வெளியிடப்பட்ட நேரம்: 19:04 (21/10/2018)

கடைசி தொடர்பு:19:04 (21/10/2018)

LCD முதல் AMOLED வரை... மொபைல் டிஸ்ப்ளேக்களில் என்ன ஸ்பெஷல்?

இவற்றில் உங்கள் மொபைலில் இருக்கும் டிஸ்ப்ளே எந்தவகை?

LCD முதல் AMOLED வரை... மொபைல் டிஸ்ப்ளேக்களில் என்ன ஸ்பெஷல்?

ரு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் நாம் பார்க்கும் முதல் விஷயம் அதன் டிஸ்ப்ளேதான். ஸ்மார்ட்போனின் அளவு தொடங்கி விலை வரை அனைத்திலுமே டிஸ்ப்ளேவின் பங்கு அதிகமாக இருக்கும். ஆனால் அப்படி வாங்கும் போது நாம் கவனிக்க மறக்கும் ஒரு விஷயம் அதன் என்ன  வகை டிஸ்ப்ளே என்பதை. நம்மில் பெரும்பாலோனோருக்கு அவற்றில் பல வகை இருப்பது தெரியாது, மேலோட்டமாக அளவை மட்டுமே பார்த்துவிட்டு ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு முடிவு செய்து விடுவோம். ஸ்மார்ட்போன்களில் பல வகையான டிஸ்ப்ளே வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதன் பயன்கள் என்ன, ஒரு மொபைல் வாங்கும் போது எதற்காக அதன் வகையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

சந்தையில் இருக்கும் டிஸ்ப்ளே வகைகளைக் கணக்கிட்டால் அவற்றில் பெரும்பகுதி LCD மற்றும் LED என்ற இரண்டு பெரிய தொழில்நுட்பங்களின் கீழ் தயாரிக்கப்படுபவையாகத்தான் இருக்கும். இந்த இரண்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித்தான் பரவலாக மொபைல் டிஸ்ப்ளேக்கள் உருவாக்கப்படுகின்றன.

LCD வகை டிஸ்ப்ளே

LCD

இன்றைக்குச் சந்தையில் இருக்கும் 95 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மொபைல்களில் பயன்படுத்தப்படுவது இந்த வகைதான். இந்தத் தொழில்நுட்பத்தில் பல வகையான திரைகள் உருவாக்கப்படுகின்றன. அதில் முதலாவதாக TFT-யை எடுத்துக்கொள்ளலாம். Thin Film Transistor என்பதன் சுருக்கமே TFT. ஒரு எட்டு வருடங்களுக்கு முன்னால் ஸ்மார்ட்போன்கள் பரவலாகத் தொடங்கிய காலகட்டத்தில் TFT டிஸ்ப்ளேக்களே பெரும்பாலான போன்களில் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் தயாரிப்பு செலவு குறைவு என்பது இதன் ப்ளஸ். ஆனால் அதைத் தவிர இதில் இரண்டு மிகப்பெரிய குறைகள் இருந்தன. ஒன்று இவை அதிகமாக மின்சாரத்தைச் செலவழிக்கும் மற்றொன்று இதன் பார்க்கும் கோணம். மொபைலை சற்று சாய்த்து பார்த்தால் கூட காட்சிகளை தெளிவாகப் பார்க்க முடியாது. எனவே இதைப் பயன்படுத்துவதை மொபைல் தயாரிப்பாளர்கள் குறைத்துக்கொள்ளத் தொடங்கினார்கள். இப்பொழுது TFT டிஸ்ப்ளே பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களைப் பார்ப்பது அரிது.

அடுத்ததாக IPS LCD (In-Place Switching) வகை டிஸ்ப்ளே. இப்பொழுது சந்தையில் கிடைக்கும் பரவலான மொபைல்கள் இதைப் பயன்படுத்துபவைதான். TFT டிஸ்ப்ளேக்களுடன் ஒப்பிடும்போது குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துவது, பார்க்கும் கோணம் அதிகமாக இருப்பது எனப் பல விதங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த வகை டிஸ்ப்ளேக்களைத்தான் ஆப்பிள் நிறுவனம் ரெட்டினா டிஸ்ப்ளே எனப் பெயர் மாற்றம் செய்து தனது ஐபோன்களில் பயன்படுத்துகிறது. அடுத்ததாக தற்பொழுது சில ஸ்மார்ட்போன்களில் LTPS LCD வகை டிஸ்ப்ளே பயன்படுத்தப்படுகிறது. இவை மற்ற LCD வகை டிஸ்ப்ளேக்களை விடவும் சிறப்பான நிறச்செறிவு, காட்சித் தரம் ஆகியவற்றைத் தரக்கூடியது.

LED வகை டிஸ்ப்ளே

LED வகை டிஸ்ப்ளே

மொபைல் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றது LED வகை டிஸ்ப்ளேக்கள்தான். சந்தையில் இதைப் பயன்படுத்தும் மொபைல்கள் குறைவாகவே இருக்கின்றன. இதில் பரவலாகப் பயன்படுத்தப்படும் வகை OLED ( Organic Light-Emitting Diode). OLED என்ற பிரிவின் கீழ்தான் பல வகை டிஸ்ப்ளேக்கள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக Super AMOLED டிஸ்ப்ளே. சாம்சங் நிறுவனம் இதைத் தயாரிக்கிறது, அதை தன் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துவது மட்டுமின்றி பிற மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அளிக்கிறது. ஆப்பிள் கூட சாம்சங்கிடம் இருந்து Super AMOLED டிஸ்ப்ளேவை வாங்கி ஐபோன்களில் பயன்படுத்துகிறது. ஆனால் இவற்றின் தயாரிப்பு செலவு மிகவும் அதிகம். எனவே விலை அதிகமான ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. சாம்சங் நிறுவனம் மட்டுமே பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான ஸ்மார்ட்போன்களில் கூட Super AMOLED டிஸ்ப்ளேவைப் பயன்படுத்துகிறது. அதிகமான அளவில் உற்பத்தி செய்யும் திறன் சாம்சங்கிற்கு இருப்பதுதான் அதற்குக் காரணம்.

LCD போல இல்லாமல் இவை செயல்படும் விதமே முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். LCD-யை எடுத்துக்கொண்டால் ஒரு காட்சி தெரிய வேண்டும் என்றால் அதன் முழுப் பகுதியும் இயங்க வேண்டியிருக்கும். ஆனால் LED-யில் அப்படிக் கிடையாது. LED-யில் ஒவ்வொரு பிக்ஸல்களுமே அதற்கான LED பகுதியைக் கொண்டிருப்பதால் அவை தனித் தனியாக ஒளிரும் திறன் கொண்டவை. எந்தக் காட்சி தெரிய வேண்டுமோ அந்தப் பகுதியில் இருக்கும் LED மட்டுமே ஒளிரும் மற்றவை அணைந்தே இருக்கும். எனவேதான் இதன் மூலமாக அதிக பிரகாசம், மிகத் துல்லியமாக காட்சி, நிறம் என அனைத்தையும் பெற முடிகிறது. மேலும் இது மின்சாரத்தைக் குறைவாகவே பயன்படுத்தும்.இதன் மூலமாகச் சூரிய ஒளியில்கூட திரையை தெளிவாகப் பார்க்க முடியும்.

எந்த வகை டிஸ்ப்ளே சிறந்தது 

LCD-யா அல்லது LED -யா என்று பார்த்தால் அனைத்து விதத்திலும் LED வகை டிஸ்ப்ளேவே சிறந்ததாக இருக்கும். ஆனால் அதன் தயாரிப்பு செலவு சற்று அதிகம் என்பதால் அதைப் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனும் விலை உயர்வாகவே இருக்கும். எனவே பட்ஜெட் மொபைலிலோ அல்லது மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களிலோ AMOLED - வை எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில் ஸ்மார்ட்போனுக்கு அதிகமாகச் செலவு செய்வதற்கு முடிவு செய்து விட்டால் LED டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்து வாங்குவது அவசியம். குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் என்றால் IPS LCD அல்லது LTPS LCD வகை இருக்கும் ஸ்மார்ட்போன்களை வாங்குவது நல்லது. இதில் மறக்காமல் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றும் இருக்கிறது. LCD வகை டிஸ்ப்ளேக்கள் உடைந்து விட்டால் அதை மாற்றுவதற்குக் குறைவாகவே செலவாகும். ஆனால் LED டிஸ்ப்ளேக்களை மாற்ற வேண்டும் என்றால் செலவு அதிகமாக இருக்கும். எனவே அதையும் முக்கியமாகக் கவனத்தில் கொள்வது நல்லது.