``புத்தகத்துக்கு நவ்லேகா, பணத்துக்கு கூகுள் பே!” - இந்தியாவுக்குக் கூகுளின் புதிய திட்டங்கள்

இந்தியாவில் உள்ள அனைத்துப் பிராந்திய மொழிகளிலும் பயன்படுத்தும் வகையில் அதன் சேவைகளை விரிவாக்க வேண்டும் என்பது கூகுளின் திட்டம்.

``புத்தகத்துக்கு நவ்லேகா, பணத்துக்கு கூகுள் பே!” - இந்தியாவுக்குக் கூகுளின் புதிய திட்டங்கள்

கூகுள் நிறுவனம் கடந்த சில வருடங்களாக `கூகுள் ஃபார் இந்தியா' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள், தயாரிப்புகள் ஆகியவை அறிமுகம் செய்யப்படும். இந்த வருடத்தின் `கூகுள் ஃபார் இந்தியா' நிகழ்ச்சி புது டெல்லியில் நடைபெற்றது. இந்தியாவில் உள்ள இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 400 மில்லியன்களுக்கும் மேல் எனவும் அதில் பெண்களின் பங்களிப்பு 45 சதவிகிதம் எனவும் கூறும் கூகுள் இது தங்களுக்குப் பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்கிறது. இந்நிகழ்வில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

சாம்சங்கின் `ஆண்ட்ராய்டு கோ' ஸ்மார்ட்போன்

ஆண்ட்ராய்டு கோ

தனது இயங்குதளமான `ஆண்ட்ராய்டை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே கூகுளின் ஆசையாக இருக்கிறது. அதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் இந்த ஆண்ட்ராய்டு கோ. ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனில் ஹார்டுவேரின் திறன் குறைவாக இருந்தாலும் சிறப்பான யூசர் எக்ஸ்பீரியன்ஸை கொடுக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இதற்காகப் பல்வேறு மொபைல் நிறுவனங்களுடன் கூகுள் இணைந்து செயல்பட்டு வருகிறது நோக்கியா, அஸுஸ், வாவே எனப் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் அடக்கம். அந்த வரிசையில் அண்மையில் இணைந்திருப்பது சாம்சங். J2 Core என்ற `ஆண்ட்ராய்டு கோ' ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர தமிழ், மலையாளம், உட்பட 28 பிராந்திய மொழிகளில் இணையதளப் பக்கங்களை ஒலி வடிவில் மாற்றும் வசதியும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் `பே'

கூகுள் பே'

கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் டெஸ் (Tez) என்ற மொபைல் பேமென்ட் ஆப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது கூகுள் நிறுவனம். அதன் பெரும்பாலான தயாரிப்புகளைப் போலவே இதுவும் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்த ஆப்பிற்கு ஒரு மாதக் கணக்குக்கு 22 மில்லியன் ஆக்டிவ் யூசர்கள் இருக்கிறார்கள், இதன் மூலமாக 750 மில்லியன் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த ஆப்பை இன்னும் பிரபலப்படுத்தும் நோக்கில் இதன் பெயர் தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. இனிமேல் இந்த ஆப் கூகுள் `பே' (Google Pay) என அழைக்கப்படும். பெயரை மட்டும் மாற்றாமல் பல புதிய வசதிகளையும் இதில் சேர்த்திருக்கிறார்கள். கூடுதல் சேவைகளை வழங்குவதற்காகக் கூகுளுடன் பல்வேறு வங்கிகள் கூட்டு சேர்ந்திருக்கின்றன. இதன் மூலமாக விரைவான லோன் வாங்குவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். 

கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி

ஏற்கெனவே கூகுள் நிறுவனம் இந்திய ரயில்வே துறையுடன் இணைந்து ரயில்வே நிலையங்களில் வைஃபை இணைப்பை வழங்கி வருகிறது. இது பயணிகளிடம் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் கிராமங்களுக்கும் அதிவேக இணையத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆந்திர அரசுடன் தற்பொழுது கைகோத்திருக்கிறது கூகுள். அரசின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனமான `ஆந்திர பிரதேஷ் ஸ்டேட் பைபர் நெட் லிமிடெட்' நிறுவனத்துடன் இணைந்து மாநிலத்தில் உள்ள 12,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப் பகுதிகளுக்கு அதிவேக இணைய வசதியைக் கொண்டு சேர்க்கும் பணியில் கூகுள் ஈடுபடும். இந்தத் திட்டத்தின் மூலமாக இதுவரை இணையத்தைப் பயன்படுத்தியிருக்காத 10 மில்லியன் மக்களிடம் அதிவேக இணைய இணைப்பு வசதி கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

`நவ்லேகா' திட்டம்

கூகுள் நவ்லேகா

இந்தியாவில் உள்ள அனைத்துப் பிராந்திய மொழிகளிலும் பயன்படுத்தும் வகையில் தங்களது சேவைகளை விரிவாக்க வேண்டும் என்பது கூகுளின் திட்டம். தற்பொழுது இணையத்தில் இருக்கும் பக்கங்கள் தொடங்கி கட்டுரைகள் வரை பெரும்பாலானவை ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. அதன் எண்ணிக்கையை அதிகரிக்க நவ்லேகா திட்டம் உதவும். எடுத்துக்காட்டாக, தற்பொழுது பிராந்திய மொழிகளில் ஒரு புத்தகத்தை இணையத்தில் பதிவேற்ற வேண்டுமென்றால் அதற்கான வழிமுறைகள் கடினமாக இருக்கின்றன. அதை நவ்லேகா எளிமைப்படுத்தும். இந்தியாவில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பதிப்பகத்தார்களிடம் சொந்தமாக இணையதள பக்கம் இல்லை அவர்கள் வெறும் பிரின்ட்டிங்கில் மட்டுமே தங்கள் பதிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அவர்களை இணையத்துக்குக் கொண்டு வருவதற்கு இந்தத் திட்டம் உதவும். புத்தகமோ, நாளிதழோ, அல்லது பத்திரிகையோ அதை எளிதாக இதில் அப்லோடு செய்து கொள்வதோடு மட்டுமன்றி இணையப் பக்கமாகவும் மாற்றிக்கொள்ள முடியும். இதற்கான பயிற்சியையும் ஆதரவையும் கூகுள் இலவசமாகவே அளிக்கும். மேலும், இதில் ஒரு புத்தகத்தின் ஒரு பக்கத்தை ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் இணையப் பக்கமாக மாற்றிக் கொள்ள முடியும். பதிப்பகத்தார்கள் தாங்கள் வெளியிடுவதற்கு வலைத்தளம் ஒன்றையும் உருவாக்கிக் கொள்ளலாம். அதன் டொமைன் மூன்று வருடம் இலவசமாக அளிக்கப்படும். இதன் மூலமாக இணையத்தில் பிராந்திய மொழிகளின் பங்களிப்பு அதிகரிக்கும் எனக் கூகுள் நம்பிக்கை தெரிவிக்கிறது. தற்பொழுது இந்தியில் மட்டுமே கிடைக்கும் இந்தச் சேவை கூடிய விரைவில் மற்ற மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!