காணாமல் போனவரை தேடும் இணையதளம்- கேரளாவுக்கு துணை நிற்கும் கூகுள் | Google’s Person Finder tool to track missing people in kerala

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (18/08/2018)

கடைசி தொடர்பு:13:25 (18/08/2018)

காணாமல் போனவரை தேடும் இணையதளம்- கேரளாவுக்கு துணை நிற்கும் கூகுள்

கேரள வெள்ளத்தால் காணாமல் போனவரை தேடுவதற்காகக் கூகுள் இந்தியா நிறுவனம் ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

கூகுள்

கேரளாவில் நூறு ஆண்டுகளாக இல்லாத அளவு பெருவெள்ளம் கரைபுரண்டோடுகிறது. அம்மாநிலத்தின் ஒரு மாவட்டத்தையும் விட்டுவைக்காத வகையில் அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்து தனித் தீவு போல் காணப்படுகிறது. வெள்ளத்திலிருந்து இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 8-ம் தேதியிலிருந்து இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பலர் காணாமல் போயிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

 PhotoCredits:Twitter/@Lovely_btsarmy_

இந்த நிலையில், வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் நிலையைப் பற்றி அறிந்துகொள்ள கூகுள் இந்தியா நிறுவனம் ஒரு பேரிடர் உதவி இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களில் உள்ள கூகுளின் இணையத் தேடுதல் பக்கத்திலேயே இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கூகுள் அளித்துள்ள  goo.gl/WxuUFp  என்ற தரவுத்தளத்தில் சென்று அங்கு வழங்கப்பட்டுள்ள இரு தேர்வுகளைப் பயன்படுத்தி எளிமையாகக் கண்டுபிடிக்கலாம். ஒன்று ஒருவரைப் பற்றி தேட வேண்டும், மற்றொன்று யாரைப் பற்றியாவது தகவல் தெரிவிக்க வேண்டும். நீங்கள் யாரைத் தேட விரும்புகிறீர்களோ அவர்களின் பெயரைப் பதிவு செய்தால் அந்தப் பெயரை ஒத்து இருக்கும் அனைத்தும் பெயர்களும் பரிந்துரைக்கும் அதில் அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம். அதேபோன்று நீங்கள் மற்றவரின் நிலை பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்றால் அதில் இருக்கும் அடுத்த ஆப்சனை கிளிக் செய்து நீங்கள் தகவல் தெரிவிக்கவேண்டியவரின் பெயரைப் பதிவிட்டு அவரைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கலாம். 

இந்தச் செய்தியை கூகுள் இந்தியா நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘ நாங்கள் எப்போது கேரள மக்களுடன் துணை நிற்போம்’ என்ற கேப்சனுடன் பதிவிட்டுள்ளனர். இதேபோன்ற முறையைக் கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.