வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (15/10/2018)

கடைசி தொடர்பு:15:30 (15/10/2018)

``Delete for Everyone’ வசதியில் மாற்றங்கள் செய்யும் வாட்ஸ்அப்!

பிறருக்கு அனுப்பிய செய்திகளை முழுமையாக அழிப்பதற்காக Delete for everyone வசதியை சில மாதங்களுக்கு முன்புதான் அறிமுகம் செய்திருந்தது வாட்ஸ்அப். முதலில் மெசேஜை அழிப்பதற்கான நேர அளவை 7 நிமிடங்கள் மட்டுமே அளித்த வாட்ஸ்அப் பின்னர் அதை 1 மணி நேரம், 8 நிமிடம், 16 நொடிகளாக நீட்டித்தது. இதன்படி வாட்ஸ்அப்பில் யாருக்கேனும் தவறுதலாக ஏதேனும் செய்தி அனுப்பிவிட்டால், அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் நம்மால் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். வாட்ஸ்அப் பயனாளர்களிடம் அதிக வரவேற்பு பெற்ற இந்த வசதியில் தற்போது சிறியளவில் மாறுதல்களைச் செய்திருக்கிறது அந்நிறுவனம்.

வாட்ஸ்அப்

நாம் மெசேஜை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான நேரத்தில் எவ்வித மாறுதல்களும் இல்லை. ஆனால், அதனை எதிர்முனையில் Receive செய்யும் நபர்களின் நேரத்தைப் பொறுத்து சிறியளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக 10 நிமிடங்களுக்கு முன்பு நண்பருக்கு அனுப்பிய மெசேஜை `Delete for Everyone' ஆப்ஷன் மூலம் அழிக்கிறோம் என்றால், அந்த மெசேஜ் நம்முடைய இன்பாக்ஸிலிருந்து அழிவதோடு, நண்பரின் இன்பாக்ஸிலிருந்தும் அழியும். நம்முடைய இன்பாக்ஸிலிருந்து மெசேஜ் அழிவதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், நாம் மெசேஜை திரும்பப்பெறும்போது நண்பரின் மொபைல் ஆன்லைனில் இல்லையெனில், மெசேஜ் உடனடியாக அழியாது. அவர் எப்போது ஆன்லைனுக்கு வருகிறாரோ அப்போதுதான் அழியும். இதற்குக் கால அளவு எதுவும் இல்லை. ஆனால், தற்போது இந்தக் கால அளவை 13 மணி நேரம், 8 நிமிடம், 16 நொடிகளாகக் குறைத்திருக்கிறது வாட்ஸ்அப். ஒருவேளை இந்த 13 மணி நேரத்துக்குள், மெசேஜை அழிப்பதற்கான கோரிக்கை நண்பரின் வாட்ஸ்அப்புக்குச் செல்லவில்லை என்றால் மெசேஜ் அவரின் இன்பாக்ஸிலிருந்து அழிக்கப்படாது. இந்தப் புதிய மாற்றங்கள் கூடியவிரைவில் வாட்ஸ்அப்பில் அப்டேட் ஆகும்.

அதிக வரவேற்பு பெற்ற இந்த வசதியில் எதற்காக வாட்ஸ்அப் இப்படியொரு மாற்றத்தை செய்யவேண்டும். ஏனென்றால், வாட்ஸ்அப் மெசேஜை திரும்பப்பெறுவதற்காக நிர்ணயித்த 1 மணி காலஅளவை பலரும், மொபைலின் நேரம் மற்றும் தேதியை மாற்றி பழைய மெசேஜ்களை அழித்துக்கொண்டிருந்தனர். மொபைல் டேட்டாவை ஆஃப் செய்துவிட்டு, மொபைலின் தேதி அல்லது நேரத்தை மாற்றினால் எளிதாக வாட்ஸ்அப்பை ஏமாற்றி பழைய மெசேஜ்களை அழித்துவிட முடியும். மிக நீண்டநாள்களுக்கு முன்னர் தேதியை மாற்றினால் மட்டுமே வாட்ஸ்அப் நம்மைக் கண்டறிந்து தடுக்கும். இல்லையெனில் அழித்துவிடலாம். இதைத் தடுப்பதற்காகத்தான் இந்தப் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது வாட்ஸ்அப். விரைவில் இந்த அப்டேட் அனைவருக்கும் வரும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க