ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன், ஐடியா... 4ஜி வேகத்தில் கில்லி யார்? #TRAIreport

Telecom Regulatory Authority of India (சுருக்கமாக TRAI) ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நெட்வொர்க்கின், டெலிகாம் சர்க்கிள் வாரியாக சராசரி இணைய வேகம் பற்றிய அறிக்கையை வெளியிடும்.

ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன், ஐடியா... 4ஜி வேகத்தில் கில்லி யார்? #TRAIreport

டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி நாளுக்கு நாள் சூடேறிக்கொண்டே போகிறது. விலையைப் பொறுத்தவரை ஜியோ வரவுக்குப் பின் எல்லோருமே பல படிகள் கீழே இறங்கி வந்துவிட்டார்கள். அடுத்து, அவர்களின் டார்கெட் மதிப்புக் கூட்டப்பட்டச் சேவைகளும் வேகமான மற்றும் நம்பகமான இணையச் சேவைதான். ஏற்கெனவே ஏர்டெல், உலக அளவின் இணைய வேகத்தைக் கண்டறிவதில் முன்னணியில் இருக்கும் Speedtest உடன் இணைந்து, தன்னுடைய நெட்வொர்க்தான் வேகமானது என விளம்பரம் செய்துவருகிறது. ஆனால், TRAI தரும் ரிப்போர்ட் வேறு விதமாக இருக்கிறது.

Telecom Regulatory Authority of India (சுருக்கமாக TRAI) ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நெட்வொர்க்கின், டெலிகாம் சர்க்கிள் வாரியாக சராசரி இணைய வேகம் பற்றிய அறிக்கையை வெளியிடும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் வெளியான அறிக்கையைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்த அறிக்கையில் இணைய வேகத்தை அப்லோடு வேகம், டவுன்லோடு வேகம் என இரண்டு விதமாகப் பிரிக்கிறார்கள். அதன்படி, இந்திய அளவில் டவுன்லோடு வேகத்தில் ஜியோவே முன்னணியில் இருக்கிறது. அதன் சராசரி 4ஜி டவுன்லோடு வேகம் 22.3Mbps. இரண்டாவது இடத்தில் இருப்பது ஏர்டெல். ஆனால், அவர்களின் சராசரி வேகம் 10 Mbps தான் என்கிறது ட்ராய். அதற்கடுத்த இடங்களில் வோடோஃபோனும் ஐடியாவும் (6.5 Mbps) இருக்கின்றன. ஜியோவின் இந்த வேகம் முந்தைய மாதங்களை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

TRAI ரிப்போர்ட்

அப்லோடு ஸ்பீடு விஷயத்தில் ஐடியா 5.9 Mbps உடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதற்கடுத்த இடங்கள் வோடோஃபோன் மற்றும் ஜியோ வசம்.

(நாம் ஓர் இணையதளத்தைப் பார்க்கிறோம் என்றால், அந்தத் தளத்தின் டேட்டா நம் மொபைலுக்கு டவுன்லோடு ஆன பின்புதான் பார்க்க முடியும். இதற்கு உதவுவது டவுன்லோடு ஸ்பீடு. நாம் ஒருவருக்கு மெயில் அனுப்புகிறோம் என்றால் அதற்கு உதவுவது அப்லோடு ஸ்பீடு. ஃபேஸ்புக்கை உதாரணமாக வைத்துச் சொன்னால், நாம் போடும் ஸ்டேட்டஸ்க்கு அப்லோடு ஸ்பீடு முக்கியம். அடுத்தவர் ஸ்டேட்டஸ் படிக்க டவுன்லோடு ஸ்பீடு முக்கியம்)

இந்த வேகக் கணக்கு எல்லாம் இந்திய அளவிலானது. சென்னையைப் பொறுத்தவரை ஜியோ கொஞ்சம் வீக் தான் என்கிறது ட்ராய். இங்கே கில்லி வோடோஃபோன்தான். அதன் டவுன்லோடு வேகம் 12 Mbps. அதற்கடுத்த இடத்தில் இருப்பது ஏர்டெல். அதன் டவுன்லோடு வேகம் 9.4 Mbps. தமிழ்நாட்டின் மற்ற ஊர்களில் ஜியோதான் கில்லி. அங்கே அதன் வேகம் 11.11 Mbps. இரண்டாமிடத்திலிருக்கும் ஏர்டெல்லின் சராசரி வேகம் 9.4 Mbps

இந்திய அளவில் அதிக வேகமான இணையம் கிடைப்பது பீகாரில்தான். அங்கே ஜியோவின் டவுன்லோடு வேகம் 33 Mbps. அப்லோடு வேகத்தில் குஜராத் முன்னிலை. அங்கே ஐடியாவின் அப்லோடு வேகம் 9.4Mbps

இவை எல்லாம் ஆகஸ்ட் மாதக் கணக்குதான். பல காரணங்களால் இந்த வேகத்தில் ஒவ்வொரு மாதமும் மாற்றம் இருக்கும். ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒவ்வொரு டெலிகாம் சர்க்கிளுக்கும், ஏன் ஒவ்வொரு டவருக்குமே இந்தக் கணக்கில் மாற்றம் இருக்கலாம். ட்ராய் அறிவித்திருக்கும் இவை எல்லாமே சராசரி வேகம்தான். உங்கள் நெட்வொர்க் சிக்னலின் பலம், மொபைல் மாடல் மற்றும் இன்னும் சில காரணிகளால் உங்களுக்குக் கிடைக்கும் இணைய வேகம் மாறக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!