வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (19/09/2018)

கடைசி தொடர்பு:14:00 (19/09/2018)

``ஒரு மாதத்தில் 1.1 கோடி புதிய ஜியோ வாடிக்கையாளர்கள்" - ட்ராய் தரும் தகவல் #TRAI_report

மத்திய அரசின் தகவல்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமாகிய ட்ராய் (TRAI) ஜூலை மாதத்துக்கான தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களைப் பற்றிய அறிக்கை ஒன்றைச் சமீபத்தில் வெளியிட்டது. இதில் மாதாந்திர வளர்ச்சியாக ஜூலை மாதம் மட்டும் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 0.89% சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஜியோவில் மட்டும் சுமார் 1.17 கோடி வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளது. இதற்கு ஜியோ மான்ஸூன் ஹங்காமா என்று சமீபத்தில் அறிவித்த சலுகைதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் 19.62 சதவிகிதத்தைக் கைப்பற்றியுள்ளது ஜியோ. மேலும் பொலிவிழந்த டாடா டொகோமோவிலிருந்து 23 லட்சம் வாடிக்கையாளர்கள் கழன்றுவிட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

ஜியோ

Photo Credit: TRAI

புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் போட்டி நிறுவனங்களுக்கும் ஜியோக்கும் இமாலய அளவு வித்தியாசம் தெரிகிறது. ஜியோவுக்கு அடுத்த இடம் பிடித்துள்ள வோடஃபோன் ஜூலை மாதம் சுமார் 6 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை மட்டும்தான் சேர்த்துள்ளது. சொல்லப்போனால் ஜியோவுக்கு அடுத்து வரும் 4 நிறுவனங்களின் எண்ணிக்கையைக் கூட்டினால் கூட ஜியோவின் எண்ணிக்கை அருகில் கூட நெருங்க முடியாது. மேலும் ஜியோவில் சேர்ந்துள்ள புதிய வாடிக்கையாளர்களில் பாதிக்கு மேல் கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்கள் தானாம். வெறும் 501 ரூபாய்க்கு தங்களின் பழைய போன்களை கொடுத்து ஜியோ போன் வாங்க முடியும் என்ற மான்ஸூன் ஹங்காமா சலுகைதான் ஜியோவின் செக் மேட் மூவ் எனக் கூறப்படுகிறது. தொடங்கிய நாள் முதலே என்ன செய்தாலும் ஜெயம் கொண்டு உச்சத்தை நோக்கி முன்னேறுகிறது ஜியோ

நீங்க எப்படி பீல் பண்றீங்க