வெளியிடப்பட்ட நேரம்: 19:04 (03/10/2018)

கடைசி தொடர்பு:20:36 (03/10/2018)

நேட்டிவ் 3D, அனிமேட்ரானிக்ஸ், வி-கேம்... #2Point0 டெக்னிக்கல் சீக்ரெட்ஸ்!

உருவங்களில் இருக்கும் ஒவ்வொரு போனையும் அப்படியே இருப்பதைப் போன்று ஒரு ஃப்ரேம் ரெண்டெர் ஆவதற்கே சில மணிநேரங்கள் ஆகும். 2.0-வில் மொத்தம் இதுபோன்று கிட்டத்தட்ட 1300 VFX ஷாட்கள் இருக்கின்றனவாம்.

நேட்டிவ் 3D, அனிமேட்ரானிக்ஸ், வி-கேம்... #2Point0 டெக்னிக்கல் சீக்ரெட்ஸ்!

நேற்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடித்து ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாகத் தயாராகிவரும் 2.0 படத்தின் 4 வது மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. இதில் 2.0 படத்தில் என்னென்ன தொழில்நுட்பங்கள் எல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ஓர் இடத்தில் காட்டப்பட்டது. அந்த டெக்னிக்கல் விஷயங்கள் என்னென்ன என்பதை விரிவாகக் காண்போம்.

நேட்டிவ் 3D 

லிஸ்ட்டில் முதலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இது, படம் நேட்டிவ் 3D-யில் படமாக்கப்பட்டது என்பதைக் குறிப்பிடுகிறது. அதாவது ஹாலிவுட்டில் முக்கால்வாசி படங்கள் 2D முறையில் படம்பிடிக்கப்பட்டு பின்தான் 3D-க்கு மாற்றப்படும். நேரடியாக 3D-யில் படமாக்கப்பட்ட படங்கள் வெகு சிலவே (தற்போதுதான் சூப்பர் ஹீரோ படங்களின் தொடர் வருகையால் அதைச் செய்து வருகின்றனர்). இப்படி 2D-யில் படம் பிடித்து 3D-யில் மாற்றுவதால் ஓரளவுதான் 3D டெப்த்தை நம்மால் உணர முடியும். உயர்ரக 3D கேமராக்கள் மூலம் 3D-யிலேயே படம்பிடிப்பது மூலம் மட்டுமே நல்ல ஒரு டெப்த்தை உணர முடியும். ஆனால், இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. சாதாரண 2D-யில் எடுப்பதுபோல் பல வசதிகள் இதில் இருக்காது. எனவே, மிகவும் கடினமான முறையில்தான் 2.0 3D-யில் படமாக்கப்பட்டுள்ளது. 2D-யை விடவும் 3D-யில் VFX சேர்ப்பதும் மிகவும் கடினம். ஹாலிவுட் படங்களே அதனால்தான் இதை அதிகம் கையில் எடுப்பதில்லை. 

அனிமேட்ரானிக்ஸ்

இது ஜுராசிக் பார்க் போன்ற படங்களில் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம். இதில் மிருகத்தைப் போன்றே ஓர் இயந்திர மாதிரி உருவாக்கப்பட்டு அதன் நகர்வுகள் உருவாக்கப்படும். ஜுராசிக் பார்க்கில் வரும் டைனோசர்களுக்கு இந்தத் தொழில்நுட்பத்தின் உதவியுடன்தான் திரையில் உயிர்கொடுக்கப்பட்டன. இதே போன்று இன்று இருக்கும் மேம்பட்ட அனிமேட்ரானிக்ஸ் மூலம் 2.0-விலும் பறவைகள் அல்லது பிரமாண்ட உருவங்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

ப்ரீ-விஸ் 

ப்ரீ-விஸ் எனப்படும் இது எந்திரனிலேயே பயன்படுத்தப்பட்ட ஒன்று. ப்ரீ-விசுவலைசேஷன் எனப்படும் இதன்மூலம் மொத்த காட்சியையும் படப்பிடிப்புக்கு முன்பே அனிமேஷனாகத் தயாரிப்பார்கள். இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு காட்சிகள் படம்பிடிக்கப்படும். இதைப்போன்று பெரும்செலவில் எடுக்கப்படும் படங்களில் இதைச் செய்வதன் மூலம், தெளிவான திட்டமிடலுடன் படப்பிடிப்புக்குச் செல்லலாம். செலவுகள் வீணாகாமல் பார்த்துக்கொள்ளலாம். VFX நிறுவனங்களிடமும் இதை சாம்பிளாகக் காட்டி வேண்டியதை வாங்க முடியும்.

டெக்னிக்கல்

வி-கேம் 

விர்ச்சுவல் கேமரா எனப்படும் இந்தத் தொழில்நுட்பம் மூலம் ஒரு 3D ஸ்பேஸில் எங்கு கேமரா வைத்தால் எந்தக் காட்சி வருமென ஓர் இடத்தில் இருந்தே பார்க்க முடியும். மேலும் அவதார் படத்துக்காக உருவாக்கப்பட்ட ப்யூசின் கேமரா சிஸ்டம் என்ற செட்டப்பில்தான் 2.0-வும் படமாக்கப்பட்டுள்ளது.  

ஸ்பைடர்கேம் 

இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கு முன்பே தெரிந்திருக்கும். மைதானத்தின் நடுவே இருக்கும் கேபிள்களில் தொங்கியபடியே போட்டிகளைப் படம்பிடிப்பவைதான் இந்த ஸ்பைடர் கேமராக்கள். தேவைப்படும் நேரத்தில் வீரர்கள் அருகில் சென்று படம்பிடிப்பதற்காக கேபிள்களில் சுற்றிக்கொண்டே இருக்கும். இதையும் 2.0-வில் வரும் முக்கிய மைதானக் காட்சியில் பயன்படுத்தியிருக்கின்றனர்.

2.0

லிடார் ஸ்கேன்னிங்

படப்பிடிப்பு தளம், போடப்பட்டிருக்கும் செட் என அனைத்தையும் ஸ்கேன் செய்து 3D மாடல்கள் 2.0-வில் உருவாக்கப்பட்டுள்ளன. இதைச் செய்ய உதவியுள்ள தொழில்நுட்பம்தான் லிடார் ஸ்கேனிங். ஓர் இடத்தில் இருந்து சுற்றிச்சுற்றி லேசர் ஒளி அனுப்பி திரும்பப் பெறப்படும் பேட்டர்ன்களை வைத்து இதைச் செய்கிறது. பாகுபலியில்கூட இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தது

மேலும், போன்களை மட்டுமே கொண்டு முழு உருவங்களை VFX-ல் உருவாக்கியுள்ளனர். உருவங்களில் இருக்கும் ஒவ்வொரு போனையும்  அப்படியே இருப்பதைப் போன்று ஒரு ஃப்ரேம் ரெண்டெர் ஆவதற்கே சில மணிநேரம் ஆகும். 2.0-வில் மொத்தம் இதுபோன்று கிட்டத்தட்ட 1300 VFX ஷாட்கள் இருக்கின்றனவாம். மேலும், மேக் அப்பிலும் முன்னணி நிறுவனங்கள்தான் இதில் வேலை பார்த்துள்ளனர்.

பெரும் குழுக்களாகப் பல்வேறு இடங்களில் (25 VFX ஸ்டுடியோஸ்) 2.0-வின் வேலைகள் நடந்து வந்தும் தாமதம் ஏற்பட்டதுக்கு முக்கிய காரணம் இந்தக் கடினமான தொழில்நுட்ப வேலைகள்தானாம். 2D என்றால்கூட விரைவில் இது முடிந்திருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. திரைக்குப் பின்னால் நடந்த இத்தனை உழைப்பும், திரையில் நமக்கு என்ன அனுபவத்தைத் தரப்போகிறது என்பதைப் படம் வரும்போது பார்ப்போம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க