`முரட்டு சிங்கிள்' ஐபோனில் இனி இரண்டு சிம்... அது என்ன இ-சிம்? #HowStuffWorks

இத்தனை வருடங்கள் கழித்து ஒரு ஸ்மார்ட்போனில் டூயல் சிம் என்பது பலருக்குச் சாதாரணமான விஷயமாகத் தோன்றக்கூடும். ஆனால் ஆப்பிள் விஷயத்தில் அப்படிக் கிடையாது.

`முரட்டு சிங்கிள்' ஐபோனில் இனி இரண்டு சிம்... அது என்ன இ-சிம்? #HowStuffWorks

நீண்ட காலத்துக்குப் பின் தனது ஐபோன்களில் டூயல் சிம் வசதியைக் கொண்டுவந்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். ஐபோன் இந்த வசதியைப் பெறுவதற்கு எடுத்துக்கொண்ட காலம் பத்தாண்டுகளுக்கும் மேல். தொடக்கத்தில் சாம்சங், நோக்கியா தொடங்கி அதன் பின்னர் சந்தையை ஆக்கிரமித்த சீன நிறுவனங்கள் வரை டூயல் சிம் மொபைல்களை வெளியிட்ட போதும் கூட ஆப்பிள் தனது முடிவிலிருந்து பின் வாங்குவதாகத் தெரியவில்லை. இதற்கு முன்பு ஒவ்வொரு வருடமும் புதிய ஐபோன்களில் டூயல் சிம் வசதியை ஆப்பிள் தரும் என உலகமே எதிர்பார்க்கும். ஆனால் அது நடக்கவே நடக்காது. ஆனால் இந்த முறை ஒரு வழியாக டூயல் சிம்மைக் கொடுத்தே விட்டது.

ஐபோன் இனிமேல் முரட்டு சிங்கிள் கிடையாது

டிம்-குக்

ஆப்பிளிடம் எப்பொழுதும் ஒரு பழக்கம் உண்டு அரதப்பழசான விஷயமான இருந்தாலும் கூட அதை ஐபோனில் பயன்படுத்தி உலகத்தையே அதைப் பற்றிப் பேச வைக்கும். கடந்த வருடம் ஐபோன் X-ல் நாட்ச்சை அறிமுகப்படுத்தி அதைச் செய்தது இந்த வருடம் இ-சிம்மைப் பற்றி பேச வைத்திருக்கிறது. சாம்சங் இந்த இ-சிம் தொழில்நுட்பத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னால் 2016-ம் ஆண்டிலேயே பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்டது. ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. தற்பொழுது ஐபோனில் இ-சிம் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டவுடன் அது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

இத்தனை வருடங்கள் கழித்து ஒரு ஸ்மார்ட்போனில் டூயல் சிம் என்பது பலருக்குச் சாதாரணமான விஷயமாகத் தோன்றக்கூடும். ஆனால் ஆப்பிள் விஷயத்தில் அப்படிக் கிடையாது. எதிலுமே ஒரு புதுமையை விரும்பும் ஆப்பிள் இதிலும் அதைப் பின்பற்றியிருக்கிறது. தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் டூயல் சிம் தொழில்நுட்பத்துக்கும் புதிய ஐபோன்களில் இருக்கும் டூயல் சிம் தொழில்நுட்பத்துக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கிறது. வழக்கமான டூயல் சிம் ஸ்லாட்கள் இதில் இருக்காது. அதற்குப் பதிலாக ஐபோன் XS, XS Max மற்றும் ஐபோன் XR களில் டூயல் சிம் வசதியைத் தருவதற்கு இ-சிம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறது ஆப்பிள். இந்த ஐபோன்களில் ஒரே ஒரு சிம் ஸ்லாட்தான் இருக்கும். அதில் வழக்கம் போல ஒரு சிம் கார்டைப் பயன்படுத்த முடியும்.

ஐபோன்

 

இ-சிம் என்றால் என்ன ? 

ஐபோன்

embedded SIM என்பதுதான் eSIM எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட நாம் இப்போது பயன்படுத்தும் சிம் கார்டின் வேலையைத்தான் பார்க்கிறது. ஆனால், இந்தத் தொழில்நுட்பம் முற்றிலும் வேறுபட்டது. இவை சர்க்யூட் போர்டுகளில் நிரந்தரமாக இணைக்கப்பட்டே பயன்பாட்டுக்கு வரும். இ-சிம்கள் பொதுவாக 5 மி.மீ அல்லது 6 மி.மீ அளவு இருக்கும் இவை மதர்போர்டுகளில் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டு விடும். அதனால் வழக்கமான சிம் கார்டுகள் போல இந்த இ-சிம்களைத் தனியாக எடுத்துப் பயன்படுத்த முடியாது. இது சிலருக்கு CDMA தொழில்நுட்பத்தை ஞாபகப்படுத்தலாம். ஆனால் அதற்கும் இ-சிம் தொழில்நுட்பத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. CDMA-வில் ஒரு தொடர்பு எண்ணைப் பதிவு செய்தால் அது நிரந்தரமானதாக இருக்கும் அதை மாற்ற முடியாது. ஆனால் இ-சிம்மில் அப்படிக் கிடையாது.

நெட்வொர்க், மற்றும் சிம் உரிமையாளரின் தகவல்களை இ-சிம்மில் பதிவு செய்துகொள்ள முடியும். இதற்காக மெஷின் டூ மெஷின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் சிம்களில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் ஒரு முறை தகவல்கள் பதியப்பட்டு விட்டால் அதனை அழித்துவிட்டு மற்றொரு முறை பயன்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக மொபைல் நம்பர் போர்டபிலிட்டி மூலமாக அதே நம்பரை வேறொரு நெட்வொர்க்குக்கு மாற்ற வேண்டும் என்றால் சிம் கார்டையும் சேர்த்து மாற்ற வேண்டியிருக்கும். ஆனால், இ-சிம்களில் அந்தப் பிரச்னை இருக்காது. இவற்றை மறுநிரலாக்கம்செய்ய முடியும். பழைய தகவல்களை அழித்துவிட்டு புதிய தகவல்களைப் பதிந்துகொள்ளலாம். இ-சிம்கள் மூலமாக வழக்கமான சிம் கார்டுகளுக்கான இடமும் குறையும் என்பதால் மொபைல் போன்களின் வடிவமைப்பும் எளிதாகும்.

இ-சிம்

இந்த இ-சிம்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை 2010-ம் ஆண்டிலேயே GSMA அமைப்பு ஆராயத் தொடங்கிவிட்டது. ஆப்பிள் கடந்த வருடம் தனது வாட்ச் சீரிஸ் 3-யில் இ-சிம் வசதியைக் கொடுத்திருந்தது. தற்பொழுது ஐபோனிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்து விட்டதால் பிற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் கவனமும் இ-சிம் மீது திரும்பியிருக்கும். எனவே ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் இந்தத் தொழில்நுட்பம் பரவலாகும் வாய்ப்புகள் அதிகம். எப்பொழுதும் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் ஐபோன்கள் ஒரே மாதிரிதான் வடிவமைக்கப்படுவது வழக்கம். டூயல் சிம் என்ற ஒரு விஷயத்திற்காக அதை விட்டுக்கொடுத்திருக்கிறது ஆப்பிள். சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவு போன்ற இடங்களில் விற்பனைக்கு வரும் ஐபோன்களில் டூயல் சிம் வசதி இருந்தாலும் அதில் இ-சிம் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக டூயல் சிம் ஸ்லாட்டுகளே கொடுக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு நானோ சிம் கார்டுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இ-சிம் வசதியை அளிக்கின்றன. ஆப்பிள் இந்த இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் அதிகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!