வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (22/09/2018)

கடைசி தொடர்பு:12:05 (22/09/2018)

பே டிஎம், புக் மை ஷோ, SPI... எந்த மூவி பாஸ் நமக்கு லாபம்?

வெறும் டிக்கெட் விலை மட்டும்தான் திரும்பத் தரப்படும், இன்டர்நெட் புக்கிங் கட்டணங்கள் திரும்ப தரப்படாது. எனவே எப்படியும் ஒரு படத்துக்கு 120 ரூபாய் வந்துவிடும்.

பே டிஎம், புக் மை ஷோ, SPI... எந்த மூவி பாஸ் நமக்கு லாபம்?

மீபத்தில் திரையரங்க டிக்கெட் விலைகள் ஏறிவிட்ட நிலையில், வெளிநாடுகளில் இருப்பதைப் போல் சென்னையிலும் மாதம் முழுவதும் படங்கள் பார்க்கும் மூவி பாஸ் முறை பிரபலமடைய தொடங்கியுள்ளது. அதாவது ஒவ்வொரு முறையும் டிக்கெட் எடுப்பதற்குப் பதிலாக ஒரு  பாஸ் வாங்கிக்கொண்டால் மாதம் முழுவதும் படம் பார்க்க முடியும். இதன் மூலம் அடிக்கடி படம் பார்க்கும் சினிமா பிரியர்கள் கணிசமான தொகையைச் சேமிக்க முடியும். இது எப்படிச் செயல்படுகிறது? இதில் இருக்கும் சிக்கல்கள் என்ன? என்ன நிறுவனங்கள் எல்லாம் மூவி பாஸ் தருகின்றன? என்பதை விரிவாகக் காணலாம்.

Paytm மூவி பாஸ்

`பே டிஎம்' மூவி பாஸ் சென்னை

பிரபல தளமான `பே டிஎம்' இரண்டு விதமாக தங்களது மூவி பாஸ்களை தருகிறது. சிங்கிள் பாஸ், கப்பிள் பாஸ் என இரண்டு பாஸ்கள் உண்டு. சிங்கிள் பாஸ் 350 ரூபாய்க்கும், கப்பிள் பாஸ் 700 ரூபாய்க்கும் கிடைக்கும். இதன் மூலம் மாதம் 4 படங்களை இந்த விலையில் பார்க்க முடியும். `பே டிஎம்' தளத்தில் இருக்கும் அனைத்து சென்னை திரையரங்குக்கும் இது பொருந்தும். தற்போதுதான் டிக்கெட் நியூ தளத்தை, தங்கள் தளத்துடன் `பே டிஎம்' இணைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஐமேக்ஸ் போன்ற சிறப்பு திரையரங்குகளில் இது செல்லுபடியாகாது. மேலும், ஒரே நாளில் 2 படங்கள் பார்க்க முடியாது. பணம் செலுத்தி பாஸ் பெற்றவுடன் உங்களுக்கென சிறப்பு Promo Code கொடுக்கப்படும். அதை மாதத்தில் 4 முறை பயன்படுத்தினால் டிக்கெட்டின் விலை கேஷ்பேக்காக திரும்பத் தரப்படும். படத்துக்கு 90 ரூபாய் என்றுதான் இந்த மூவி பாஸை விளம்பரப்படுத்தி வருகிறது பே டிஎம். ஆனாலும், வெறும் டிக்கெட் விலை மட்டும்தான் திரும்பத் தரப்படும், இன்டர்நெட் புக்கிங் கட்டணங்கள் திரும்பத் தரப்படாது. எனவே, எப்படியும் ஒரு படத்துக்கு 120 ரூபாய் வந்துவிடும். எப்படியும் தற்போது டிக்கெட்கள் 160 ரூபாய்க்கு மேல் தான் முக்கிய திரையரங்குகளில் விற்கப்படுவதால் இதுவும் ஓரளவு லாபம்தான். ஆனால், விளம்பரப்படுத்துவது போல மிகப்பெரிய விஷயம் எல்லாம் இல்லை என்றே கூறத் தோன்றுகிறது.

Bookmyshow மூவி பாஸ்

புக் மை ஷோ ஃபிலிமி பாஸ் 

பே டிஎம் பாஸின் அதே அம்சங்கள்தான். ஆனால், விலை மட்டும் அதிகம். சிங்கிள் பாஸ் 449 ரூபாய்க்கும், கப்பிள் பாஸ் 899 ரூபாய்க்கும் கிடைக்கிறது. பே டிஎம் போல மாதம் 4 படங்கள் வரை இதில் பார்க்க முடியும். புக் மை ஷோ வாடிக்கையாளர் மையத்திடம் தொடர்புகொண்டு பேசுகையில் இவர்களும் இன்டர்நெட் புக்கிங் கட்டணங்களை திரும்பத் தருவதில்லை என்பது தெரியவந்தது. முன் கூறிய கணக்குப்படி இந்த பாஸ் மூலம் படம் பார்த்தால் ஒரு படத்துக்கு சுமார் 145 ரூபாய் வந்துவிடும். உங்களது அபிமான திரையரங்குகள் புக் மை ஷோவில் மட்டுமே இருக்குமானால் இந்த பாஸை வாங்கலாம். இல்லையென்றால் பே டிஎம் மூவி பாஸே சிறந்தது.

அன்லிமிடெட் மூவி பாஸ் 

இதற்கென்றே ஆரம்பிக்கப்பட்ட தனி நிறுவனமான இது, சென்னையில் உள்ள SPI சினிமாஸ் நிறுவனத்துடன் மட்டும் தற்போது ஒப்பந்தம் செய்துள்ளது. மேல் கூறிய பாஸ்கள் போன்று இதில் இத்தனை படங்கள்தான் பார்க்க வேண்டும் என்ற கணக்கு கிடையாது. மாதத்தில் எத்தனைப் படங்கள் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். ஆனால், ஒரே படத்தை மீண்டும் பார்க்க முடியாது. SPI திரையரங்குகளில் மட்டும் இருக்கும் இது, விரைவில் மற்ற திரையரங்குகளுக்கும் விரிவடையும் என்று கூறப்படுகிறது. சத்யம், எஸ்கேப், பலாஸோ எனச் சென்னையின் முக்கிய திரையரங்குகள் SPI சினிமாஸ் உடையதுதான் என்பதால் அங்கெல்லாம் இது செல்லும். ஒரு மாதத்துக்கு 349 ரூபாயும், 5 மாதங்களுக்கு 1749 ரூபாயும் இதற்கு வசூலிக்கப்படுகிறது.

Unlimited மூவி பாஸ்

படத்துக்குச் சென்று அவர்கள் கூறும் வாட்ஸ்அப் எண்ணுக்கு லைவ் லொகேஷன் ஷேர் செய்ய வேண்டும். படம் நீங்கள்தான் பார்க்கிறீர்களா என்பதை உறுதி செய்த பின் பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும். இதற்கு SPI நிறுவனத்தின் Fuel Wallet கணக்கு ஒன்று அவசியம். இதிலும் இன்டர்நெட் புக்கிங் கட்டணங்கள் திரும்பித் தரப்படாது. மாதம் 4 படம் வரை பார்க்கும் ரசிகர்களுக்கு இதுவும் பே டிஎம் மூவி பாஸும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால், 4 படங்களுக்கு மேல் பார்ப்பவர்களுக்கு இது ஜாக்பாட். அது போக, அவ்வப்போது திரையரங்கில் நாம் வாங்கும் Snacks பில்லிலும் 10 % தொகையைத் திருப்பி நம் வேலெட்டுக்கே அனுப்புகிறார்கள். அட, நன்றாக இருக்கிறதே , நாமும்  இவர்களிடம் ஒரு பாஸ் போடலாம் என்று அவர்களது வாடிக்கையாளர் மையத்திடம் விசாரிக்கையில் சில நாள்களில் மேம்படுத்தப்பட்ட திட்டங்களுடன் வருவதாகவும், அதுவரை காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டனர். அது வந்த பின் விலைகளிலும், திரையரங்குகளிலும் மாற்றங்கள் வரும் என நம்பலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்