வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (24/09/2018)

கடைசி தொடர்பு:20:47 (24/09/2018)

`பார்த்தாலே போதும்; பாஸ்வேர்டுகூட வேணாம்!' - அடுத்தகட்டத்தில் பே டிஎம்!

முகத்தின்மூலம் வாடிக்கையாளரை அடையாளம் காணும் ஃபேஷியல் ரெகக்னைசேஷன் முறைக்கு பே டிஎம் நிறுவனம் மாற உள்ளது. ஆன்லைன் பணப்பரிமாற்ற உலகில் பாஸ்வேர்டுகளை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பதுதான் பெரும்பிரச்னையாக உள்ளது. ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்ய எண்ணற்ற ஆப்கள், இணையதளங்கள் இருந்தபோதும் எந்த ஆப் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அமைகிறது. உலகிலுள்ள பெரும்பாலான ஆன்லைன் பேமன்ட் நிறுவனங்கள், பயோமெட்ரிக் முறைக்கு மாறிவருகின்றன. இதன்காரணமாக, முகத்தின்மூலம் அடையாளம் காணும் பாஸ்வேர்டு முறையானது, அடுத்த 2022-ம் ஆண்டில் 7.76 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வருமானம் தரக்கூடிய தொழில்நுட்பமாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

பே டிஎம்

பே டிஎம் நிறுவனம், தனது நிறுவனத்திலுள்ள பணியாளர்களின் கூகுள் ஆண்ட்ராய்டு செல்பேசிகளில் இந்த மென்பொருளை சோதித்துப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். இது வெற்றிபெற்றுவிட்டால், இனி இந்நிறுவன வாடிக்கையாளர்கள், கடினமான பாஸ்வேர்டுகளை உருவாக்கத் தேவையில்லை. அவற்றை மனப்பாடம் செய்யவேண்டிய, பாதுகாக்க வேண்டிய கவலையும் இல்லை. செல்பேசியின் திரையைப் பார்த்தாலே போதும், பாஸ்வேர்டு நம்மை அடையாளம் கண்டு ஓகே சொல்லும்! இந்த முறையிலும்கூட ஏமாற்றுவேலைகளைத் தவிர்ப்பதற்காக, விழியிலுள்ள வெண்படலத்தின்மூலமாகவும், ஒருமுறை கண்ணிமைப்பதன் மூலமாகவும் ஒருவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அறியும் தொழில்நுட்பத்தையும் புகுத்த உள்ளார்கள். இதன் அடுத்தகட்டமாக, கண்ணிமைப்பதன்மூலம் தனது வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் அடையாளம் காணப்பட்டு பணம் செலுத்தும் முறையைக் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது.

பே டிஎம் நிறுவனத்துக்கு நிறைய போட்டியாளர்கள் ஒருபுறம் உருவாகி வருகிறார்கள். இன்னொருபுறம், சீனாவின் அலிபாபா, வாரன் பஃபெட்டின் பெர்க்‌ஷையர் ஹேத்தவே, ஜப்பானின் சாஃப்ட்பேங்க் விஷன் ஃபண்ட் ஆகியவை பே டிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்கள். எனவே, உலகின் முன்னணி நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தவேண்டிய கட்டாயத்தால் மேலும் மேலும் தனது செயலை புதுப்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.