₹10000 - க்குள் ரெட்மியின் 3 புதிய ஸ்மார்ட்போன்கள்... எதை வாங்கலாம்? | Xiaomi launches three new smartphones

வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (06/09/2018)

கடைசி தொடர்பு:21:45 (03/10/2018)

₹10000 - க்குள் ரெட்மியின் 3 புதிய ஸ்மார்ட்போன்கள்... எதை வாங்கலாம்?

நேற்று வெளியான ரெட்மியின் மூன்று ஸ்மார்ட்போன்களிலும் வசதிகளைத் தாண்டி கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. அது இவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கும் புராஸசர்கள்

₹10000 - க்குள் ரெட்மியின் 3 புதிய ஸ்மார்ட்போன்கள்... எதை வாங்கலாம்?

ட்ஜெட் செக்மென்டில் இந்த வருடத்தின் கடைசி அஸ்திரத்தை ஏவியிருக்கிறது ஷியோமி. நேற்று மட்டும் மொத்தமாக மூன்று ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இனி இந்த வருடம் முழுவதும் ஷியோமி சார்பாக களத்தில் நிற்கப்போவது இந்த ஸ்மார்ட்போன்கள்தாம். இனிமேல் இந்த வருட இறுதி வரை பட்ஜெட் செக்மென்டில் வேறு ஸ்மார்ட்போன்களை ஷியோமி அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ரெட்மி 6A, ரெட்மி 6, ரெட்மி 6 புரோ என்ற மூன்று ஸ்மார்ட்போன்களில் இருக்கும் வசதிகள் என்ன. மீண்டும் பட்ஜெட் கிங் தான்தான் என நிரூபித்திருக்கிறதா ஷியோமி?

நான்கு வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்த மீடியாடெக் புராஸசர்கள்:

மீடியாடெக்

நேற்று வெளியான மூன்று ஸ்மார்ட்போன்களிலும் வசதிகளைத் தாண்டி கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. அது இவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கும் புராஸசர்கள். மூன்றில் இரண்டு ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் புராஸசர்கள்தாம்  பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் எரிக்ஸன் நிறுவனம் காப்புரிமை மீறல் தொடர்பாக ஷியோமி மீது வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் ஷியோமி நிறுவனம் இனிமேல் இந்தியாவில் மீடியாடெக் புராஸசர்களை பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களை இறக்குமதியோ விற்பனையோ செய்வதற்குத் தடை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. எனவே இந்தியாவில் மீடியாடெக் புராஸசரைப் பயன்படுத்தி ஷியோமி இறுதியாக விற்பனை செய்த ஸ்மார்ட்போன் Xiaomi Redmi Note-தான். அதில் ல் MediaTek MTK6592 புராஸசர் பயன்படுத்தப்பட்டிருந்தது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு ஷியோமி இந்தியாவில் விற்பனை செய்யும் ஸ்மார்ட்போன்களில் குவால்காம் நிறுவனத்தின் சிப்களை மட்டுமே பயன்படுத்தி வந்தது. இந்நிலையில் எரிக்ஸன் நிறுவனம் சார்பாக ஷியோமி மீது போடப்பட்டிருந்த வழக்கில் தீர்வு எட்டப்பட்டுவிட்டது. எனவே, எங்களது சிப்செட்களை ஷியோமி இனிமேல் தாராளமாகப் பயன்படுத்தலாம் என மீடியாடெக் நிறுவனம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 மீடியாடெக்  புராஸசர்

அதன் விளைவாகவே தற்பொழுது ரெட்மி 6A, ரெட்மி 6 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மீடியாடெக் புராஸசர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்பு சீனாவில் வெளியாகும் ஷியோமியின் ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் புராஸசர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் கூட இந்தியாவில் வெளியாகும்போது அவை குவால்காம் புராஸசர்களாக மாற்றப்பட்டே அறிமுகப்படுத்தப்படும். தற்பொழுது கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு மீடியாடெக் புராஸசர்களை ஷியோமி நிறுவனம் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது. 

Xiaomi Redmi 6A

Xiaomi Redmi 6A

இதற்கு முந்தைய வெர்ஷனான ரெட்மி 5A மார்க்கெட்டில் செம ஹிட். இன்று வரை சிறப்பான என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாகக் கருதப்படும் இது 5,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போழுது அதன் அடுத்த வெர்ஷனான ரெட்மி 6A-வுக்கும் கிட்டத்தட்ட அதே விலையை நிர்ணயம் செய்திருக்கிறது ஷியோமி. விலை அப்படியே இருந்தாலும் டிஸ்ப்ளே, வடிவமைப்பு மற்றும் புராஸசர்களில் வசதிகளை மேம்படுத்தியிருக்கிறது. டிஸ்ப்ளேவின் அளவு 5.45 இன்ச், 18:9 டிஸ்ப்ளே என்பதால் சிறப்பான காட்சிகளைப் பார்க்க முடியும். வெளியில் இருந்த நேவிகேஷன் பட்டன்கள் டிஸ்ப்ளேவினுள்ளே இடம் பெயர்ந்திருக்கின்றன. குவாட்கோர் Helio A22 புராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரெட்மி 5A-வைப் போலவே 13 MP பின்புற கேமரா, 5 MP முன்புற கேமரா, 3000 mAh பேட்டரி போன்றவை இதில் அப்படியே இருக்கின்றன. 2GB+16GB வேரியன்ட் 5,999 ரூபாய்க்கும், 2GB+32GB வேரியன்ட் 6,999 ரூபாய்க்கும் இந்த மாதம் 19-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

Redmi 6

Redmi 6

என்ட்ரி லெவலில் ஷியோமியின் அடுத்த அதிரடி இந்த ஸ்மார்ட்போன்தாம். இதற்கும் ரெட்மி 6A-வுக்கும் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. இரண்டுமே ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன. இதில் இருப்பது 18:9 ரேஷியோவைக் கொண்ட 5.45 இன்ச் டிஸ்ப்ளே. ஃபிங்கர்பிரின்ட் சென்சார் பின்பக்கமாகத் தரப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஹைலைட்டாக ஷியோமி குறிப்பிடுவது இதன் டூயல் கேமராவைத்தான். இதில் பின்புறமாக 12 MP+ 5 MP டூயல் கேமராவும், 5 MP முன்புற கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்டாகோர் Mediatek MT6762 Helio P22 புராஸசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3000 mAh பேட்டரி இதில் இருக்கிறது. 3GB+32GB வேரியன்ட் 7,999 ரூபாய்க்கும், 3GB+64GB வேரியன்ட் 9,499 ரூபாய்க்கும் வரும் 10-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. 

Xiaomi Redmi 6 Pro

Xiaomi Redmi 6 Pro ஸ்மார்ட்போன்

வெளிநாடுகளில் Mi A2 Lite என்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதை ரெட்மி 6 புரோ என்று பெயரை மாற்றி MIUI இயங்குதளத்தைக் கொடுத்து இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷியோமி. இந்த ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச் FHD+ டிஸ்ப்ளேவில் நாட்ச் இருக்கிறது. 2.0 GHz ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 புராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறமாக 12 MP+ 5 MP டூயல் கேமராவும், 5 MP முன்புற கேமராவும் இருக்கிறது. இதில் 4000mAh பேட்டரி இருப்பதால் இரண்டு நாள்கள் வரை சார்ஜ் நிற்கும் என்கிறது ஷியோமி. 3GB+32GB வேரியன்ட் 10,999 ரூபாய்க்கும், 4GB+64GB வேரியன்ட் 12,999 ரூபாய்க்கும் இந்த மாதம் 11-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த மூன்று ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகின்றன. மூன்றிலுமே பேஸ் அன்லாக் வசதி இருக்கிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மீ 2 ஸ்மார்ட்போன் ஷியோமிக்குக் கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது வெளியாகி சில நாள்களுக்குள்ளாகவே மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு பட்ஜெட் கிங் தான்தான் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது ஷியோமி.


டிரெண்டிங் @ விகடன்