வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (28/09/2018)

கடைசி தொடர்பு:14:25 (28/09/2018)

ரெட்மீக்களே கொஞ்சம் ஓய்வெடுங்கள்... வந்துவிட்டன ரியல்மீயின் புதிய மொபைல்கள்! #Realme2Pro

ஷியோமிக்குப் போட்டியாகக் களமிறங்கிய ரியல்மீ, தற்போது அதையே விஞ்சும் அளவுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறது.

ரெட்மீக்களே கொஞ்சம் ஓய்வெடுங்கள்... வந்துவிட்டன ரியல்மீயின் புதிய மொபைல்கள்! #Realme2Pro

வ்வளவு நாளாக ஷியோமியின் பக்கமாக அடித்துக் கொண்டிருந்த காற்றை அப்படியே தனது பக்கமாகத் திருப்பியிருக்கிறது ரியல்மீ. 4 மாதங்களுக்கு முன்னால் ஒப்போவின் துணை நிறுவனமாகக் களத்தில் இறங்கியது இந்நிறுவனம். முதன்முதலில் அறிமுகம் செய்த ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் எதிர்பார்த்ததை விட வரவேற்பைப் பெறவே, அது கொடுத்த உற்சாகத்தில் அடுத்த 4 மாதங்களிலேயே ரியல்மீ 2 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அதன் அறிமுக நிகழ்வின்போதே இந்த மாதத்தில் அடுத்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்திருந்தது. சொன்னது போலவே நேற்றைக்கு Realme 2 Pro மற்றும் Realme C1 என இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ரியல்மீ


தற்பொழுதைய நிலவரப்படி சந்தையில் முதலிடம் பிடித்திருப்பது ஷியோமிதான். தொடக்கம் முதலே மிட்ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் செக்மென்டில் மட்டுமே கவனம் செலுத்தியது ஷியோமி. அதன் காரணமாகவே அதற்கு இந்த இடம் கிடைத்திருக்கிறது. தற்பொழுது அதன் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அசைத்துப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது ரியல்மீ. சந்தையில் காலூன்றுவதற்கு ஷியோமி என்னென்ன உத்திகளையெல்லாம் கடைப்பிடித்ததோ அதை அப்படியே பின்பற்றுகிறது ரியல்மீ. சொல்லப்போனால் அதைவிட இன்னும் வேகமாக இருக்கிறது. ஷியோமி போல இல்லாமல் ஒரு சில ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதன் மூலமாகவே வாடிக்கையாளர்களை கவரத் தொடங்கிவிட்டது.

Realme 2 Pro மற்றும் Realme C1

இந்த செக்மென்ட்டைப் பொறுத்தவரையில் ஓர் இலக்கை நிர்ணயிப்பது ஷியோமியாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அதை மாற்றிக் காட்டியது ரியல்மீ. எடுத்துக்காட்டாக 15,000 ரூபாய்க்குக் கீழே Realme 1 ஸ்மார்ட்போனில் 128 GB இன்டெர்னல் மெமரியை கொடுத்திருந்தது.

Realme 2 Pro


நேற்று அறிமுகப்படுத்திய ரியல்மீ 2 புரோ ஸ்மார்ட்போனில் Dewdrop விஷயத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இதுவரை வெளியான நாட்ச் வடிவமைப்பின் அடுத்தகட்டம் இது. டிஸ்ப்ளேவில் மேற்பகுதியில் முன்புற கேமரா மட்டும் இருக்கும். சென்சார்களும், ஸ்பீக்கரும் அந்தப் பகுதிக்குள்ளேயே அடங்கிவிடும். இதற்கு முன்பு இந்த வடிவமைப்பு ஒப்போவின் F9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இருந்தது. அதன் விலையை விட கிட்டத்தட்ட 10,000 ரூபாய் குறைவான ரியல்மீ 2 புரோவில் இதைக் கொடுத்திருக்கிறது ரியல்மீ. இந்த வடிவமைப்பில் இந்த செக்மென்ட்டில் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் இது. 6.3 இன்ச் டிஸ்ப்ளே இந்த விலையில் வேறு ஸ்மார்ட்போன்களில் கிடையாது. தொடக்கம் முதலே ஸ்மார்ட்போன்களில் லுக்கில் கவனம் செலுத்தி வருகிறது ரியல்மீ. இதன் பின்புறம் பிளாஸ்டிக்கால் ஆனதுதான் என்றாலும் அதைக் கண்ணாடி போல் மாற்றியிருக்கிறது. எனவே, இது ப்ரீமியம் லுக்கைத் தரும் என்பது உறுதி. Qualcomm Snapdragon 660 புராஸசர் இதில் இருக்கிறது.

கேமரா

பின்புறமாக 16 MP + 2 MP கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் அபெர்ச்சர் அளவு f/1.7 என்பதால் குறைவான ஒளியில் கூடத் தெளிவான போட்டோக்களை எடுக்க முடியும். 16 MP முன்புற கேமரா இருக்கிறது. 3500 mAh இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் போல இதிலும் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது ரியல்மீ. Realme 2 Pro ஸ்மார்ட்போன் மூன்று வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. 4GB RAM + 64GB வேரியன்ட் 13,990 ரூபாய், 6GB RAM + 64GB வேரியன்ட் 15,990 ரூபாய் மற்றும் 8GB RAM + 128GB வேரியன்ட் 17,990 ரூபாய்.

Realme C1

அடுத்ததாக Realme C1 ஸ்மார்ட்போன். என்ட்ரி லெவலில் இருக்கும் ஸ்மார்ட்போன்களுடன் போட்டி போடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது, குறிப்பாக ரெட்மியுடன். இந்த விலையில் நாட்ச் வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அவ்வளவாகக் கிடையாது. அதை மனதில் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6.2 இன்ச் டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. பின்புறமாக 13 MP + 2 MP கேமராவும், முன்புறமாக 5 MP கேமராவும் இருக்கிறது. Qualcomm Snapdragon 450 புராஸசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4230 mAh பேட்டரி நிச்சயமாக ஒரு நாளை தாண்டியும் தாக்குப்பிடிக்கும் வாய்ப்புள்ளது. ரியல்மீ 1 போல, இதில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் கிடையாது. அதற்குப் பதிலாக பேஸ் அன்லாக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை 6,999 ரூபாய்.