்போது மொபைல் பிசினஸ் அளவுக்கு, இந்த நான் மொபைல் பிசினஸ் சேவைகளும் வருமானம் தரத்தொடங்கியிருக்கின்றன."

``ஜியோ பாதித்ததா, 5ஜி எப்போது, தமிழகத் திட்டங்கள்!

ஜியோ இந்திய டெலிகாம் சந்தையில் கால்வைத்து இரண்டாண்டுகள்தாம் ஆகின்றன். அதற்குள்ளாகவே இங்கே ஏகப்பட்ட மாற்றங்கள். முன்பு இருந்ததைவிடவும், டெலிகாம் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துவிட்டாலும், வணிகரீதியாக மிகக்கடுமையான போட்டியைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன தற்போதைய நிறுவனங்கள். ஆனால், இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் தனக்கான இடத்தை அப்படியே தக்கவைத்திருக்கிறது ஏர்டெல். தமிழகத்தில் ஏர்செல் நிறுவனம் முழுமையாகத் தன் சேவையை நிறுத்தியபோது, பெரும்பாலான வாடிக்கையாளர்களை இழுத்துக்கொண்டதும் ஏர்டெல்தான். இந்நிலையில் இந்தியா முழுவதும் ஏர்டெல் வாடிக்கையாளரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் `டிஜிட்டல் ஏர்டெல் 3.0' என்ற இலக்குடன் பயணித்துக்கொண்டிருக்கிறது இந்நிறுவனம். இன்றைய டெலிகாம் துறையின் சூழலையும், ஏர்டெல்லின் எதிர்காலத் திட்டங்களையும் குறித்துப் பேசுவதற்காக அந்நிறுவனத்தின் சி.ஓ.ஓ. அஜய் பூரியிடம் பேசினோம்.

``டெலிகாம் நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்திய டெலிகாம் சந்தை எப்படியிருக்கிறது?"

``மிகக்கடுமையான போட்டி நிறைந்த சூழல் இங்கே நிலவுகிறது. 4G-யைப் பொறுத்தவரைக்கும் முன்பு இருந்ததைவிடவும் தற்போது போட்டி அதிகரித்துவிட்டது. வாடிக்கையாளர்களின் பயன்பாடும், எண்ணிக்கையும்தான் இதற்குக் காரணம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இந்திய டெலிகாம் துறை, தற்போது வேறொரு தளத்துக்குச் சென்றுவிட்டது. இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் எங்களுடைய வாடிக்கையாளர்களை அப்படியே தக்கவைத்திருக்கிறோம். ஏர்டெல் பங்குகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அந்த வகையில் இந்தச் சூழ்நிலையை நாங்கள் சரியாகக் கையாண்டிருக்கிறோம் என நம்புகிறோம்."

Airtel wifi

``கட்டண விகிதங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைத் தாண்டி, ஏர்டெல் இந்தப் போட்டியை எப்படி எதிர்கொள்ளப்போகிறது?"

``இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியில் பங்கேற்கும் விதமாகச் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே Airtel Digital 2.0 என்ற திட்டத்தைச் செயல்படுத்தினோம். ஏர்டெல் டிவி, வின்க் மியூசிக், மை ஏர்டெல் ஆப் போன்ற முயற்சிகள் அனைத்தும் அதன்கீழ்தான் நடந்தன. தற்போது Airtel Digital 3.0 என்ற இலக்கை நோக்கிச் செயல்படப்போகிறோம். ஏர்டெல்லின் அனைத்துச் சேவைகளையும் ஒருங்கிணைக்கப்போகும் ஏர்டெல் ஹோம், பிராட்பேண்ட், டி.டி.ஹெச் சேவைகள், பேமென்ட் பேங்க் போன்ற சேவைகளை விரிவுபடுத்தவிருக்கிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் மொபைல் சேவைகளைத் தாண்டி, இவையனைத்தும் செயல்படும். ஏற்கெனவே இருக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இன்னும் நிறைய சேவைகளைப் பெறுவார்கள். இதுதவிர தொழில்நுட்ப ரீதியிலும் காலத்திற்கேற்ப அப்டேட் செய்துகொண்டே இருக்கிறோம். எனவே, நம்பர் ஒன் இடத்தை எதிர்காலத்திலும் தக்கவைப்போம்."

``ஜியோவின் வருகையை ஏர்டெல் எப்படிப் பார்க்கிறது?"

``எந்தவொரு துறையாக இருந்தாலும், போட்டி இருந்தால் அதற்கு நல்லதுதான். ஜியோவையும் நாங்கள் அப்படித்தான் பார்க்கிறோம். ஜியோ வந்தபிறகு 4G-க்கான சந்தை விரிவடைந்திருக்கிறது. பி.எஸ்.என்.எல் தவிர்த்த மொபைல் ஆபரேட்டர்களின் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்திருக்கிறது. ஏர்டெல், ஜியோ, வோடஃபோன்-ஐடியா ஆகிய மூவர் மட்டும்தான் தற்போது இந்தத் துறையில் இருக்கிறோம். இந்தளவுக்குக் கடுமையான போட்டி இருந்தாலும், எங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் பெரியளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை. சமீபத்தில்தான் டெலினாரை வாங்கியிருக்கிறோம். அதன் வாடிக்கையாளர்கள் ஏர்டெல்லிடம்தான் உள்ளனர். ஏர்செல் தன்னுடைய சேவையை நிறுத்தியபோது, அதன் வாடிக்கையாளர்களில் 50 சதவிகிதம் பேர் ஏர்டெல் நெட்வொர்க்கைத் தேர்வு செய்துள்ளனர். புதிய நிறுவனங்கள் வந்தாலும், மக்களுக்கு ஏர்டெல் மீதுள்ள நம்பிக்கையைத்தான் இது காட்டுகிறது"

அஜய் பூரி``தமிழகத்திற்கென ஏர்டெல் ஸ்பெஷல் திட்டங்கள் ஏதேனும் வைத்திருக்கிறதா?"

``ஏர்டெல்லின் வருமானத்தில் தமிழகத்தின் பங்கு சுமார் 9 சதவிகிதம். கடந்த ஆண்டு மட்டும் மொத்த வருமானம் 3.5 சதவிகிதம் உயர்ந்தது. அதற்கு முதல் காரணம் ஏர்செல்லின் சரிவுதான். தற்போது தமிழகத்தில் மட்டும் எங்களுக்கு 2 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். 41,000 கிராமங்கள் மற்றும் 1,100 நகரங்களில் எங்களின் சேவை இயங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வளவு வாடிக்கையாளர்கள் இங்கே இருப்பதால், தொடர்ந்து எங்கள் முதலீட்டை அதிகப்படுத்திக்கொண்டேதான் வருகிறோம். இங்கே முதன்முதலில் 4G சேவையைச் செயல்படுத்தியது ஏர்டெல்தான். நாளொன்றுக்கு 32 புதிய மொபைல் ஸ்டேஷன்கள் இங்கே நிறுவப்பட்டுவருகின்றன. இந்த வருடத்தில் மட்டும் சுமார் 12,000 மொபைல் பேஸ் ஸ்டேஷன்களை இங்கே நிறுவ திட்டமிட்டுள்ளோம்."

``டெலிகாம் நிறுவனங்களுக்குப் புதிய வருமான வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?"

"ஐந்து வருடங்கள் முன்பு வரைக்கும் வாய்ஸ் கால்கள்தான் முதன்மையான வருமானம்; ஆனால், இப்போது அது டேட்டாவாக மாறிவிட்டது. வாய்ஸ் மற்றும் டேட்டா மூலம் வரும் வருமானத்தை மொபைல் பிசினஸ் என்போம். பிராட்பேண்ட், டி.டி.ஹெச் போன்றவை மூலம் வருபவற்றை நான் மொபைல் பிசினஸ் என்போம். தற்போது மொபைல் பிசினஸ் அளவுக்கு, இந்த நான் மொபைல் பிசினஸ் சேவைகளும் வருமானம் தரத்தொடங்கியிருக்கின்றன. உதாரணமாக ஏர்டெல் டி.டி.ஹெச் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுதவிர பல நிறுவனங்களுடன் B2B சேவைகளுக்காகக் கைகோத்துள்ளோம். அதிலிருந்தும் பெருமளவில் வருமானம் வருகிறது. வருங்காலத்தில் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் எனப்படும் IoT டிவைஸ்களுடன் ஏர்டெல் சேவைகளைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவையெல்லாம் வருங்காலத்தில் டேட்டா பிசினஸைத் தாண்டியும், வருமானம் ஈட்டித்தருபவை."

ஏர்டெல்

``இன்னும் இரண்டு வருடங்களுக்குள் Airtel 5G-யை எதிர்பார்க்கலாமா?"

``எத்தனை வருடம் ஆகும் என்பதை இப்போதே உறுதியாகக் கூறமுடியாது. ஆனால், 5G விஷயத்தில் ஏர்டெல் முன்னணியில் இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாகக் கூறமுடியும். ஏற்கெனவே ஏர்டெல் 5G-யின் சோதனை ஓட்டத்தை நடத்தி முடித்துவிட்டோம். இனி அதற்கான தரநிர்ணயம் செய்வது, அலைக்கற்றை ஒதுக்குவது என அரசின் பணிகள்தான் மிச்சமிருக்கின்றன. அவை விரைவில் முடிந்துவிட்டால் ஏர்டெல் 5G-யை விரைவில் எதிர்பார்க்கலாம்."

நீங்க எப்படி பீல் பண்றீங்க