வெளியிடப்பட்ட நேரம்: 12:48 (17/10/2018)

கடைசி தொடர்பு:12:48 (17/10/2018)

அப்போ கேமரா... இப்போ ஸ்மார்ட் டிவி... கோடக் மீண்டு சாதித்த கதை! #VikatanExclusive

6 வருடங்களுக்கு முன்பு திவாலான கோடக் நிறுவனம், இன்று இந்திய ஸ்மார்ட் டிவி மார்க்கெட்டில் டாப் 5-ல் இருக்கிறது. எப்படிச் சாத்தியமானது இந்த வளர்ச்சி?

அப்போ கேமரா... இப்போ ஸ்மார்ட் டிவி... கோடக் மீண்டு சாதித்த கதை! #VikatanExclusive

மர்ஜீத் சிங் மார்வா; 1990-களில் பிளாஸ்டிக் மோல்டிங் செய்யும் ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறார். ஆரம்பத்தில் பிரபல நிறுவனங்களின் டிவிகளுக்கான பிளாஸ்டிக் மோல்டிங்குகளை செய்துவந்த மார்வா பின்னர் சொந்தமாக CRT டிவிக்களையே தயாரிக்கத் தொடங்கினார். கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியில் தொடங்கிய இந்த டிவி பிசினஸ் வண்ணத்தொலைக்காட்சி வரைக்கும் பிரச்னையின்றியே சென்று கொண்டிருந்தது. சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிட் (SPPL) என்ற அந்நிறுவனம், இந்திய டிவி பிசினஸில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவந்தபோது, சந்தையில் திடீரென ஓர் அலை அடித்தது. அதன் பெயர் LCD. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் பழைய CRT டிவிக்களை விடுத்து, LCD டிவி பக்கம் திரும்பிக்கொண்டிருந்தனர். வேறுவழியின்றி மார்வாவும் LCD பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார். அந்த அலையில் SPPL (Super Plastronics Pvt. Ltd.) எப்படியோ கரைசேர்ந்துவிட்டது. ஆனால், அதோடு அந்த அலை அவர்களை விட்டுவிடவில்லை. மீண்டும் ஓர் அலை அடித்தது. 


2017-ல் ஆக்ஸ்போர்டு அகராதி புதிய ஒரு பதத்தை தன்னோடு இணைத்துக்கொண்டது. அது கோடக் மொமன்ட் (Kodak Moment). புகைப்படங்களோடு சேர்த்து நினைவுகூரத்தக்கத் தருணம் என அதற்கு விளக்கம் சொன்னது ஆக்ஸ்போர்டு. ஆனால், இந்த கோடக் மொமன்ட்டிற்கு 2012-ற்கு முன்புவரைக்கும் அர்த்தமே வேறு. 1880-களில் முதன்முதலில் ஈஸ்ட்மேனின் கேமரா ரோலுக்குள் எப்போது புகைப்படம் பதிந்ததோ, அன்று தொடங்கியது இந்த கோடக் மொமன்ட்டின் வரலாறு. கடந்த நூற்றாண்டு முழுவதும் கேமராக்கள் என்றால் கோடக்தான். கோடக் என்றால் கேமராதான். கோடக் ஃபிலிம்மில் கேமராக்கள் க்ளிக்கிய அத்தனை மொமன்ட்களுமே கோடக் மொமன்ட்கள்தாம். ஒரு நூற்றாண்டு முழுக்கப் புகைப்படத் தொழில்நுட்பத்தில் ஆட்சி செய்த அந்நிறுவனம், காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளாததால் 2012-ல் திவாலானது. கடும் போராட்டங்களுக்குப் பின்னர் அதிலிருந்து வெளிவந்தது. எத்தனையோ மக்களின் மகிழ்ச்சித் தருணங்களை பதிவுசெய்த கோடக்கின் கடைசி தருணம் இப்படிச் சோகமாய் முடிந்தது. அதன் பாஷையிலேயே சொல்லவேண்டுமென்றால் அது ஒரு சோகமான கோடக் மொமன்ட்!


LCD, LED என டிவி தொழில்நுட்பங்கள் மாறியபோதும் மார்வாவுக்குப் பெரிய பிரச்னைகள் இல்லை. சந்தைக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டே இருந்தார். ஆனால், 2010-க்குப் பிறகு பிரச்னை வேறு ரூபத்தில் வந்தது. அதன் பெயர் வெளிநாட்டு கம்பெனிகள். அதுவரைக்கும் இந்திய டிவிக்களையே அதிகம் வாங்கிக்கொண்டிருந்த மக்கள், திடீரென வெளிநாட்டு கம்பெனிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். LED டிவிக்களில் சாம்சங், LG, சோனி போன்ற நிறுவனங்கள் புதுப்புது தொழில்நுட்பங்கள் மூலம் மிக எளிதில் மக்களைக் கவர்ந்தனர். என்ன செய்தாலும் அவர்களின் அருகில்கூட மார்வாவால் நெருங்க முடியவில்லை. அந்தச் சமயம்தான் அமர்ஜீத் சிங் மார்வாவின் மகன் அவ்னீத் சிங் SPPL-க்குள் நுழைகிறார். அப்போது அவ்னீத் சிங்கிற்கு சாதகமாக சில அம்சங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று, சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸின் உற்பத்தித் திறன். ஜம்மு, உனா, நொய்டா என மொத்தம் 3 இடங்களில் அந்நிறுவனத்துக்குச் சொந்தமாக உற்பத்தி நிலையங்கள் இருந்தன. இன்டக்ஸ், டி-சீரிஸ், ஜெப்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்களின் தொழில்நுட்பத்துக்கேற்ப டிவி தயாரிக்கும் ஆர்டர்களும் மார்வாவின் வசமே இருந்தன. இதுபோக சொந்த டிவி பிராண்டாக பெல்டெக், குரோன் போன்றவையும் விற்பனையில் இருந்தன. ஆனால், இவற்றால் என்ன செய்தாலும் குறிப்பிட்ட அளவைத்தாண்டி லாபம் ஈட்டமுடியவில்லை. தரத்தில் என்னதான் இணையாக இருந்தாலும்கூட, பிரபல கொரிய ஜப்பான் நிறுவனங்களுடன் போட்டி போடமுடியவில்லை. இவ்வளவு பெரிய நிறுவனத்தைக் குறைவான லாபத்தோடு நீண்டகாலம் ஓட்டமுடியாது. வெளிநாட்டு நிறுவனங்களோடு போட்டிபோட்டு குறைவான விலைக்கும் டிவிக்களை ஓட்டமுடியாது. சந்தையில் இருத்தலியலுக்கான பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக அவ்னீத் சிங் மார்வாவை அசைக்கத் தொடங்கின. 

அவ்னீத் சிங் மார்வா - கோடக் டிவி

ஷ்டத்தை சமாளிக்க கோடக் நிறுவனம் தன்னுடைய காப்புரிமைகளையெல்லாம் விற்றுக்கொண்டிருந்தது. அடுத்தகட்டமாக பிராண்ட் லைசென்சிங் முறைக்கு வந்தது. அதாவது, உலகில் எந்தவொரு நிறுவனமும் தன்னுடைய பொருள்களில் கோடக்கின் பெயர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு கோடக்கிடம் உரிய பணம் கொடுத்து அனுமதி வாங்கவேண்டும். டிஜிட்டல் இமேஜிங்குடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் கோடக்கின் பெயர் பொருந்தும். எனவே அவர்களிடம் எளிதில் கோடக் பெயரை விற்றுவிடலாம். நினைத்தது போலவே சில நிறுவனங்கள் கோடக் பெயரைப் பயன்படுத்த முன்வந்தன. 2016-ல் கோடக் நிறுவனம் எக்ட்ரா எனும் கேமரா ஸ்பெஷல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அது இதேபோல பிராண்ட் லைசென்சிங் முறையில் புல்லிட் எனும் நிறுவனத்தோடு இணைந்து உருவாக்கியதுதான். அதற்குப் பிறகு கோடக் டேப்லட் ஒன்றையும் அறிமுகம் செய்தது. கோடக்கின் இந்த பிராண்ட் லைசென்சிங் முறை பிடித்து, தன் நிறுவனத்துக்கும் லைசென்ஸ் வாங்குவதற்காக இந்தியர் ஒருவர் கோடக்கின் நியூயார்க் அலுவலகத்துக்குச் செல்கிறார். கோடக்கின் நிர்வாகிகள் சிலரிடம் பேசுகிறார். பேசிய அந்த நபரைத் தவிர, வேறு யாருக்குமே அவர் சொன்ன கருத்தின்மீது நம்பிக்கை இல்லை. 

``கோடக் ஒரு கேமரா நிறுவனம்; ஒரு டிவி நிறுவனத்துக்கு கோடக் என்ற பெயர் எப்படிப் பொருந்தும்?"

``அதெல்லாம் நிச்சயம் சரியாக இருக்கும். வேண்டுமானால் என்னுடைய டிவி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ஒருமுறை வந்துபாருங்கள். நான் சொல்வது மீது உங்களுக்கு நம்பிக்கை வரும்" எனச் சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார் அந்த இளைஞர். அப்போது அவர் முன் இருந்த நம்பிக்கைகளில் கோடக்கும் ஒன்று.


வ்னீத் சிங்கிற்கு பிரச்னையெல்லாம் தொழில்நுட்பங்களோ, முதலீடோ அல்ல; ஒரே ஒரு பெயர். ஒரே ஒரு சர்வதேச பெயர். ``இப்போதே ஆயிரக்கணக்கில் டிவிக்களை விற்கிறோம். தரமாகத்தான் இருக்கின்றன; எந்தப் பிரச்னைகளும் வருவதில்லை. வந்தாலும் அதை சரிசெய்துகொடுக்க நாடு முழுக்க சர்வீஸ் சென்டர்கள் இருக்கின்றன. இவ்வளவு இருந்தும், நம்முடைய டிவி ஏன் மக்களைச் சென்றடையவில்லை? காரணம், உள்ளூர் பிராண்ட்களை மக்கள் விரும்புவதில்லை." 

மார்வாவுக்கு இதுதான் பிரச்னை எனத் தெரிகிறது. கோடக்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கமுடியும் எனப் புரிகிறது. நேரடியாக அமெரிக்காவே சென்று பேசிப்பார்த்தாயிற்று. இனி கோடக்தான் அனைத்தையும் முடிவுசெய்யவேண்டும். 2016-ல் கோடக் அதிகாரிகள், இந்தியாவுக்கு வந்து மார்வாவின் டிவி தொழிற்சாலைகளைப் பார்வையிடுகின்றனர்; நம்பிக்கை வருகிறது. லைசென்ஸ் கிடைக்கிறது. சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸ் மற்றும் கோடக், இரண்டு நிறுவனங்களுக்கும் இந்தியாவில் இரண்டாவது இன்னிங்க்ஸ் இங்கிருந்துதான் தொடங்குகிறது. இந்த ஒரு விஷயத்திற்குத்தானே இவ்வளவு நாளாகக் காத்திருந்தார் மார்வா; அது கிடைத்துவிட்டது. எம்.பி.ஏ மூளை அத்தோடு நின்றுவிடவில்லை. வெளிநாட்டு நிறுவனங்களை அசைத்துப்பார்க்கும் சாவி இந்தமுறை மார்வாவுக்கும் கிடைக்கிறது. அதன் பெயர் இ-காமர்ஸ். 

லைசென்ஸ் கிடைத்த கையோடு சென்று, ஃப்ளிப்கார்ட்டிடம் ஒப்பந்தம் போடுகிறார் மார்வா. 2017 பிக் பில்லியன் டே தொடங்குகிறது. சாம்சங், எல்.ஜி, சோனி என எல்லா நிறுவனங்களின் டிவிக்களும் விற்பனைக்கு இருக்கின்றன. கூடவே மார்வாவின் கோடக் டிவியும் இருக்கிறது. LG, சாம்சங் போன்றவற்றில் 43 இன்ச் டிவிக்கள் 37,000 ரூபாய் என்றால், கோடக் டிவியின் விலை 17,000 ரூபாயில் இருக்கும். பிற நிறுவனங்களில் 49 இன்ச் டிவிக்கள் 50,000 ரூபாயில் இருந்தால், கோடக்கோ 25,000 ரூபாயில் இருக்கும். அதற்கு முன்புவரை அந்நிறுவனங்களின் டிவிக்களை வாங்கியவர்களில் பலர் திடீரென கோடக் பக்கம் சாய்ந்தனர். ``கம்மி விலை; நல்ல கம்பெனி; வேறென்ன வேண்டும்?" என்றனர். மார்வா நினைத்தது நடந்தது. கோடக் இதுவரைக்கும் டிவிக்களையே தயாரிக்காத கம்பெனி என்பது பலருக்கும் தெரியாத உண்மை. விளைவு, பிக் பில்லியன் டேயின் இறுதியில் ஃப்ளிப்கார்ட்டில் விற்ற டாப் 3 டிவிக்களின் பட்டியலில் இடம்பிடித்தது கோடக். 

Avneet singh marwah

உள்ளூர் டெக்னாலஜி, வெளிநாட்டு பிராண்ட் என்ற இந்த ஃபார்முலா சக்சஸ் ஆகவே, இந்த வருடம் பிரபல தாம்சன் நிறுவனத்திடமும் பிராண்ட் லைசென்ஸ் வாங்கிவிட்டார் அவ்னீத் சிங் மார்வா. இப்போது தாம்சன் மற்றும் கோடக் ஆகிய இரண்டின் இந்திய பிராண்ட் லைசென்சும் மார்வாவின் வசம்தான். இருந்ததற்கான தடமே இல்லாமல் இருந்த கோடக்கிற்கு, இந்தியாவில் இது எதிர்பாராத வெற்றி. ஒரு பிசினஸை ஸ்மார்ட்டாக மாற்றலாம் என்பதற்கு சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸ் மற்றும் கோடக்கின் கதையே சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். கடந்த ஆண்டு வரை சுபமாகப் போய்க்கொண்டிருந்த கோடக் டிவிகளுக்கு இந்த ஆண்டு அவ்வளவு எளிதாக இல்லை. 2020-ம் ஆண்டுக்குள் 1,000 கோடி ரூபாய் கம்பெனியாக தன் நிறுவனத்தை மாற்றவேண்டும் என்பதுதான் மார்வாவின் இலக்கு. ஆனால், அதற்கு கடும் சவால் அளிக்கின்றனர் புதிய போட்டியாளர்கள்.

அதுவும் இந்த ஆண்டு ஷாப்பிங் சீசனில் புதுவரவாக வந்தவை எம்.ஐ.டிவிக்கள். எப்படி கோடக் டிவி விளம்பரம், ஆஃப்லைன் ஸ்டோர்கள் எதுவுமின்றியே ஜெயித்ததோ, அதேபோலத்தான் எம்.ஐ.,யும். சொல்லப்போனால் மொபைல் சந்தையில் இந்த விஷயத்தில் பழம் தின்று கொட்டைபோட்ட நிறுவனம். இதுபோக ஃப்ளிப்கார்ட்டும் தன்பங்கிற்கு இன்ஹவுஸ் பிராண்டாக MarQ எனும் நிறுவனத்தை இறக்கியிருக்கிறது. இதுவும் பட்ஜெட்டிற்குள் அடங்கும் டிவி என்பதால் கூடுதல் சவால். இதையெல்லாம் எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவ்னீத் சிங்கிடம் பேசினேன்.

``சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸின் பெல்டெக் டிவிகள் இப்போதும் சந்தையில் கிடைக்கின்றன. அதற்கும் புதிய கோடக் டிவிகளுக்கும் என்ன வித்தியாசம்?"

``தரத்தைப் பொறுத்தவரை இரண்டிலும் எவ்வித வேறுபாடும் இருக்காது. ஆனால், தன்மைகள் கொஞ்சம் மாறுபடும். கோடக் டிவிகளில் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் 4K டிவிகளை மட்டுமே தயாரிக்கிறோம். இந்த டிவிகளுக்கான தரத்தை கோடக் நிறுவனத்தோடு சேர்ந்து நிர்ணயம் செய்கிறோம். எனவே, இவை உலகத்தரத்தில் இருக்கும். எங்கள் பிராண்ட்களில் சாதாரண LED டிவிக்களை மட்டுமே தயாரிக்கிறோம். இதற்காக நாங்கள் தனி தரநிர்ணயங்களை வைத்திருக்கிறோம். அதற்கேற்ற தரத்துடன் இவை இருக்கும். மேலும், கோடக் டிவிகளில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களில் பலவும் அவற்றிற்காகப் பிரத்தியேக லைசென்ஸ் பெற்றவை. எனவே அவற்றை எங்கள் பிராண்ட் டிவிகளில் பயன்படுத்த முடியாது."

அவ்னீத் சிங் மார்வா

``ஒரு டிவி நிறுவனத்துக்கு எதற்காக ஒரு கேமரா நிறுவனத்தைத் தேர்வு செய்தீர்கள்? 

``டிவி உற்பத்தியில் நாங்கள் 25 ஆண்டுகளுக்கும் மேல் ஈடுபட்டு வருகிறோம். எனவே டிவிகளைப் பொறுத்தவரை அவை எங்கள் ரத்தத்திலேயே ஊறியவை. நாடு முழுக்க 28 அலுவலகங்களையும், 350 சர்வீஸ் சென்டர்களையும் வைத்திருக்கிறோம். 3 முன்னணி நிறுவனங்களுக்கு டிவிக்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறோம். டிவி விஷயத்தில் இவ்வளவு அனுபவம் பெற்ற எங்களுக்கு ஒரு சர்வதேச நிறுவனத்தின் பெயர் இருந்தால், அது உதவியாக இருக்கும் என நினைத்தேன். உலகளவில் 130 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து நின்ற எலெக்ட்ரானிக் நிறுவனங்கள் மிகச் சொற்பம். அவற்றுள் கோடக்கும் ஒன்று. கோடக் என்ற பெயரைக் கேட்டாலே அதன் தரமும், அவற்றின் கேமராக்களும், நாஸ்டால்ஜியா நினைவுகளும்தான் மனதில் தோன்றும். மேலும் கோடக் என்றால் டிஜிட்டல் இமேஜ் என்பதை டிஜிட்டல் ஸ்க்ரீனாக மாற்றினால் நிச்சயம் பலனளிக்கும் என நினைத்தேன். அப்படித்தான் கோடக்கை தேர்வு செய்தேன்."

``கோடக்கிற்கு தனித்துவமான பெயர் உண்டு. அப்படி கோடக் டிவிக்கு என ஏதேனும் தனித்துவம் உண்டா? உங்களின் USP என்ன?"

``ஆரம்பத்தில் எங்களின் வாடிக்கையாளர்கள் அனைவருமே ஆன்லைன் வாடிக்கையாளர்கள்தான். அவர்கள் மற்ற டிவிகளோடு ஒப்பிடும்போது சரியான விலைக்கு, தரமான டிவிக்களாக கோடக் டிவிகள் தெரியவேண்டும் என்பதே எங்கள் இலக்கு. அதில் நாங்கள் வெற்றியும் பெற்றுவிட்டோம். மார்க்கெட்டிங், விளம்பரங்கள் போன்றவற்றில் நாங்கள் செலவு செய்யாததால் மற்றவர்களை விடவும் குறைவான விலைக்கு எங்களால் டிவிக்களை தரமுடிகிறது. சிலர் கோடக் டிவியை விலை குறைவான டிவி எனச் சொல்வார்கள். ஆனால், நான் சரியான விலையில், சரியான வசதிகளோடு கிடைக்கும் டிவி என்றுதான் சொல்வேன். இத்தனைக்கும் மற்ற நிறுவனங்களின் டிவிக்களில் இருக்கும் தொழில்நுட்பங்களுக்கும், எங்களின் டிவியில் இருக்கும் தொழில்நுட்பங்களுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது. விலை மட்டும்தான் மாறும். இந்த ஃபார்முலாதான் எங்களை மிக விரைவில் இந்தியாவின் மதிப்புமிக்க டிவி பிராண்ட்டாக மாற்றியிருப்பதால், இதைத்தான் தனித்துவம் என நினைக்கிறேன்"

``ஆன்லைன் தாண்டியும் கோடக் டிவிக்கு இதேபோல வரவேற்பு இருக்குமா?"

``நிச்சயமாக; அங்கேயும் கோடக் டிவி கோடக் டிவிதானே? இப்போதே நாட்டின் முன்னணி கடைகள் பலவற்றிலும் எங்கள் டிவிகள் கிடைக்கின்றன. மொத்தம் 14,000 பின்கோடுகளில் எங்கள் டிவிக்கள் கிடைக்கின்றன. இன்னுமேகூட மக்களில் பலர் ஆன்லைனில் டிவிக்களை வாங்குவதை விரும்புவதில்லை. நேரில் பார்த்து வாங்குவதைத்தான் விரும்புகின்றனர். அவர்களுக்காகத்தான் ஆஃப்லைனிலும் விற்கிறோம். விரைவில் அங்கேயும் மக்கள் எங்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் என நம்புகிறேன். இப்போது 8 மாநிலங்களில் மட்டும் இருக்கும் எங்கள் விற்பனையை, அடுத்த 3 வருடத்தில் 18 - 19 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்."

``உள்நாட்டு நிறுவனத்தை நடத்துவதற்கும், பிராண்ட் லைசென்சிங் நிறுவனத்தை நடத்துவதற்கும் என்னென்ன வேறுபாடுகள், சவால்கள் இருக்கின்றன?"

``எனக்கு இதுவரைக்கும் சவால்களை விடவும், நல்ல விஷயங்கள் நிறைய நடந்திருக்கின்றன. பெரிய மல்ட்டிநேஷனல் நிறுவனங்களோடு இணைந்து பணிபுரியும்போது நிறைய விதிமுறைகள், கட்டுப்பாடுகள் போன்றவற்றைப் பின்பற்ற வேண்டியிருக்கும். அவையெல்லாம்தான் சவால்கள். ஆனால், அதைத்தாண்டி நிறைய நல்ல நல்ல விஷயங்களும் இருக்கின்றன. பெரிய நிறுவனங்களோடு இணைந்து பணிபுரியும்போது, பெரியளவிலான ஆர்டர்களை எளிதில் பெறமுடியும். பிசினஸை எளிதாகப் பெரியளவில் கொண்டுசெல்ல முடியும். மேலும், நாமே சொந்தமாக ஒரு நிறுவனம் நடத்தினால், நிறைய தவறுகள் செய்து அதன்பிறகு பாடம் கற்றுக்கொள்வோம். அதுவே மல்ட்டிநேஷனல் நிறுவனங்களோடு இணைந்து இயங்கினால், செய்யும் தவறுகளின் எண்ணிக்கை குறையும். அவ்வளவுதான்"

சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸ்

``கோடக் டிவிகளைப் போலவே, தற்போது இந்தியாவில் பிராண்ட் லைசென்சிங் பிசினஸ் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

``ஒரு பெரிய பிராண்டாக இருந்தாலும்கூட, டிவி போன்ற கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக் பிசினஸை அவ்வளவு எளிதாக நடத்திவிட முடியாது. ஆன்லைனில்தானே டிவி விற்கிறார்கள் எனப் பார்க்க எளிதாகத் தோன்றலாம். ஆனால், இதற்குப் பின்பு தெளிவான திட்டமிடுதல்கள் இருக்கின்றன. பல்லாண்டு கால உழைப்பு இருக்கிறது. எங்களின் உற்பத்தி தொழிற்சாலை, சேவை மையங்கள் இவையனைத்தும் இணைந்துதான் எங்கள் நிறுவனம். இதேபோல பிராண்ட் லைசென்ஸ் பெறும் அனைத்து நிறுவனங்களுமே வலுவான அடித்தளத்துடனும், வணிக நெட்வொர்க்குடனும் இயங்கவேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும்."

``கடந்த ஆண்டை விடவும், இந்த வருடம் ஆன்லைன் டிவி மார்க்கெட்டில் போட்டி அதிகரித்திருக்கிறதே?"

``மற்ற நிறுவனங்கள் பற்றி எதுவும் கூறமுடியாது. ஆனால், இந்த வருடம் எங்களின் விற்பனை நிச்சயம் 30 முதல் 40 சதவிகிதம் வரை உயரும் என்பது மட்டும் உறுதி. இவ்வளவு போட்டிகளுக்குப் பின்பும்கூட, இந்த ஆண்டு பிக் பில்லியன் டேவில் டாப் 5 டிவி பிராண்ட்களில் ஒன்றாக வந்திருக்கிறோம். இப்போதும்கூட மற்ற டிவிக்களோடு விலையிலும், தொழில்நுட்பத்திலும் போட்டிபோடும் வகையில்தான் இருக்கிறோம். எனவே, ஆண்டுதோறும் எங்களின் வருமானம் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும்."

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்