`போலி ஆதார் தயாரிக்கவே முடியாது'- அழுத்திச் சொல்லும் UIDAI அமைப்பு | Aadhar cannot be hacked says UIDAI

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (12/09/2018)

கடைசி தொடர்பு:14:06 (12/09/2018)

`போலி ஆதார் தயாரிக்கவே முடியாது'- அழுத்திச் சொல்லும் UIDAI அமைப்பு

ஒரு சாதாரண பேட்ச் மென்பொருள் மூலம் ஆதார் தகவல் தளத்தை ஹேக் செய்யமுடியும் என்ற திடுக்கிடும் தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. அந்தத் தகவலின்படி வெறும் 2,500 ரூபாய்க்குக் கிடைக்கும் ஒரு மென்பொருள் மூலம் உலகத்தில் இருக்கும் யார் வேண்டுமானாலும் ஒரு புதிய ஆதார் அட்டையையே உருவாக்க முடியுமாம்.

ஆதார்

இதைத் தொடர்ந்து ஆதாரை நிர்வகிக்கும் UIDAI அமைப்பு இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ``சில அமைப்புகள் ஆதாயம் வேண்டியே இப்படித் தகவல்களை வெளியிடுகின்றன. பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே இந்தச் செயல்கள் செய்யப்படுகின்றன" என்று தெரிவித்திருக்கிறது. 

மேலும், மக்கள் தகவல்களைப் பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளும் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும், தகவல்கள் அனைத்தும் முழுதாக என்கிரிப்ட் செய்யப்பட்டு 24x7 பாதுகாப்புடனே சேமிக்கப்பட்டுள்ளன எனவும் இதை ஹேக் செய்ய முடியும் என்று சொல்வது முற்றிலும் ஆதாரமற்றது என்றும் கூறியது UIDAI அமைப்பு. உரிமையாளரின் பயோமெட்ரிக் இல்லாமல் யாராலும் இந்தத் தகவல்களைப் பெறவே முடியாதாம்.

``புதிய ஆதாரை பொறுத்தவரை 10 விரல்களின் ரேகைகளும், கண்ணின் கருவிழிகளும் இதுவரை பதியப்பட்டுள்ள அனைவரின் பதிவுகளுடனும் ஒப்பிட்டுப் பார்த்த பின்பே ஆதார் வழங்கப்படும். எனவே எளிதாகப் போலி ஆதார்களைத் தயாரிக்க முடியாது. இதைத்தாண்டியும் போலிக் கணக்குகள் ஆரம்பிக்க முயன்றாலும் உயர்தர பேக்-எண்டு மென்பொருள்கள் மூலம் அவை நிராகரிக்கப்படும். இதைச் செய்ய முயற்சி செய்பவரின் கணினி அடையாளம் காணப்பட்டு காவல்துறையில் புகாரும் கொடுக்கப்படும். போலி ஆதார் செய்ய முயற்சி செய்பவர் மீது 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் இதுவரை 50,000க்கும் மேலான மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன'' எனக் கூடுதல் விளக்கமளித்தது UIDAI அமைப்பு.

தினமும் பாதுகாப்பு வசதிகள் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, மக்கள் இந்த வதந்திகளைக் கண்டு குழப்பமடைய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது UIDAI அமைப்பு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க