வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (26/08/2018)

கடைசி தொடர்பு:13:04 (26/08/2018)

"வேலை செய்வதற்கு மட்டுமா கணினி? விளையாடுறதுக்கும் இருக்கு பாஸ்!” #GamingPC

2000க்கு முன்பு கணினியின் பயன்பாடு அதிகரித்த சமயத்தில் கணினித் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கணினியை மற்ற போட்டியாளர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுவதற்கு மிகுந்த கவனம் செலுத்தின.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இழுத்திருப்பது வீடியோகேம்ஸ்கள். தற்போது ஒரு செல்போன் வாங்கினால் கூட அதில்  கேம்ஸ் இருக்கின்றன. இவை ஒரு புறம் இருந்தாலும் கேம் மீது தீராத காதல் கொண்டவர்களுக்கு வரப்பிரசாதமாய் வந்ததுதான் இந்த கேமிங் பிசி (gaming pc). சாதாரண கணினியுடன் ஒப்பிடுகையில் இதன் செயல்பாடு மற்றும் வடிவமைப்பு வேறுபடும். இந்த கேமிங் கம்ப்யூட்டரை நாமே வடிவமைத்தும் கொள்ளலாம். யூடியூப் மற்றும் இணையதளங்களில் இதற்கென தகவல்கள் மற்றும் வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன. நீங்கள் இணையதளம் சென்று gaming pc என டைப் செய்தால் போதும். இப்படியெல்லாம் கம்ப்யூட்டர் இருக்கின்றனவா என உங்களை அசரடிக்கும் வண்ணம் உங்கள் கண் முன் இதன் மாடல்கள் வந்து நிற்கும். அப்படி என்னதான் இருக்கிறது இந்த gaming கம்ப்யூட்டரில்? வாருங்கள் பார்ப்போம் அதன் சிறப்பம்சத்தை.

2000க்கு முன்பு கணினியின் பயன்பாடு அதிகரித்த சமயத்தில் கணினித் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கணினியை மற்ற போட்டியாளர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கு மிகுந்த கவனம் செலுத்தின.அதில் கேம்களும் முக்கியமானது. அதற்கு முன்னரே கேம்கள் இருந்தாலும் இச்சமயத்தில் அதன் பயன்பாடும் வடிவமைப்பும் அதிகமாயின. ஒரு கட்டத்தில் கேம்களுக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து கணினி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பிரிவில் இதற்கென தனி கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இதன் தாக்கத்தை புரிந்துகொண்டு கேமிங்காக மட்டும் கணினியைத் தயாரித்து வெளியிட்டன.அதன் பிறகு அதன் வளர்ச்சி நினைத்துப் பார்த்திராத வண்ணம் விஸ்வரூபம் எடுத்தது. தற்சமயத்தில் கேமிங்காக கீபோர்ட், மவுஸ் என ஆரம்பித்துத் தனி நாற்காலி வரை கேம் விளையாடுவதற்கு ஏதுவாகக் கிடைக்கின்றன.

நமது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உபயோகிக்கும் கணினியில் மெயில் அனுப்ப, இணையதளங்களில் ஏதேனும் தரவிறக்கம் செய்வதற்கு மற்றும் இணையதளத் தேடுதலுக்கு என உபயோகப்படுத்துகிறோம்.அத்தகைய கணினியில் கேம் விளையாடினாலும் அந்த கேம்களின் திறன் மற்றும் கிராபிக்ஸ் சாதாரணமாகவே இருக்கும். ஆனால் கேமிங் கம்ப்யூட்டரில் அதன் உள்கட்டமைப்பு வேறுவிதமாக இருக்கும். உதாரணமாக மற்ற கம்ப்யூட்டரில் உபயோகிக்கும் கிராபிக்ஸ் கார்டை விட கேமிங் கம்ப்யூட்டரில் பயன்படுத்தபடும் கிராபிக்ஸ் கார்ட் ஹைவேரியண்டாக இருக்கும். இதற்கென கூலிங்ட்யூப், லிக்விட் கூலர், அதிகத் திறன் கொண்ட ரேம் என அட்டகாசமான வடிவமைப்பு கொண்டிருக்கும். சாதாரண கம்ப்யூட்டர்கள் முப்பதாயிரத்தில் தொடங்குகின்றன. சில கணினி நிறுவனங்கள் தங்கள் ஹைஎண்ட் வேரியண்டை ஒன்றரை லட்சத்திற்குள் முடித்துவிடுகின்றன. ஆனால் கேமிங் கம்ப்யூட்டர்கள் சிறப்பம்சத்திற்கு ஏற்ப அதன் விலையும் சற்று அதிகம்.

கேமிங் கணினி

தற்போது முன்னணியில் இருக்கும் சில கேமிங் கணினி நிறுவனங்களைப் பார்ப்போம்.

கணிணித் தயாரிப்பு நிறுவனமான DELL இதில் முன்னணி வகிக்கிறது. கேமிங்காக பிரத்தியேகமாக மாடலான Alienware அதன் அசுரத்தனமான செயல்பட்டால் விளையாடுபவரைத் திணறடிக்கும். இதன் விலை எண்பதாயிரத்தில் இருந்து தொடங்குகிறது. இதனை விட திறன்மிக்க கணினிகள் இருந்தாலும் விலை மற்றும் சர்வீஸ் சென்டர் போன்ற காரணங்களால் இது முன்னணியில் இருக்கிறது. டெஸ்க்டாப்பை தவிர்த்து கேமிங் பிரியர்களுக்காக லேப்டாப்பையும் இந்த நிறுவனம் தயாரிக்கிறது. இதற்குச் சரிசமமான இடத்தில் உள்ளது MSI நிறுவனம். மற்ற நிறுவனங்களை விட வடிவமைப்பில் கவனம், inbuilt processor எனத் தனித்துவமான அடையாளத்துடன் இருக்கிறது. இதன் விலை மட்டுமே இதற்கு மைனஸ் பாய்ன்டாக இருக்கிறது.

இதைத் தவிர்த்து ASUS, intel போன்ற நிறுவனங்கள் அடுத்த இடங்களைப் பெறுகின்றன. நீங்கள் கணினியில் சிறிது தேர்ச்சி பெற்றிருந்தால் உங்கள் கணினியை நீங்களே வடிவமைத்தும் கொள்ளலாம். இதற்கான உதிரிப்பாகங்கள் இணையச் சந்தையில் தாராளமாகக் கிடைக்கின்றன.


டிரெண்டிங் @ விகடன்