வெளியிடப்பட்ட நேரம்: 09:41 (09/08/2018)

கடைசி தொடர்பு:09:48 (09/08/2018)

``ஆகஸ்ட் 15ல் முன்பதிவு, 1 ஜிபி வேகம், 3 மாதம் இலவசம்?!” - ஜியோ பிராட்பேண்டு #FAQ

``ஆகஸ்ட் 15ல் முன்பதிவு, 1 ஜிபி வேகம், 3 மாதம் இலவசம்?!” - ஜியோ பிராட்பேண்டு #FAQ

சந்தையில் நுழைந்து குறுகிய காலத்திற்குள்ளாகவே மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கும் ஜியோ நிறுவனம் அதன் அடுத்த சேவையை வழங்குவதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டது. அதன் அடுத்த இலக்கு பிராட்பேண்ட் சேவைதான். ஜியோ ஜிகா பைபர் என்று பெயரிடப்பட்ட பிராட்பேண்ட் சேவை கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அது கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.

ஜியோ ஜிகா பைபர்

முதலில் இந்தியா முழுவதிலும் 1,100 நகரங்களில் ஜியோ ஜிகா பைபர் சேவையை அளிப்பதற்கு ஜியோ நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. அதன் பிறகு மற்ற இடங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். இந்தச் சேவையை பெறுவதற்கான முன்பதிவு வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ஜியோ ஜிகா பைபர் மூலமாக 1 ஜிபி வேகத்தில் பிராட்பேண்ட் சேவையைப் பயன்படுத்த முடியும் என ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது. 

பதிவு செய்வது எப்படி ?

ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் மைஜியோ ஆப் மூலமாக சேவையைப் பெறுவதற்கு பதிவு செய்து கொள்ளலாம். அல்லது ஜியோ இணையதளத்தில் லாகின் செய்தும் பதிவு செய்துகொள்ள முடியும். இதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது பதிவு இலவசம்.

சேவை உடனடியாகக் கிடைக்காது

ஜியோ ஜிகா பைபர்

தற்பொழுது இதற்கான முன்பதிவை மட்டுமே செய்துகொள்ள முடியும். ஆனால், அது சேவை வழங்குவதற்கானது இல்லை என ஜியோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. எந்த இடங்களில் முன்பதிவு கோரிக்கைகளை அதிகமாகப் பெறுகிறோமோ அந்த இடங்களில் சேவையைத் தொடங்குவதற்கு முன்னுரிமை அளிப்போம் என இதை அறிமுகப்படுத்தும்போது அம்பானி தெரிவித்திருந்தார். எனவே முன்பதிவுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த வருட இறுதிக்குள் இந்தச் சேவை முழுவதுமாக பயன்பாட்டுக்கு வரக்கூடும். 
மேலும், இதைப் பிரபலப்படுத்த ஜியோ சந்தையில் அறிமுகமாகும்போது அளித்த சில சலுகைகளை இதற்கும் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி முதல் மூன்று மாதங்களுக்கு ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் சேவை இலவசமாக வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எதிர்பார்க்கப்படும் பிளான்கள் 

ஜியோ மொத்தம் ஐந்து பிளான்களை அறிமுகப்படுத்தக் கூடும் என்ற தகவல்கள் தற்பொழுது வெளியாகியிருக்கின்றன. 

500 ரூபாய் பிளான் 
இதன் மூலமாக அதிகபட்சமாக 50Mbps வேகத்தில் 300 ஜிபி டேட்டாவைப் பெற முடியும். இதன் வேலிடிட்டி ஒரு மாதம் 

750 ரூபாய் பிளான் 
இதன் மூலமாக அதிக பட்சமாக 50Mbps வேகத்தில் 450 ஜிபி டேட்டாவை பெற முடியும். இதன் வேலிடிட்டி ஒரு மாதம் 

999 ரூபாய் பிளான் 
ஒரு மாதம் வேலிடிட்டி கொண்ட இதன் மூலமாக 100Mbps வேகத்தில் 600 ஜிபி டேட்டாவைப் பெற முடியும்.

1,299 ரூபாய் பிளான் 
இதன் மூலமாக அதிக பட்சமாக 100Mbps வேகத்தில் 750 ஜிபி டேட்டாவைப் பெற முடியும். இதன் வேலிடிட்டி ஒரு மாதம் 

1,500 ரூபாய் பிளான்
ஒரு மாதம் வேலிடிட்டி கொண்ட இதன் மூலமாக 100Mbps வேகத்தில் 900 ஜிபி டேட்டாவைப் பெற முடியும்.

பிளான்கள் பற்றிய தகவல்கள் வெளியாகிவிட்டாலும் அதில் சில குழப்பங்களும் இருக்கின்றன. கடந்த இரண்டு வருடங்களாகவே பிராட்பேண்ட் சேவையைப் பல்வேறு இடங்களில் பரிசோதனை செய்துகொண்டிருந்து ஜியோ. பரிசோதனையின்போது அதன் டவுன்லோட் வேகம் அதிகபட்சமாக 700Mbps என்ற அளவில் இருந்ததாக ஜியோ தெரிவித்திருந்தது. எனவே, இது பயன்பாட்டுக்கு வரும்போது 1 ஜிபி வேகத்தில் சேவை கிடைக்கும் எனவும் பலர் நினைத்திருந்தனர். ஆனால், தற்பொழுது வெளியில் கசிந்திருக்கும் பிளான்கள் பற்றிய தகவல்களில் அதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. இந்த ஐந்து பிளான்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகபட்ச வேகமே 100Mbps தான். அப்படியிருக்கும்போது ஜியோ எதற்காக முன்னரே 1 ஜிபி வேகம் என்று கூறியது என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்