வெளியிடப்பட்ட நேரம்: 13:47 (27/08/2018)

கடைசி தொடர்பு:13:47 (27/08/2018)

"அதெல்லாம் பண்ண முடியாது!” - இந்திய அரசுக்கு ‘நோ’ சொன்ன வாட்ஸ்அப்

முரண்பட்ட கருத்துகளால் இருதரப்புக்கும் இடையான பேச்சுவார்த்தை இனிமேலும் தொடருமெனவே எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் முயற்சிகள் எடுத்துவந்தாலும் அரசு எதிர்பார்ப்பதைச் செய்ய மறுக்கிறது வாட்ஸ்அப்.

டந்த சில மாதங்களாகவே வாட்ஸ்அப்பில் வதந்திகள் பரவுவது அதிகரித்துள்ளன. மக்கள் பலருக்குமிடையில் வாட்ஸ்அப்பில் என்ன வந்தாலும் நம்புகின்ற மனநிலையையும் பார்க்க முடிகிறது. இந்த வதந்திகளால் ஆங்காங்கே வன்முறைகளும், குற்றங்களும் நிகழ்ந்துள்ளன. இதனால் உயிர்ப்பலிகளும் ஏற்பட்டுள்ளன. இந்தப் பாதிப்புகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த இந்திய அரசு இதைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என முடிவு செய்து கடந்த ஜூலை மாதம் வாட்ஸ்அப்பின் சில கொள்கைகளை மாற்றியமைக்குமாறு கடிதம் ஒன்றை அந்நிறுவனத்துக்கு அனுப்பியது.

``பொறுப்பற்ற, உண்மைக்குப் புறம்பான பல அபாயச் செய்திகள் பரவ முக்கியக் காரணமாக வாட்ஸ்அப் போன்ற சேவைகள் அமைந்துள்ளன. இதை அறிந்த அமைச்சரகம் இது போன்ற வதந்திகள் மற்றும் ஆபத்தான செய்திகள் பரவாமல் இருக்கு தக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு வாட்ஸ்அப் நிர்வாகத்தினரிடம் வலியுறுத்தியுள்ளது" என்று அரசுத் தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது.

வாட்ஸ்அப்பின் பதில் 

அரசின் எச்சரிக்கை கடிதத்துக்கு பதில் அளித்த வாட்ஸ் அப் நிர்வாகம் ``இந்தத் தவறான செய்திகளால் நடந்த வன்முறைகள் எங்களையும் நடுங்கச் செய்துள்ளன. ஆனால், அதே நேரத்தில் இதற்கு அனைவரும் கூட்டாகத்தான் தீர்வு காணமுடியும். இந்த வதந்திகளையும் ஆபத்தான செய்திகளையும் ஒடுக்குவதென்பது அரசு, சமூகம், தொழில்நுட்ப நிறுவனங்கள் என அனைவரும் ஒன்றிணைந்தால்தான் சாத்தியமாகும்" என்று தெரிவித்தது.

இந்த எச்சரிக்கைக்குப் பிறகு சில மாற்றங்களை தன் சேவையில் கொண்டுவந்தது வாட்ஸ்அப். இந்த மாற்றங்களுக்குப் பின் ஒரே சமயத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் ஒரு செய்தியை ஃபார்வார்டு செய்யமுடியாமல் போனது. மேலும் ஃபார்வார்டு செய்த செய்திகளில் ஃபார்வார்டு செய்யப்பட்டது என்பதை குறிப்பிட ஆரம்பித்தது. இவை அனைத்துடன் வதந்திகளை அறியாமல் பகிர்வதனால் வரும் ஆபத்துகளைப் பற்றிய விழிப்புஉணர்வு விளம்பரங்களைப் பத்திரிகைகளில் கொடுத்தது வாட்ஸ் அப்.

அரசின் இரண்டாவது எச்சரிக்கை 

இந்த மாற்றங்களால் திருப்தியடையாத இந்திய அரசு, இது நடந்த சில வாரங்களிலேயே  இரண்டாவது எச்சரிக்கை கடிதத்தையும் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பியது. இம்முறை ``இதைப் போன்ற தவறான செய்திகள் பரவும்போது எங்கிருந்து அது வந்தது என்பதை டிராக் செய்ய முடியவேண்டும். அதற்கு ஒத்துழைக்கும் முறையில் வாட்ஸ் அப் தங்கள் தொழில்நுட்பத்தை மாற்றியமைக்க வேண்டும். இந்த வதந்திகள் தங்கள் சேவை வழியாகப் பரப்பப்படும் இந்நேரத்தில் தங்களுக்கு அதில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் போல் ஒதுங்கி பொறுப்பற்று நிற்கக் கூடாது வாட்ஸ்அப்" என்று கடுமையாகக் கூறியது இந்திய அரசு.

அரசின் முக்கியக் கோரிக்கைகள் என்ன?

இந்த விஷயத்தில் வாட்ஸ்அப்பிடம் அரசு முன்வைப்பது இரண்டே கோரிக்கைகளைத்தாம்.

1. இந்தப் பொய்யான செய்திகள் எங்கிருந்து தோன்றின என்பதை டிராக் செய்ய வாட்ஸ்அப் வழிவகுக்க வேண்டும். 

2. சிறிய குழுக்கள் அமைத்து இந்த வதந்திகள் பரவாமல் இருக்க வாட்ஸ்அப் அரசுக்கு உதவவேண்டும்.

வாட்ஸ்அப்

முழு ஆல்பம் பார்க்க

வாட்ஸ்அப்பின் கருத்து என்ன?

வாட்ஸ்அப்பைப் பொறுத்தவரை அவர்களது முக்கியத் தனித்தன்மையாகக் கருதுவது வாடிக்கையாளரின் உரையாடல்கள் எதுவும் கண்காணிக்கப்படாமல் இருப்பதைத்தான். ``End-to-end encryption" என்கிற முறையின் மூலம் இதைச் சாதிக்கிறது வாட்ஸ்அப். அரசு வைக்கும் முதல் கோரிக்கையாகிய மெசேஜ் டிராக்கிங்கை நிறைவேற்ற இந்தத் தனித்தன்மையை விடக்கொடுக்க வேண்டியது கட்டாயம். ஆனால், தங்களின் முக்கியக் கொள்கையான இதை எக்காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாதெனத் திடமாகவுள்ள வாட்ஸ்அப் இதை அரசிடமும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால், இரண்டாவது கோரிக்கைக்கு, வதந்திகள் பரவாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை ஒரு குழு அமைத்து ஆலோசிக்கப்படுமெனவும் தெரிகிறது.

கடந்த வாரம் பேசிய வாட்ஸ் அப்பின் தொடர்பாளர் கார்ல் வூக் ``மக்கள் முக்கியமான தனிப்பட்ட உரையாடல்கள் பலவற்றை வாட்ஸ்அப்பில்தான் செய்கின்றனர். மருத்துவர், குடும்பம், வங்கி என அனைவரிடமும் வாட்ஸ் அப்பில் பேசும் நிலை இருக்கிறது. அரசு கேட்பதைப் போல் ட்ரெஸ் செய்ய வேண்டுமென்றால் எங்களது End-to-end encryption முறையைக் கீழிறக்க வேண்டும். எங்களது பாதுகாப்பான நம்பகமான சூழல் மாறும். இதைப் பலரும் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதை நாங்கள் ஒருபோதும் செய்யமாட்டோம், இதற்கு மாறாக மக்களுக்கு எங்களால் முடிந்த விழிப்புஉணர்வை ஏற்படுத்த முயற்சி செய்வோம்" என்று தெரிவித்தார்.

இந்த முரண்பட்ட கருத்துகளால் இருதரப்புக்கும் இடையான பேச்சுவார்த்தை இனிமேலும் தொடருமெனவே எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் முயற்சிகள் எடுத்துவந்தாலும் அரசு எதிர்பார்ப்பதைச் செய்ய மறுக்கிறது வாட்ஸ்அப். ஏற்கெனவே கடுமையாக எச்சரித்துள்ள அரசு, வாட்ஸ் அப்பிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது. கிட்டத்தட்ட 20 கோடி இந்தியப் பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப்பிற்கு இந்தியா பெரிய சந்தை. அதை விட்டுக்கொடுக்கவும் விரும்பாது வாட்ஸ் அப். எனவே, தேர்தல் நெருங்கிவரும் இவ்வேளையில் அரசுக்கும், வாட்ஸ்அப்பிற்குமான விவாதம் இன்னும் சூடுபிடித்து ஒரு முடிவைக் காணும் என்றே எதிர்பார்க்கலாம்.  

ஆனால், மக்களைக் கண்காணிக்காமல் இருந்தால் பிரச்னைகளை தீர்க்க முடியாதென்பது அரசின் பார்வை, மக்களை எந்நேரமும் கண்காணிப்பது சரி அல்ல; அது சில நேரங்களில் தவறாக முடியும் என்பது வாட்ஸ்அப்பின் பார்வை. இதில் எது சரி என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு தனி பட்டிமன்றமே நடத்தலாம். இதில் உங்கள் சப்போர்ட் யாருக்கு?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்